சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேனா நினைவு சின்னம்- மூளையை முடக்குவாதத்துக்கு அடமானம் வைத்தவர்,மங்குனி ஆமை- சீமானை வெளுத்த முரசொலி!

கருணாநிதி பேனா நினைவு சின்னத்தை கடலில் அமைக்க எதிர்க்கும் சீமானை மிக கடுமையாக சாடியுள்ளது திமுகவின் முரசொலி.

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை எதிர்ப்பவர்கள், மூளையை முடக்குவாதத்துக்கு அடமானம் வைத்தவர்கள் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக சாடியுள்ளது.

இது தொடர்பாக முரசொலி நாளிதழில் இன்று எழுதப்பட்டுள்ள தலையங்கம்:13 வயதில் எழுதுகோல் பிடித்து, 95 வயது வரை தமிழ் நிலத்தில் உழுத எழுத்தச்சன் முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர் கலைஞர். "என்னிடம் இருக்கும் செங்கோலை யாரும் பறித்துவிடலாம். ஆனால் எழுதுகோலை யாராலும் பறிக்க முடியாது" என்று நெஞ்சுரத்துடன் சொன்ன எழுத்துலகச் சக்கரவர்த்தி கலைஞர்.

Karunanidhi Pen Memorial: DMK Murasoli Slams Naam Tamilar Seeman

வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு தலைநகர் சென்னையில் கோட்டமும், கடுகைத் துளைத்து எழுகடலைப் புகுத்திய வள்ளுவனுக்கு 133 அடி உயரத்தில் குமரியில் திருவுருவச் சிலையையும் அமைத்த தமிழ்க்காப்பு அரண் கலைஞர். சிலப்பதிகார நாடகக் காப்பியம் எழுதிய கலைஞருக்கு அணிந்துரை தீட்டிய பேரறிஞர் அண்ணா அவர்கள், 'சேரமான் தம்பி தந்த சிலப்பதிகாரத்தை என் தம்பி கருணாநிதி தனது வளமிகு சொல் திறத்தால் நாடகக் காப்பியமாகத் தருவது பொருத்தமானதே' என்று சொன்னார். 'மன்னனாகவும் புலவனாகவும் இருப்பவர் கலைஞர் மட்டும்தான்' என்றார் மூவாத்தமிழுக்குச் சொந்தக்காரரான மு.வ.

'கண்ணகிக்குச் சிலை வைத்தான் சேரன் செங்குட்டுவன், சொல்லோவியம் கண்டார் இளங்கோ. இந்த இரண்டையும் வள்ளுவருக்குச் செய்தவர் கலைஞர்' என்று சொன்னவர் 'வள்ளுவம்' எழுதிய வ.சுப.மாணிக்கம்.அவர்கள். கலைஞரை 'மூதறிஞர்' என்று எழுதியவர் ஆட்சிமொழிக் காவலர் கீ.இராமலிங்கனார். 'கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா சுவையாக எழுதப்பட்டதால் முழுவதையும் படித்தேன். சொற்பிழையோ, எழுத்துப்பிழையோ இல்லை. கலந்த போக்கும் இல்லை. ஒரு மாதத்தில் எழுதி முடித்ததாகக் குறித்துள்ளார். அவர் உரை சுவைபட அமைந்துள்ளது" என்று யாரையும் எளிதில் பாராட்டிவிடாத முன்னாள் துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் சொன்னார்கள்.

'தமிழக வரலாற்றிலும், தமிழிலக்கிய வரலாற்றிலும் கலைஞர் என்ற பெயர் மக்களால் வழங்கப்பட்டு நிலைபெற்றுவிட்டது. அரசியலும் ஒரு கலையேயாகும் என்பார்தம் கூற்றை மெய்ப்பித்த பெருமையும் நம் கலைஞருக்கு உளதாயிற்று' என்று எழுதியவர் தமிழண்ணல் அவர்கள். 'நின்னாவார் பிறரின்றி நீயே ஆனாய்' என்று போற்றியவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள். இத்தகைய புகழை பெருமையை அரசியல் களத்திலும், இலக்கியக் களத்திலும் இணைந்து பெற்றவர் அவர். இத்தகைய கலைஞருக்கு 'பேனா' வடிவிலான சின்னம் என்பது மிகமிகப் பொருத்தமானதே! இதனைத் தமிழன், தமிழ்த் தமிழன், சொரணை உணர்வு கொண்ட சுயமரியாதைத் தமிழன், நன்றியுணர்ச்சி உள்ள மனிதன் ஒப்புக் கொள்வான். மூளையை முடக்குவாதத்துக்கு அடமானம் வைத்தவர்கள் மட்டும்தான் எதிர்ப்பார்கள்!

இன்னொரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. 'நாங்கள் நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்க்கவில்லை. கடலில் வைக்காதீர்கள்' என்கிறது இந்தக் கூட்டம். இவர்களுக்கு தமிழர்களது பண்பாட்டு விழுமியங்களே தெரியவில்லை. கடற்கரையில் உருவானதுதான் தமிழர் பண்பாடும், மக்கள் பரவலும். இலட்சக்கணக்கான ஆண்டுகளாக, காலம் காலமாக இந்த தமிழ்நிலப்பரப்பு வளர்ந்தும் வாழ்ந்தும் வந்திருக்கிறது என்றால் அது ஆற்றங்கரைகளில்தான். கடலோரங்களில்தான். ஒரு சின்னம் எழுப்புவதால் கடல், வளம் சிதையாது. கடல் நீரை 'முந்நீர்' என்கிறார்கள். அந்த முந்நீரை மாசுபடாமல் காக்க, 'முந்நீர் விழவு' விழா நடத்திய இனம் தமிழினம். காவிரி ஆற்றில் இயற்கை துறைமுகம் அமைத்தான் சோழ மன்னன். காவிரிப்பூம்பட்டினம் முக்கியத் துறைமுகமாக இருந்தது. அரிக்கமேடு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், குளச்சல், கொற்கை, கடலூர், தூத்துக்குடி ஆகியவை பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் துறைமுகங்கள் ஆகும்.

