ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது.. அப்பீல் வழக்கில் ஹைகோர்ட் உறுதி.. தீபா ஹேப்பி
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. தனி நீதிபதி உத்தரவு சரி எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ளது. ஜெயலலிதாவின் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையமும் அங்குள்ள அசையும் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு ரூ.67.90 கோடி ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு என வாதங்களை தீபாவும், தீபக்கும் முன்வைத்தனர்.

அரசாணை ரத்து
இதனையடுத்து வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்திருந்தார். உத்தரவு நகல் கிடைத்த 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜயராணி, வேதா நிலையத்தின் சாவியை தீபா, தீபக் ஆகிய இருவரிடமும் வழங்கினார்.

பால்கனியில் போஸ்
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனது அத்தையான முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வீட்டிற்குள் நுழைந்தார் தீபா. வீட்டு சாவியை தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் எனவும் ஜெ.தீபா கூறினார். பால்கனியில் தனது கணவர் மாதவனுடன் நின்று ஜெயலலிதா போலவே போஸ் கொடுத்தார். இது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

ஹைகோர்ட்டில் அப்பீல்
இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கக்கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குக் தொடர்ந்தார். கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி விசாரணையின் போது அதிமுகவுக்கும், போயஸ் கார்டனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும், அதிமுக ஆட்சியின் கொள்கை முடிவு என்பதால் மேல்முறையீடு செய்வதாகவும், எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கபட்டது.

அப்பீல் வழக்கு விசாரணை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அதிமுக சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அன்றே மனுதாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த டிசம்பர் 20ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

நீதிபதிகள் தீர்ப்பு
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குரூப், நிலம் கையகப்படுத்தப்பட்டதில் நடைமுறை தவறுகள் உள்ளதா, பொதுப் பயன்பாடு உள்ளதா, அப்படி பொதுப் பயன்பாடு இருந்தால் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மீண்டும் தொடர அரசுக்கு உத்தரவிடமுடியுமா என்ற கேள்விகள் எழும்பியதாக கூறி அவற்றுற்கு தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

அதிமுக கூறுவதை ஏற்கமுடியாது
அதன்படி நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளை ஆய்வு செய்ததில் தனியார் சொத்து என்ற முறையில் அதன் உரிமையாளரின் கருத்தை கவனத்தில் கொள்ளாமல், அவர்களின் நிலையை ஏற்றுக்கொள்ளாமல் வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில் தவறுகள் நடந்துள்ளது என்ற தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். நிலம் கையகப்படுத்தப்பட்டதில் பொதுப் பயன்பாடு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், ஆட்சியில் இருந்ததால் தீபா, தீபக் ஆகியோரின் வழக்கை எதிர்கொண்டதாகவும், தற்போதைய அரசு மேல்முறையீடு செய்யாததால் நீதிமன்றதை நாடியதாகவும் அதிமுக கூறுவதை ஏற்கமுடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வாரிசுதாரர்களிடம் சாவி
நடைமுறை தவறுகள் உள்ளதாலும், பொதுப் பயன்பாடு இல்லை என்றும், உரிமையாளர் விருப்பத்திற்கு முரணாக கையகப்படுத்தபட்டு உள்ளதாலும், தனி நீதிபதி உத்தரவில் தலையிட அவசியமில்லை என கூறி அதிமுக மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தனி நீதிபதி உத்தரவை ஏற்று வாரிசுதாரர்களிடம் சாவி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கும்படி அரசுக்கு உத்தரவிடுவது முறையாக இருக்காது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெ.தீபா மகிழ்ச்சி
மறைந்த ஜெயலலிதாவிற்கு ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் இரண்டாவதாக ஒன்றை அமைக்க அரசுக்கு உத்தரவிடுவது சட்டபூர்வமாகவோ இருக்காது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற உறுதி செய்துள்ளதால் வேதா இல்லம் ஜெ.தீபாவிற்குத்தான் சொந்தம் என்பது உறுதியாகியுள்ளது. அத்தை ஜெயலலிதாவின் சொத்து கையை விட்டு போகாமல் இருப்பதால் தீபா மகிழ்ச்சியடைந்துள்ளார்.