ஜெயலலிதா நினைவு தினம் அதிமுகவினர் அஞ்சலி - 6 மணிக்கு விளக்கேற்ற ஓபிஎஸ் ஈபிஎஸ் அழைப்பு
சென்னை: இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதா மறைந்த நாளில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை 6 மணி அளவில் விளக்கேற்றி வைப்வோம் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளனர்.


தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதல்வர் என தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவியாக இரும்பு பெண்மணியாக உலா வந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ஜெயலலிதா நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இதில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் உடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார். சினிமாவை விட்டு விலகி அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா, அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

1989 சட்ட சபை தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறை எம்.எல்.ஏ வாக சட்டசபைக்குள் நுழைந்தார். அத்துடன், தமிழக சட்டப் சபையில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். இதையடுத்து, 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கவே, முதல்முறை முதல்வராக பதவியேற்றார்.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் சறுக்கலை சந்தித்தாலும் தொடர்ந்து தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக விளங்கினார். 2014 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 38 வயதில் வெற்றிபெற்று, லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சியாக செயல்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றிபெற்று, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைத்து சாதனை படைத்தது. அத்துடன், 6வது முறை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் ஜெயலலிதா. உடல் நலக்குறைவால் 2016 செப்டம்பர் 23ஆம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இன்றைய நாளில் ஜெயலலிதா தனது 68 வயதில் உயிரிழந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலிலதா நினைவு நாள் தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

டிசம்பர், 5, அதிமுக தொண்டர்களுக்கு கருப்பு நாள். நம்மை வழிநடத்தும் ஜெயலிலதா நம்மைவிட்டு விடைபெற்ற இந்நாளில் தான், அவர் தம் நீங்காத நினைவுகளில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் மட்டுமல்ல, உலக தமிழினமே ஆழ்ந்திருக்கிறது. தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் காவல் நிலையம், பெண் கமாண்டோ படை, தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, விலையில்லா அரிசி, அம்மா உணவகம், மருந்தகம், குடிநீர், தாய்மார்கள் பாலூட்ட தனியறைகள், அளித்தவர். ஜெயலலிதா மறைந்த நாளில் அவர்தம் திருவுருவப் படத்திற்கு மாலை 6 மணி அளவில் விளக்கேற்றி வைப்வோம் என்று குறிப்பிப்பட்டது.