முதலமைச்சர் ஸ்டாலின் எங்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார்! திருமண விழாவில் வருத்தப்பட்ட K.S.அழகிரி!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதை குறைத்துக் கொண்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திருமண விழாவில் வருத்தப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டே கே.எஸ்.அழகிரி இவ்வாறு குறைபட்டுக் கொண்டது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
நண்பர்களோடும், தோழமைக் கட்சிகளோடும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் கொஞ்சம் அதிகமாக பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் கே.எஸ்.அழகிரி.
எந்த பிரதமரும் செய்யாததையா மோடி செய்துவிட்டார்... ஊடகங்கள் தான் அவரை பெரிதுபடுத்துகின்றன -K.s.அழகிரி

டி.கே.எஸ். இல்ல மணவிழா
திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவனின் மகள் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ், பாஜக, உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளில் இருந்தும் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். அந்த விழா மேடையில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முதலமைச்சர் ஸ்டாலின் தங்களோடு பேசுவதை குறைத்துக்கொண்டதாக குறைபட்டுக் கொண்டார்.

குறைத்துப் பேசுகிறார்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கும் வேலைப்பளு காரணமாக அவர் குறைத்துப் பேசுவதில் தவறில்லை என்றாலும் கூட, நண்பர்களோடும், தங்களை போன்ற தோழமைக் கட்சிகளோடு மட்டுமாவது முதல்வர் இன்னும் கொஞ்சம் அதிகம் பேச வேண்டும் என மேடையில் வைத்து வேண்டுகோள் விடுத்தார். இந்தக் கருத்தை பொதுமேடையில் கூற வேண்டும் என்ற அவசியம் தனக்கில்லை என்றாலும் நட்பு கருதி இதனை பேசியதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் கே.எஸ்.அழகிரியிடம் இருந்து வெளிப்பட்டுள்ள இந்த மன வருத்தம், இடப்பங்கீட்டை அடிப்படையாக கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே கே.எஸ்.அழகிரி தன்னை பற்றி குறைப்பட்டுக் கொண்டதற்கு அந்த விழா மேடையிலேயே சுடச்சுட முதல்வர் ஸ்டாலின் பதில் கொடுத்தது கவனிக்கத்தக்கது.

முதலமைச்சர் பொறுப்பு
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை இயல்பாகவே யாரிடமும் அதிகம் பேசமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது முதலமைச்சராக இருக்கும் அவருக்கு பணிச்சுமை கூடியிருப்பதால் பேசுவதை குறைத்துக்கொண்டு செயல்பாடுகளை அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.