• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கனவு விரியும் சொற்கள்!

தமிழ் இலக்கியத்திலும், திரைத் துறையிலும் தவிர்க்க முடியாத ஒரு நெடும் பெயர்.. கவிப் பேரரசு வைரமுத்து. கண்ட களம் அனைத்திலும் தனது கனத்த இருப்பை கம்பீரமாக பதிவு செய்து தனது தமிழ் ஆளுமையை நிலை நாட்டிய கரும்புத் தமிழன். கவி தொட்டாலும்.. பாடல் தீட்டினாலும்.. தனது பேனா முனையை வலிமையான எழுத்தில் இட்டு.. தமிழை ஓங்கி ஒலிக்கச் செய்த நெடிய தமிழன். நாளை தனது 67வது பிறந்த நாளைக் காணும் கவிப் பேரரசு வைரமுத்துவுக்கு செழுமையான வாழ்த்துரையை, ஒரு ஆய்வுக் கட்டுரையாக வடித்துள்ளார் எழுத்தாளர் ஆத்மார்த்தி. இதோ உங்கள் பார்வைக்கு..

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல என்ற தலைப்பைப் பார்த்தபோது எனக்கு வயது பதினான்கு. சின்னஞ்சிறிய புத்தகம் என எண்ணி ஏந்திய அந்தப் புத்தகத்தை நான் முடிப்பதற்கு மூன்று பருவங்கள் ஆயின. 'மரங்களைப் பாடுவேன்' என்ற ஒரே கவிதையை ஒருமுகமாய்க் கடக்கவியலாமல் பல தினங்கள் தவித்தேன். காலத்தின் நுட்பமான நிகழ்தலென்று உருவாகி வரும் ஒரு புத்தகம் அப்படியாகத் தான் விளைவு நிகழ்த்தும். அதன் பிறகு எனக்குள் ஏற்பட்ட மாற்றம் மனதுக்குள் ஊஞ்சலொன்றை மாட்டி அங்கே கவிதை என்கிற கலைவடிவத்தை அமர்வித்தது. அதுவரை புனைவெழுத்துக்களை மட்டும் படித்து இன்புற்று வந்த நான் முழுவதுமாக நேசிக்கத் தொடங்கிய மூன்று எழுத்தாளுமைகள் பாலகுமாரன் சுஜாதா மற்றும் வைரமுத்து. வைரமுத்துவின் திரைமுகம் பாடல்களால் விசிறித் தாலாட்டிய அன்னைக்காற்று என்றால் அவருடைய கவிதைகளும் கதைகளும் அடர்வன நெடும்பயணத்தில் உடன் பயணிக்கிற சினேகத் துணை.

kaviperarasu vairamuthu birthday special tribute article by aathmarthi

ஒரு புத்தகத்தின் தலைப்பை உள்வாங்கும்போது அதனை உடனே உள்ளார்ந்து படிக்காமல் தலைப்புக்குள்ளேயே தங்கிச் சலித்து, மெதுவாக அதன் உள்ளடக்கத்துக்குள் மூழ்கியதெல்லாம் இன்றைக்கு இங்கே சொல்வதற்குத்தானென்று அன்றைக்கெல்லாம் எனக்குச் சத்தியமாய்த் தெரியாது. ஏற்க முடியாத காதல் கடிதத்தின் மறக்க முடியாத வாக்கியம் போல முப்பதாண்டு காலமாக எனக்குள் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கும் எத்தனையோ வைரமுத்துச் சொற்பதங்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு சிறு பறக்கும் முத்தம்.

