சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்கே விவரமாக கருத்து சொல்லப்படும்… இப்படிக்கு ஃபேஸ்புக் கருத்து கந்தசாமிகள்!

Google Oneindia Tamil News

சென்னை: அந்த காலத்தில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஒருசில பேருக்கு மட்டுமே பொதுவெளியில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்களுக்கு வாசகர் கடிதங்கள்தான் ஒரே வடிகால். இவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சொந்தபந்தங்கள், உறவினர்கள்தான் மற்றவர்களின் தடாலடிக் கருத்துக்களைத் தாங்கும் இடிதாங்கிகளாக இருந்தனர்.

உற்றார் உறவினர்களிடம் கருத்துக்களைக் கொட்டுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒருவர் எதைப் பற்றியாவது பேசும்போது ஆஹா..ஓஹோ என நேரில் பாராட்டிவிட்டு, அவர் அப்படி நகர்ந்ததும் ஓட்டை வாயன், வாயாடி என சகட்டுமேனிக்கு பட்டங்களைச் சூட்டுவதுண்டு.

ஆனால் சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரர் என்பது போல கீ போர்டை இயக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் ஆகிவிட்டனர். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எல்லாருமே சிட்டிசன் ஜர்னலிஸ்ட் என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.


கந்தசாமிகள்

கந்தசாமிகள்

நாடு முழுவதும் அதிகரித்துவிட்ட இந்த `கருத்து கந்தசாமிகள்` பொளந்துகட்டும் இடங்களில் ஃபேஸ்புக் எனப்படும் முகநூலுக்குத்தான் முதலிடம்.

எஞ்சினியரிங்கில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் என ஏகப்பட்ட துறைகள் உண்டு. அதுபோலவே டாக்டர் என பொதுவாகச் சொன்னாலும், மோட்டார் வண்டிகளின் ஸ்பேர்பார்ட்ஸ்களை மெக்கானிக்குகள் பிரித்து மேய்வது போல கண்ணுக்கு, மூக்கிற்கு, இருதயத்திற்கு என டாக்டர்களும் தனித்தனியாகவே பணிகளை மேற்கொள்கிறார்கள்.

கருத்துப் போராளிகள்

கருத்துப் போராளிகள்

சிவில் எஞ்சினியர், மறந்தும் கூட மெக்கானிக்கல் சமாச்சாரம் பற்றி பேச மாட்டார். அதுபோலவே கண் டாக்டரிடம் தப்பித்தவறி வேறு உறுப்புகள் உபாதை பற்றி பேச்செடுத்தால், தெரிந்த ஒரு ஸ்பெஷலிஸ்டை ரெஃபர் பண்ணுவாரே தவிர, அவர் வாய்திறக்க மாட்டார். ஆனால் ஃபேஸ்புக் போராளிகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. யாரும், எதைப் பற்றியும், எப்படியும் கருத்து சொல்லலாம். நாட்டின் பாதுகாப்பு, வன்முறைத் தூண்டல் போன்ற ஒரு சில விஷயங்களில் ஃபேஸ்புக் தானாகவே சென்சாரில் இறங்குமே தவிர, மற்றபடி எவ்வித பிரச்சனைகளும் இல்லை. ஒருவர் தான் சார்ந்துள்ள துறை பற்றி மட்டுமே அல்லது தனக்கு நன்கு தெரிந்த விஷயங்கள் குறித்து மட்டுமே பதிவிட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் கிடையாது. இது போதாதா நமது ஃபேஸ்புக் போராளிகளுக்கு? ஆளாளுக்கு புகுந்து விளையாடத் தொடங்கிவிடுகின்றனர்.

பேஸ்புக்கிலும் போராளிகள்

பேஸ்புக்கிலும் போராளிகள்

அண்மையில் மத்திய அரசு தனது பட்ஜெட்டை பார்லிமெண்டில் சமர்ப்பித்தது. அவ்வளவுதான்... ஃபேஸ்புக் போராளிகளில் கிட்டத்தட்ட 90% பேர் பொருளாதார வல்லுநர்களாக மாறி புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு பொறிகலங்க அடித்துவிட்டனர். பட்ஜெட்டை சமர்ப்பித்த நிர்மலா சீதாராமனே எங்கே சிக்கல், அதை எப்படித் தீர்ப்பது என புரியாமல் குழம்பித் தவிக்கும் நிலையில் நம்ம முகநூல் போராளிகள் ஒவ்வொருவரும் கொடுத்த ஐடியாக்கள் இருக்கிறதே...அடடே...பிரபல பொருளாதார நிபுணர்கள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்!

