சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை உலகம்!

கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாள் இன்று. இந்த நாளை முன்னிட்டு, அவர் குறித்து, படைப்பாளர், பேச்சாளர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்ட, தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க நட்சத்திரங்களில் ஒருவரான மரபின் மைந்தன் முத்தையா எழுதியுள்ள கட்டுரை.

(வாழும் காலத்திலேயே தமிழ்ச் சமூகத்தை அதிகம் பாதித்தவர் - அரைநூற்றாண்டாய் இலக்கிய உலகை ஆண்டுகொண்டிருப்பவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவரது 66ஆம் பிறந்தநாளில் அவரது கவிதை உலகம் மறுவாசிப்புக்கு உள்ளாகிறது)

"முழுக்க முழுக்க நேர்நிலை நோக்கு கொண்ட கவிஞர் அவர். துயரங்கள் இல்லாதவர். கவிதை பொதுவாக மானுடனின் தவிர்க்கமுடியாத கையறுநிலைகளை நோக்கிச் செல்வது. அங்கே செயலற்று நின்று ஏங்குவது. அந்த அம்சம் வைரமுத்துவிடம் இல்லை. சாதாரணமாக கவிஞர்களில் இருக்கும் தனிமை ஏக்கம், இறந்தகால ஏக்கம் போன்றவையும் இல்லை. நவீன கவிதைகளில் உள்ள இருண்மையும் கைவிடப்பட்ட நிலையும் முற்றிலும் இல்லை. வைரமுத்துவின் கவிதைகள் வெயில் பரந்த தெற்கத்தி நிலம் போல பளீரென்று நான்கு பக்கமும் திறந்து கிடக்கின்றன. இளைஞன் ஒருவன் அதிலிருந்து அளவிலா ஊக்கம் அடைவதை அப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது."

இப்படிச் சொன்னவர் ஜெயமோகன். அழகியலில் சிறகடித்து உலகியலில் விதை விதைத்து மெய்ப்பொருள் தேடலின் உச்சியில் கூடுகட்டிக் கொண்டே பாடும் பறவை கவிப்பேரரசு வைரமுத்து. ஒரு பறவை தான் இறங்கி நிலைகொள்ளும் நிலத்தில் இறகு உதிர்க்கும் தன்மை போல் சமூக அவலங்களை கண்டு சூடாகி எழுதிய கவிதைகளும் ஏராளம்.

kaviperarasu vairamuthu birthday today special story by marabin maindhan muthaiah

செழுந்தமிழ் மரபு- புதுக்கவிதையின் நவீனம்- நாட்டாரியலின் காத்திரமான வீச்சுகள் -ஆகிய பற்பல அம்சங்கள் இவர்தம் கவிதைகளில் படிந்துள்ளன.
காலம் என்பது ஒன்றே என்றும் ஒரு பார்வை உண்டு. நகர்ந்துகொண்டிருக்கும் ஒற்றை நதியாய்க் காலம் நிகழ்கிறது என்பவர் ஒருபுறம். கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று காலத்தை மூன்றாகப் பார்ப்பது மறுபுறம். காலத்திற்குப் பன்மை உண்டு என்கிறார் வைரமுத்து.

முன்னோக்கி எமை நடத்தி முதுமை செய்யும் காலங்காள்
பின்னோக்கி எமை நடத்திப் பிள்ளையாக்கக் கூடாதா "

- என்று தொடங்கும் கவிதை ஆழமான மெய்ப்பொருள் தேடலை மிக எளிமையான சொற்களில் நிகழ்த்திக் காட்டுகிறது

" ஞானோதயம் அடைந்த பலபேர் அதே கணத்தில் தங்கள் உயிரையும் விடுகிறார்கள். மிகச் சிலர்தான் ஞானோதயம் அடைந்த பிறகும் உயிரைத் தக்கவைத்துக் கொள்ளும் நுட்பம் தெரிந்தவர்கள்" என்பார் சத்குரு.

"சாவுக்குப் பக்கத்தில் சம்பவிக்கும் மெய்ஞ்ஞானம்
வாழ்வுக்குப் பக்கத்தில் வந்தருளக் கூடாதா "
- என்று கேட்கிறார் கவிஞர் வைரமுத்து.

காலத்துடன் உரையாடும் இவரின் கவிதை கால மாற்றங்களைக் கணக்கில் வைக்கவும் தவறுவதில்லை.
மதுரையின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேம்பட்ட வரலாற்றை ஒரே கவிதையில் காட்டும் பாட்டுப் பாய்ச்சல் இவருக்கு சாத்தியமானது.

