தமிழக அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது ஏன்?.. பாஜக அண்ணாமலை சொல்லும் காரணம் என்ன?
சென்னை: தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழா ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி அணிவகுப்பு நடத்தப்படும். இதில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.
பாகிஸ்தான்: குண்டுவெடிப்பால் உருக்குலைந்த லாகூர் மார்க்கெட்.. 3 பேர் உயிரிழப்பு.. 20 பேர் படுகாயம்!
இதில் சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்கள், அவர்களின் போராட்டங்கள் குறித்த சிறப்புகளை கூறும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த அலங்கார ஊர்திக்காக 36 மாநிலங்கள் மாடல்களை அனுப்பியிருந்தன. அதில் 12 மாநிலங்களின் மாடல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அலங்கார ஊர்தி
தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழாவில் இடம் பெறுவதற்காக அலங்கார ஊர்தி மாடல் அனுப்பப்பட்டது. அதில் சுதந்திர போராட்டத் தியாகிகளான வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாக கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் பதில்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கூறுகையில் நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சர்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்றார்.

சாதாரண நிகழ்வு
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் தமிழக அரசின் பிரச்சார வாகனம் பங்கேற்காததற்கு காரணம், திமுக அரசின் திறமையின்மை தவிர வேறு காரணம் இல்லை. ஆனால் இந்த சாதாரண நிகழ்வை திசை திருப்ப திமுக அரசு முனைவது வெளிப்படையாகவே தெரிகிறது.

கோட்டா
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட நிலையில் அது தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை பாஜக வரவேற்கிறது என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகனுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் திமுக ஆட்சியை பொருத்தவரை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு கேட்டா வைத்துள்ளார்கள். இந்த மாத கோட்டாவில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் வீட்டில் போய் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். நீதிமன்றம் இருக்கிறது. இவர்கள் அங்கு நிரூபித்து தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டனை பெற்று தரலாம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.