கருத்தால் அடிப்பது

கருத்தால் அடிப்பது

பொருளாதார நிபுணர்கள் அவதாரம் எடுத்த போராளிகள் அடுத்த நாளே அரசியல் சட்ட நிபுணர்களாக மாறி சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாங்குமாங்கென வெளுத்து கொடியில் காயப்போட்டனர். பொதுவெளியில் யாரும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். அதில் தவறில்லை. சுதந்திர நாட்டில் எல்லோருக்கும் இதற்கு உரிமை இருக்கிறது. எனினும் குறிப்பிட்ட விஷயம் பற்றி கொஞ்சத்திற்குக் கொஞ்சமேனும் படித்தறிந்து, பின்னணியை ஓரளவிற்கேனும் புரிந்துகொண்டு அதன் பின்னர் பதிவிட்டால் அதைப் பாராட்டலாம்.

கருத்து வாந்தி

கருத்து வாந்தி

ஆனால் தற்போதைய சூழலில் இதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. வாய்க்கு வந்ததை வாந்தி எடுப்பதையே பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏதேனும் ஒரு பிரச்சனை பற்றி ஒருவர் ஒன்றைக் கூற, அடுத்தவர் அப்படியே தலைகீழாக பிளேட்டைத் திருப்பிப்போட, படிக்கிறவர்கள் திண்டாடிப் போய்விடுகிறார்கள். ஒரு அதிகாலை நேரத்தில் ஐந்து டாக்டர் நண்பர்கள் வாக்கிங் போனார்களாம். அப்போது எதிரே ஒருவர் நொண்டியபடி வந்துள்ளார். ஒரு டாக்டர் ‘'அந்த ஆளுக்கு கடுமையான ஆர்த்ரைட்டிஸ் பிராப்ளம். அதனால்தான் இப்படி தாங்கி, தாங்கி நடக்கிறாரு'' என்றார்.

ஆளுக்கு ஒரு கருத்து

ஆளுக்கு ஒரு கருத்து

இரண்டு டாக்டர்களின் ஒப்பீனியன் ஒன்றாக இருக்கக் கூடாது என்பது உலக நியதியாயிற்றே! அதை நிரூபிப்பது போல அடுத்த டாக்டர்,'' இல்லை..இல்லை அவருக்கு கால் நரம்புகளில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அதனால்தான் இந்த சங்கடம்'' என சொல்லியிருக்கிறார். விடுவாரா மூன்றாவது டாக்டர்! அவர் தன் பங்கிற்கு எதையோ சொல்ல, இப்படியே ஐந்து டாக்டர்களும் ஐந்து விதமான கருத்துக்களை கொட்டியிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் குறிப்பிட்ட நபர், டாக்டர்களை நெருங்கிவிட்டார். அந்த நபரிடம் அவர்கள் ‘' ஏன் இப்படி நொண்டுகிறாய்...என்ன பிரச்சனை?'' என கேட்டிருக்கிறார்கள். அவரோ'' ஒரு பிரச்சனையும் இல்லை. வலது கால் செருப்பின் வார் அறுந்துவிட்டது. அதனால்தான் தாங்கித் தாங்கி நடந்தேன். ஆமா, செருப்பு தைக்கிறவர் பக்கத்துல யாராவது இருக்காங்களா?'' என கேட்க, மெத்தப் படித்த டாக்டர்கள் வேகவேகமாக நடையைக் கட்டியிருக்கிறார்கள்.