பண்டைக் காலத்து பாண்டிய அரசுகள் கடல் வளத்தைச் சார்ந்தே இயங்கியது. பாண்டிய நாட்டுச் செல்வத்தின் அடையாளம் என்பது முத்துக்கள். கொற்கை துறைமுகத்தில் முத்துக் குளித்தல், சங்குக் குளித்தல் மூலம் கிடைத்தவை அவை. அதனால்தான் நாட்டின் சின்னமாக 'மீன்' அறிவிக்கப்பட்டது. பாண்டி நாட்டு முத்துகள் கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியது.

Karunanidhi Pen Memorial: DMK Murasoli Slams Naam Tamilar Seeman

தமிழ் மன்னர்களின் அனைத்துத் துறைமுகங்களும் கடலில் தான் கட்டப்பட்டன. வானத்தில் கட்டப்படவில்லை. 'சோழர்கள் கடலின் தோழர்கள்' என்றே அழைக்கப்பட்டார்கள். கடலுக்குள் செல்லாதே, துறைமுகம் அமைக்காதே என்று எந்த அறிவு சூன்யமும் அப்போது சொல்லியிருக்காது. அன்றைய புலவர்கள், புகழ்ந்தே பாடி இருக்கிறார்கள்.

மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலானது, வங்கக் கடலோரம், முதலாம் நரசிம்ம வர்ம பல்லவனால் கட்டப்பட்டது. 440 பழம் பெரும் சின்னங்கள் கொண்டது. 45 அடி உயரம் கொண்டது. இது கட்டப்பட்ட காலம் எட்டாம் நூற்றாண்டு. உலகில் இருக்கும் பழங்காலக் களங்களில் ஒன்றாக இது இன்று போற்றப்படுகிறது. மார்கோபோலோ வரும் போது பார்த்துவிட்டு, 'ஏழு அடுக்கு தூபி' என்று எழுதினார். இதனை இடிக்கப் போகுமா இழிபிறவிகள்?

'தனுஷ்' என்றால் வில். 'கோடி' என்றால் முனை. வில்லைப் போன்ற முனைதான் 'தனுஷ்கோடி' ஆகும். பழங்காலப் பெயர் கோடி என்பது ஆகும். 'தொன்முது கோடி' என்று சொல்லப்படுகிறது. இராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு இருப்புப் பாதை அமைக்கப்பட்டது. இதன் மொத்த நீளம் 9.9 மைல் ஆகும். இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது மிக நீண்ட கடல் பாலம் இது. துபாயில் கடலுக்குள் ஒரு தீவையே கட்டி வைத்துள்ளார்கள். விவேகானந்தர் பாறையும் காந்திக்கு மண்டபமும், வள்ளுவனுக்குச் சிலையும் குமரியில் அமைக்கப்படும் போது யாரும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று சொல்லவில்லை. இந்தப் புத்திசாலிகள் அப்போது பிறந்திருக்க மாட்டார்கள். இந்தக் கழிசடைகள் தலையெடுக்கா காலத்தில் கட்டி முடிக்கப்பட்டவை இவை! 'பேனா' நினைவுச் சின்னம் கடலுக்குள் பலமைல் தூரத்தில் நினைவுச்சின்னம் கட்டப்படவில்லை. 360 மீட்டருக்குள்தான் அமைக்கப்படுகிறது. இந்த அறிவுக்கொழுந்துகள் சொல்வது படி பார்த்தால், துறைமுகங்களே இருக்க முடியாது. இருக்கும் துறைமுகங்கள் அனைத்தையும் உடைக்கத்தான் வேண்டும். கடற்கரையில் மீனவர் கிராமங்களே இருக்க முடியாது.

மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது என்று இவர்களே நாளைக்குச் சொன்னாலும் சொல்வார்கள். இராமேசுவரம் மீனவர்களின் சாதாரண வலைகளில் கடலின் அரிய வகை கடல்பசு, சித்தாமை சிக்குவதாக தகவல் வெளியானது. அப்படியானால் மீனவர்கள் இனி வலைகளையே பயன்படுத்தக் கூடாது என்பார்களா? இதற்கெல்லாம் 'மங்குனி' ஆமைகளிடம் பதில் இருக்காது. புதிய தேசிய மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டத்தை உருவாக்கிய பா.ஜ.க. அரசின் மீனவர்களை நசுக்கும் சட்டத்துக்கு எதிராகப் போராடத் துப்பு இல்லாத இவர்கள், கலைஞரின் பேனாவுக்கு எதிராக கம்புசுற்றுகிறார்கள். இவர்களை விட சுற்றுச்சூழலைக் காக்கும் அக்கறை கலைஞரின் அரசுக்கு உண்டு. உலகளாவிய குழுவை அமைத்திருக்கும் ஒரே மாநில அரசு தமிழ்நாடு அரசே. எனவே, கலைஞரின் பேனா காக்கும்! சிலதுகள் கனைக்க வேண்டாம்!

English summary
DMK Official Daily Murasoli has slammed Naam Tamilar Chief Seeman on Karunanidhi Pen Memorial issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X