'காவி நிறத்தில் ஒரு காதல்', 'இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்', அவருடைய தனித்துவத்தின் தொடக்கம் அவர் சூட்டும் தலைப்புகள். தெய்வம் பவனி வருகிற தேரினைப் பூக்கள் கொண்டு அலங்கரிப்பவன், சற்றைக்கெல்லாம் அந்தத் தேரைத் தூரத்தில் இருந்து பார்க்கும்போது, அஃது 'தரிசனம்' என்று மாறியிருக்கும். தானே தன் ஒவ்வொரு பூவுமாய் உணர்கிற நல்மனம் கொண்டு எழுதப்பட்ட 'இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்' நூலை என் சுயத்தின் அருகமை இடமொன்றில் மனதுக்குள் பத்திரம் செய்து படித்தேன். இந்தக் காலகட்டத்தில் அனேகமாக அதற்குமுன் கவிஞர் வைரமுத்து எழுதிய அத்தனை நூல்களையும் வாங்கிப் படித்தவனாகவும், அடுத்த நூலுக்காக ஏங்கித் தவித்தவனாகவும் மாறினேன். பெற்றுக் கொண்ட மழை போதுமென்று பெருநிலம் சொல்லுமா என்ன?

என் கல்லூரிக் காலத்தில் என்னைத் தொலையாமல் பார்த்துக்கொண்டவை தமிழ்த் திரைப்படப் பாடல்கள் என்றால் நான் தொலைய என்னைப் பராமரித்துத் தந்தவை, எனக்கு வாசிக்கக் கிடைத்த புத்தகங்கள்தான். கல்லூரிக் காலத்தில் வாசிக்கிற அனைத்தையும் அடுத்த காலம் நோக்கி எடுத்துச் செல்வது சிரமம். வாழ்க்கை ஆட்டத்தில் வயதுச் சீட்டுக்கள் மாறி மாறி இறங்க, தொடரும் பருவங்கள் முன் பிடிமானங்கள் அத்தனையையும் மாற்றிச் சிரிக்கும். இந்த இடத்தில், கடந்த யாவற்றிலிருந்தும் எப்போதும் பற்றிக்கொள்வதற்கான வெகுசில படைப்புகளையும் காலமே அடையாளப்படுத்தவும் செய்யும்.

அப்படித்தான் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய 'தண்ணீர் தேசம்'. அது கதையா, கதைவடிவில் கவிதையா, நாவலா என்பதெல்லாம் தாண்டி, பிறர் எதைக் கனவுகாண வேண்டும் என்பதைத்தான் முதலில் கண்டுவிடுபவனின் பொறுப்பேற்புடனான கனவு விரியும் சொற்கள், அதில் எட்டாவது அத்தியாயத்தின் முதல் மூன்று வரிகளை எனக்கு எட்டுகிற இடங்களிலெல்லாம் எழுதிவைக்கத் துடித்தேன்.

"வாழ்வின் மர்மம்தான் வாழ்வின் ருசி.

நாளை நேர்வதறியாத சூட்சுமம்தான் அதன் சுவை.

எதிர்பாராத வெற்றிதான் மனித மகிழ்ச்சி" - இவைதான் அந்த வரிகள்.

போகிற போக்கில் வந்து விழுகிற இயல்பான சொற்களைப் போல் தோன்றினாலும், அதுவா நிஜம்..? எந்த மொழியிலும் தத்துவத்துக்கென்று தனித்த சொற்கள் இருப்பதில்லை, இருக்கும் சொற்களிலிருந்துதான் தத்துவங்கள் உருவாகி வருகின்றன.

"உழைக்காதவன் கையில் தங்கமும் அழுக்கு, உழைக்கின்றவன் கையில் அழுக்கும் தங்கம்" - இந்த வரிகளைத் தாங்கவும் முடியாமல் தாண்டவும் முடியாமல் தவிப்பதும் துடிப்பதுமாய்க் கழிந்தது அக்காலம். தன் கவிதைகளால் மனங்களை உழுவதும், கதைகளால் மழையெனப் பொழிவதும் பெருங்கருணை.