 இஷ்டத்துக்கு கருத்து

இஷ்டத்துக்கு கருத்து

இதேபோலத்தான் இன்றைக்கு முகநூலில் தங்களுக்குத் தோன்றுவதையெல்லாம் நம்பத்தகுந்த விஷயங்களாக ஆளாளுக்குப் பதிவிடுவது வழக்கமாகிவிட்டது. இந்த விஷயத்தில் பல fபேஸ்புக் போராளிகள் அரசியல்வாதிகளை மிஞ்சிவிட்டனர். அரசியல்வாதிகள் நாள் ஒன்றுக்கு 1 அல்லது அதிகபட்சம் 2 அறிக்கைகள் விடுவது வழக்கம். ஆனால் இந்த டிஜிட்டல் போராளிகள், சிவகாசி சரவெடியைப் போன்று கணக்கு வழக்கில்லாமல் 'பதிவு பட்டாசுகளை' வெடித்துக்கொண்டே இருக்கின்றனர். இதற்காக மெனக்கெட்டு ஹோம்வொர்க் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக தங்களை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு அவ்வளவு வெறி!

சர்க்கரைக்கு சூப்பர் மருந்து

சர்க்கரைக்கு சூப்பர் மருந்து

கண்டங் கத்திரிக்காவையும், கசகசாவையும் கொதிநீரில் போட்டு வேகவைத்து ஒரு வாரம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும் என காலையில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருப்பார். சித்த மருத்துவராக பணியைத் தொடங்கிய அவர், அடுத்த சில மணி நேரங்களில் வழக்கறிஞராக உருமாறி சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்வார். கொஞ்ச நேர இடைவெளிக்குப் பிறகு குடும்பநல ஆலோசகராக மாறி ஏகப்பட்ட அட்வைஸ்களை அள்ளியிறைப்பார். குடும்பங்களைக் கூறுபோடும் டிவி சீரியல்களை விட அவரது ஆலோசனைகள் மிக ஆபத்தானவையாக இருக்கும்.

மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ்

மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ்

ஃபேஸ்புக் போராளிகள் பலரும் இப்படி 'மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ்' என்கிற நிலையை எப்படி எட்டுகிறார்கள்? என்கிற நியாயமான சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. இது பற்றி விஷயம் தெரிந்தவர்களிடம் விசாரித்தால் ‘'எல்லாம் காபி- பேஸ்ட் செய்யும் மாயம்'' என கலகலவென சிரிக்கிறார்கள். கருத்து கந்தசாமிகள் தவிர, சுய தம்பட்டம் அடிப்பவர்களின் எண்ணிக்கையும் அண்மைக்காலமாக சோஷியல் மீடியாவில் அதிகரித்துவிட்டது. நின்றால், நிமிர்ந்தால், உட்கார்ந்தால் எல்லாவற்றையும் பதிவுகளாக்கிவிடுகின்றனர். கூடவே மொக்கையான கமெண்டுகளை வேறு இணைத்து காண்பவர்களுக்கு பி.பியை எகிறச் செய்கின்றனர்.

மோகம்

மோகம்

அளவுக்கதிகமாக இந்த சோஷியல் மீடியா மோகம் பற்றி உளவியல் நிபுணர்களிடம் விசாரித்தால் ‘' இது தகவல் தொழில்நுட்ப யுகம். கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்களை விஷயம் தெரிந்த ஞானிகளாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். பொதுவாக இந்த மாதிரி நபர்களுக்கு பெரும்பாலும் அவர்களது நெருங்கிய வட்டங்களில் சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அந்த ஏக்கத்தை, ஏமாற்றத்தைப் போக்கிக்கொள்ள ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாவை இஷ்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர். படிப்பவர்களை எப்படியேனும் கவர வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே எண்ணம்.

வள்ளுவர் வாக்கு

வள்ளுவர் வாக்கு

தகவல்களின் உண்மைத்தன்மை, அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. கனி எது காய் எது என்பதை தெளிவாக உணர்ந்து தகுதியான பதிவுகளை மட்டுமே ஃபேஸ்புக் பயனாளர்கள் அங்கீகரிக்க வேண்டும், சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் லைக்கோ, ஷேரோ செய்வது கூடாது. சோஷியல் மீடியா என்பது அற்புதமான ஒரு தளம். அதில் அழுக்குகளும், குப்பைகளும் இப்போது அதிகமாகி குழம்பிய குட்டையாக இருக்கிறது. பயனாளர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து படிப்படியாகவே தெளிவு பிறக்கும்'' என்கிறார்கள். அப்படியானால் அதுவரை இந்தப் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது! இருக்கவே இருக்கிறார் வள்ளுவர்.

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

- கௌதம்

English summary
Almost in all the Social Media pages, these karthu Kandasamigal are ruling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X