"மல்லிகை மௌவல் அரவிந்தம்-வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி - இவை
கொள்ளை அடித்த வைகைநதி
நாளும் ஓடிய நதி மதுரை- நீர்
நாட்டியமாடும் பதிமதுரை"
- என்று கவிதையின் இடைப்பகுதியில் காட்சிதரும் வைகை கவிதையின் கடைமடைக்குப் போகிறபோது

"நெஞ்சு வறண்டு போனதனால் வையை
நேர்கோடாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர் - நதியைப்
பட்டா போட்டுக் கொண்டதனால்
முகத்தை இழந்த முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும் பதிமதுரை
- என்று மாறிப் போகிற அவலத்தை அதே அலைவரிசையில் பதிவு செய்ய முடிகிறது.

தன் முன் நிகழும் மாற்றங்களை மகிழ்ச்சியோடு காலத்தின் வரவு வைக்கும் போதே அவை தம்முடைய ஆதி மரபின் சுதி விலகாமலும் சுயம் பிசகாமலும் நிகழ வேண்டும் என்கிற அக்கறை இவருடைய கவிதையில் வெளிப்படுகிறது.

"அறிவியல் என்னும் வாகனம் மீதில்
ஆளும் தமிழை நிறுத்துங்கள்
கரிகாலன் தன் பெருமை எல்லாம்
கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்
ஏவும் திசையில் அம்பைப் போல
இருந்த இனத்தை மாற்றுங்கள்
ஏவுகணையிலும் தமிழை எழுதி
எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்"
- என்பது ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் கவிதையில் தெறித்த கட்டளை.

kaviperarasu vairamuthu birthday today special story by marabin maindhan muthaiah

இன்று கணினியில் தேடல்கள் கீழடிக்கும் கீழே பாய்வது ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் வலியையும் நாட்டார் மொழியிலேயே கவிதைகளாக்கி முத்திரை பதித்த வித்தகக் கவிஞர் இவர்.
குளக்கரை ஓரம் குரும்பாடு மேய்த்த கிழவர் அய்யனாரு சேர்வையுடன் இவர் கவிதை நிகழ்த்தும்நேர்காணல் அதற்கோர் அழகிய உதாரணம்.

"குளத்தங்கரை யோரம் குரும்பாடு மேய்ச்சு வரும்
ஐயா பேரென்ன அய்யனாரு சேர்வைங்களா?
தும்பப் பூவாட்டம் தொங்கு மீசை நரைச்சிருச்சே
ஐயா வயசென்ன அறுபத்தி ஆறுங்களா? "
- என்று தொடங்குகிறது உரையாடல். பெரியவரின் முதல் பதிலாக ஒரு பெருமூச்சு வருகிறது.

"பெருசு பேசலையே பெருமூச்சில் உசிர் குறைஞ்சார்"
மூச்சுக்கணக்கே ஆயுள் கணக்கு என்னும் திருமூலர் திருமந்திரம் இங்கே தொழிற்படுகிறது

"உக்காரு தம்பி ஊர்ப்பட்ட கதை இருக்கு
நின்னபடி நான் சொன்னா நெஞ்சு வலி வந்துவிடும்"

என்று தொடரும் உரையாடலில் வாழ்க்கை கவிதையுடன் உரையாடத் தொடங்குகிறது. நொம்பலமும் வறுமையும் ஊடாடும் வாழ்விற்குள் புதைந்திருக்கும் வல்லமையைக் கவிதை கடைசியில் கண்டறிந்து சொல்கிறது.

அகிலத்தை யெல்லாம் ஆதிசேசன் சுமக்கிறதாம்
ஆதிசேசனையுஞ் சேத்து அய்யனாரு நான் சொமக்கேன்"
- என்று விசுவரூபமெடுக்கிறது மானுடம்.

இவரைப் போலவே விறகு பொறுக்க வந்தவள்- வீடிழந்து நிற்பவள்- சக்களத்தி மகள் "உட்கார்ந்த: கதையை ஊரறியாமல் மறைப்பவள் என எத்தனையோ கிராமத்துச் சித்திரங்கள் இவர் கவிதைகளில் உயிர் பெற்று உலவுவதைக் காணலாம்.

வாழ்வின் வெய்யிலாகவும் மழையாகவும் தெற்கத்திக் காற்றாகவும் கள்ளிக்காட்டின் நிலப்பரப்பாகவும் உழவனின் வியர்வையாகவும் ஒளிர்வதோடு உலகப் பெருங்கடலில் தமிழலையாகவும் வீசுகின்றன கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள், அதனால்தானோ என்னவோ இவரது கவிதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பின் தலைப்பு 'A drop in Search of the Ocean'.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X