"நான் பட்ட பாடு

நாய் படுமா, பேய் படுமா,

கடையும் தயிர் படுமா,

காஞ்சிபுரம் தறி படுமா"

"கூடு கலைச்சாக்கா

குருவிக்கு வேற மரம்,

வீடு இடிச்சாக்கா

எங்களுக்கு ஏது இடம்"

என்பது ஒரு குரல் அல்ல, அவை வெறும் வரிகளல்ல. சில்லென்று சாமரக் காற்று வீசும் சாலையோரப் பூமரம் அல்ல, நெடுங்காலத் தனித்தல் போதும் என்றாகி, போகின்ற பாதை வழி விழுந்திட்டப் பெருமரம் - யாருமற்றவர்களின் குரலாக ஒலித்துப் பார்க்கும் ஈர மன வாசகம்.

kaviperarasu vairamuthu birthday special tribute article by aathmarthi

'தமிழுக்கு நிறமுண்டு' என்கிற தொகுதியில் "இந்த விழிதானே என்னுயிரைத் தின்ற விழி" என்று ஒரு வரி எழுதியிருப்பார். என் கையில் என் உயிரையே ஏந்திக்கொண்டு எது அதனைத் தின்னவரும் ஏந்திழைக் கள்ளவிழி என்று காதல் சாலையின் நாற்புறமும் அலைந்து திரிந்தேன். ஒரு கவிதை அடுத்த கணத்துக்கென்று எதையும் மிச்சம் வைக்கக் கூடாது. அது அணைத்திடுமானால் துளியும் எஞ்சாமல் அணைத்திட வேண்டும். அதுவே எரிக்குமானால், மிஞ்சிடாமல் கொழுந்துவிட்டு எரித்தல் வேண்டும். இரவென்றால் நிலவு தவிர மற்ற இடமெல்லாம் இருளவேண்டும் புலரும்போது பேரொளியில் அத்தனையும் புலரவேண்டும் என்கிற இரண்டும் தானே வானம் என்பதன் இரவுபகல்? தன்னுடைய பாடல்களில் அன்னை பங்கு வைக்கக் கூடிய பிள்ளையன்பாக ஐயமின்றிக் கலந்து நிறைந்த வைரமுத்து, கவிதைகளில் பெருஞ்செல்வத்தைப் பங்கிட்டுத் தரும் குடும்ப மூத்தோனாகத் தோன்றினார்.

கவிராஜன் கதையில் பாரதி மீது அவர் கொண்ட பரிவும் பற்றும் மிகுந்த பெருங்காதல் சிலாக்கியமானது தன் மனதார அந்த மகாகவிக்குத் தமிழால் அஞ்சலி நிகழ்த்தியிருந்தார்.

"தலைமீது விழ

இறங்கிவந்த இடியை

முட்டி எறிந்தது

முண்டாசு" - என்பதை பாரதியின் கண்களால் படித்துக் கசிந்தவர் பலர்.

தண்ணீர் தேசத்துக்குப் பின்னால் வந்த ஒவ்வொரு நூலாய் நுழைந்து திரும்பும்போதும் முடிவுப்பகுதி கிழிந்த புத்தகத்தின் அறியக் கிடைக்காத மர்மத்தை யூகித்துக்கொள்ள வேண்டியவனைப் போல் வாசகபாரம் என்னை அழுத்தும். அதற்குள் நிறைகிறதே என்று முடிவதில் நிகழும் செல்லக் கோபம் அஃது. புத்தகத்தை அதன் பக்கங்களால் கடக்க முடியாது, அதன் ஆழத்தைத் தொட்டுத் திரும்புகிற அனுபவ அலாதி அப்போதைக்கு மௌனத்தைத் தோற்றுவிக்கும். ஓவியன் யூகித்துக் கொள்ளுகிற சப்தமற்ற கரவொலிகளைப் போல் மனம் விசும்பும்.

