கொரோனா ஆதிக்கம்.. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கனிமொழி எம்பி திடீர் விசிட்.. மக்களுக்கு அட்வைஸ்
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக உச்சத்தில் சென்று வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 10,000-ஐ நெருங்கி வந்து விட்டது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், வேலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு மிக அதிமாக உள்ளது.
இதேபோல் தென் மாவட்டமான தூத்துக்குடியில் கொரோனா தொற்று தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது. தூத்துக்குடியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 160-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
மத்திய அரசின் தடைகளை தாண்டி.. OBC இடஒதுக்கீடு கிடைக்க திமுக காரணம்: எம்பி வில்சன் EXCLUSIVE பேட்டி

கனிமொழி எம்பி திடீர் ஆய்வு
இதனால் தினமும் நூற்றுக்கணக்கான பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்று சிகிச்சை பிரிவு வார்டு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கனிமொழி எம்பி இன்று திடீரென ஆய்வு செய்தார்.

படுக்கை வசதிகள் உள்ளதா?
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை வசதிகள் உள்ளனவா? என்று மருத்துவமனை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்தும், ஆயத்த நிலை குறித்தும் டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் உடன் இருந்தார்.

தமிழக அரசு நடவடிக்கை
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 1,600 படுகைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 900 மேற்பட்ட படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 'தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று கட்டுப்படுத்த தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மக்களுக்கு அட்வைஸ்
பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது முகக்கவசம் அணிய வேண்டும். தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும்' என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வு பணிகளின் போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மருத்துவக்கல்லூரி டீன் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.