ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாதம் அவகாசம் - ஜெ.மரணத்தில் உள்ள மர்மம் விலகுவது எப்போது
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில் 12வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அதற்கு முன்பு சுமார் 75 நாட்கள் வரை அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அதிமுக அரசு அமைத்தது.
லாக்-அப் மரணங்களை தடுக்க காவல்துறை புகார் ஆணையம்.. நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
இதையடுத்து, விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது.

கால அவகாசம் நீட்டிப்பு
விசாரணை கமிஷன் தொடங்கப்பட்ட போது, 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடபட்டிருந்தது. ஆனால் அடுத்தடுத்து ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்ததே தவிர, இன்னமும் விசாரணை கமிஷனின் விசாரணை முடிந்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.
அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என, 154 பேரிடம் ஆணையம் தீவிர விசாரணை நடத்தியது.

காலதாமதம் ஏன்
மருத்துவ குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளது அப்பல்லோ மருத்துவமனை. இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். பல சட்ட சிக்கல்களால் விசாரணையும் காலதாமதம் ஆனது. 11முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையம் தொடர உத்தரவு
இதனிடையே இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் தொடரலாம் என்று தெரிவித்தது. ஆணையத்திற்கு உதவ மருத்துவர்களைத் தேர்வுசெய்ய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அறிவுறுத்தியுள்ளது.விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய அப்போலோவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுமட்டுமின்றி அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆணையம் விசாரிக்க விரும்பினால் விசாரிக்கலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

12வது முறை அவகாசம் நீட்டிப்பு
ஆறுமுக சாமி ஆணையத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து காலநீட்டிப்பு செய்து வருகிறது. இதுவரை 11 முறை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில் மேலும் 5 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 12வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மர்மம் எப்போது விலகும்
ஆறுமுகசாமி ஆணையத்திற்காக இதுவரை அரசு 3 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதாக சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மரணமடைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ள அதிமுகவினர் மட்டுமல்ல தமிழக மக்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆறுமுகசாமி ஆணையம் விறுவிறுப்பாக விசாரணை நடத்தில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.