தமிழை அலங்கரிக்கக் கவிதை, அதனை அதிகரிக்கத் தன் படைப்புக்கள் என்று தன் திரைப்பாடல்களைத் தாண்டி, சதா எதாவது செய் என்று தன்னைத்தானே கட்டளையிட்டபடி அவருடைய தேர்வலத்தின் சேர்விடங்களாய் தமிழாற்றுப்படை வரை மொத்தம் முப்பத்தெட்டு புத்தகங்கள். அவற்றில் ஒன்று ஆயிரம் பாடல்கள். சாகித்ய அகாதமி விருது உட்பட, அவரும் தமிழும் ஆடித் திளைக்கிற தொட்டுப் பிடித்து விளையாடல் திரும்புகிற தருணங்களில் விருதுகளும் பரிசுகளுமாய் அவர் தொட்ட உயரங்கள் யாவும் பெருவெளிச்சமாய் நிலைத்தன, கருவாச்சி காவியமும் கள்ளிக்காட்டு இதிகாசமும் மூன்றாம் உலகப் போரும் முப்பெரும் கதைநதிகள். வைரமுத்து சிறுகதைகள் படிக்கக் கிடைக்கையில் மற்ற கவிதைகளும் நாவல்களும் மறந்து போய் அந்தக் கதைகளுக்கு உள்ளே வெளியேவென அதிகமாய் அலைந்தது மனம். அதிலும் பகல் இருட்டு சிரித்தாலும் கண்ணீர் வரும் போன்ற கதைகள் தந்த மன அழுத்தம் தனியானது.

தமிழாற்றுப்படை நூலுக்குப் பின்னால் இருக்கக்கூடிய உழைப்பின் அசாதாரணம் ஒரு பேராசிரியன் தன் மனதைக் கலைத்துச் சமைத்து மாணவ மனம் கொண்டு போராடி வென்றெடுக்கிற தனிப்பெரும் காரிய மாலை. வாழும் காலத்தில் மலர்களைக் கோர்த்து, வருங்காலத்துக்கு அணிவித்துப் பார்க்கும் போராளியின் தாராள வாகை அஃது.

எழுதுவது எந்தப் பத்திரிக்கையில் என்று பாராமனம் அவருடைய தனிக் குணம். 'கற்கண்டு கட்டிகள் முட்டிக்கொண்டால் என்ன, உதிரப்போவதென்னவோ சர்க்கரைதானே' என்று அவர் எழுதியபோது நீச்சலாடி பெருங்கடல் முன் நிற்பதுபோல் உணர்ந்தேன். ஜெமினி சினிமாவில் 'என் ஜன்னலின் வெளியே' என்று எழுதினாலும் சரி, ஆனந்த விகடனில் 'மூன்றாம் உலகப் போர்' என அலசினாலும் சரி, எப்படிப் பெய்தாலும் மழையின் ஈரம் ஒன்றுதான் எனும் சொல்வழி அவருடைய எழுத்தின் சாரம் ஒன்றுதான். என் சிந்தையைத் திருகியதிலும், திசைகளைத் திருப்பியதிலும் ஒரு பதாகை போல அல்லாமல் ஒரு பிரார்த்தனை போல் மொழியைப் பற்றிக்கொள்வதற்கு என் போன்ற எத்தனையோ பேருக்கு முன் வெளிச்சமாகவும், முதலோடியாகவும் விளங்கிவருகிற கவிப்பேரரசு வைரமுத்து அறுபதைக் கடந்து ஓடும் ஆறாம் அகவையில் இன்று அடியெடுத்து வைக்கிறார். "ஒரு நூறு இரு, நூறு தாண்டி வாழ்வாங்கு வாழ்க" என்று தமிழ் தொட்டு வாழ்த்துகிறேன்.

எழுதுவதல்ல; எழுவது எழுத்து என்பதை நம்பும் நல்மனம் அவருடையது. எழுதுவது பெரும் கலை, எழுத்தாளன் உள்ளார்ந்து பார்க்கும் கூட்டுச்சுயக்கூராய்வு. அந்த வகையில், சமகாலத்தில் நம் மொழியில் நிகழும் மாபெரும் மருத்துவன் கவிப்பேரரசு வைரமுத்து. அவருக்கு என் மனம் நிறைந்த பிறந்த தின நல்வாழ்த்துகள். வாழ்தல் இனிது.

அன்போடு ஆத்மார்த்தி

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more