கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் - வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்
சென்னை: வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து சென்னை போரூர் தனியார் மருத்துவமனையிலிருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து நலம் விசாரித்தனர்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு விபத்தினால் நடிகர் கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தேர்தல் பிரச்சாரம் செய்த போது நீண்ட தூரம் பயணம் செய்தார். நின்று கொண்டே பேசியதால் அவரின் வலது காலில் வலி ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி நாளில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்ய போவதாக அறிவித்தார். அவர் வெளிநாடு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து சென்னை போரூர் தனியார் மருத்துவமனையிலிருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் சில நாட்கள் ஓய்வு எடுத்த பின்பு, மீண்டும் அரசியல் களத்திற்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கமல்ஹாசனை சந்தித்து பூங்கொத்து கொடுத்து நலம் விசாரித்தனர். மருத்துவமனை வளாகத்தில் கமீலா நாசர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
காரில் இருந்து மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் வருங்கால முதல்வர் என கோசம் எழுப்பினார்கள் இதையடுத்து தொண்டர்கள் நிற்பதை பார்த்த கமல்ஹாசன் காரில் இருந்தபடியே கையசைத்து தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து வீட்டிற்கு சென்றார்.