எனக்கு சூடு ஏறுகிறது.. கோபம் வருகிறது.. தம்பி திருமா.. விசிக குறித்து கமல்ஹாசன் உருக்கம்.. பளீர்!
சென்னை: விசிக கட்சிக்கு திமுக கூட்டணியில் வெறும் 6 தொகுதிகள் கொடுக்கப்பட்டதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டசபை தொகுதிகள் இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் அதிக இடங்களை எதிர்பார்த்த நிலையில் 6 இடங்களை மட்டுமே திமுக ஒதுக்கி இருக்கிறது.
திமுகவின் இந்த முடிவு கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. விசிக கட்சிக்கு உள்ளேயே இதற்கு நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

முடிவு
ஆனால் விசிக பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் முழுமனதோடுதான் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் மடிப்பாக்கத்தில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விசிக - திமுக கூட்டணி குறித்து கமல்ஹாசன் பேசினார். மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு விசிக வரவேண்டும் என்று கமல்ஹாசன் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

கமல் பேச்சு
கமல்ஹாசன் தனது பேச்சில் இவ்வளவு சமூக நீதி பேசுகிறார்களே, என் தம்பி திருமாவளவனுக்கு முதலில் 21 இடங்கள் கொடுத்தார்கள், பிறகு 10 இடங்கள் கொடுத்தார்கள், இப்போது வெறும் 6 இடங்கள் கொடுத்துள்ளனர். எதிர்காலத்தில் எத்தனை இடங்கள் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. எங்கே கொண்டு என் தம்பியை வைப்பார்கள் என்று தெரியவில்லை.

திருமா
என் தம்பி திருமாவளவன் இங்குதான் வரவேண்டும். அதனை அடுத்த தேர்தலில் பார்ப்போம். திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். ஆனால் தமிழகத்திற்கு இவர்கள் என்னசெய்தார்கள். தமிழகத்தில் சமூக நீதியை குத்தகைக்கு எடுத்தது போல சிலர் பேசுகிறார்கள்.

பிச்சையா?
உங்கள் உயர்விற்கு நாங்கள் போட்ட பிச்சைதான் சமூக நீதி என்று கூறுகிறார்கள். இதை பற்றி பேச தொடங்கும் போதே எனக்கு கோபம் வந்து விடுகிறது. சமூக நீதி என்பது பிச்சை கிடையாது. அது உரிமை என்பது அவர்களுக்கு எப்போது தெரிய போகிறது.

சூடு ஏறுகிறது
இந்த நாட்டில் நடப்பதை நினைத்தாலே எனக்கு சூடு ஏறிவிடுகிறது. இதை பற்றி இரவில் நினைத்தால் எனக்கு தூக்கமே வருவது இல்லை. 100 வருடங்களாக கட்சிகள் சமூக நீதி பற்றி பேசி பலவற்றை மக்கள் இழந்துள்ளனர், என்று கமல்ஹாசன் மிகவும் விரக்தியோடு கோபமாக பேசி உள்ளார். பிரச்சார மேடையிலேயே விசிக குறித்து உணர்ச்சி பொங்க கமல் பேசியது வைரலாகி வருகிறது.