பயமுறுத்தும் பறவைக் காய்ச்சல்.. "மாநில பேரிடர்.." கேரள அரசு அறிவிப்பு! ம.பி.யில் சிக்கன் விற்பனை தடை
சென்னை: பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. முதன்முறையாக பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் காரணமாக சிக்கன் மற்றும் முட்டைகளை விற்கும் கடைகளை 15 நாட்கள் மூடுமாறு மத்திய பிரதேசத்தில் உள்ள மண்ட்சார் மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்த மாவட்டத்தில் இதுவரை 100 காகங்கள் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. எனவே கோழி மற்றும் முட்டை கடைகளை 15 நாட்கள் மூடுமாறு உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.
இந்தூரிலும், பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்துள்ளன. இறந்த காகங்களின் மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறையை அமைத்து வருவதாகவும், கால்நடைகள் பராமரிப்புத் துறை அமைச்சர் பிரேம் சிங் படேல் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் சில பகுதிகளிலிருந்து பறவைக் காய்ச்சல் பரவுவதாகக் கூறப்படுகிறது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கி.மீ சுற்றளவில் மற்றும் வாத்து, கோழிகள் மற்றும் பிற உள்நாட்டு பறவைகளை கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
"உங்கள் பேராசைக்கு நாங்கள் இரையாகனுமா.." விஜய், சிம்பு, தமிழக அரசுக்கு ஒரு டாக்டரின் ஓபன் லெட்டர்!
மேலும், செவ்வாயன்று கேரள அரசு, பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்தது. ஏற்கனவே உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட நிலையில், பறவைக் காய்ச்சல் பேரிடரும் கேரளாவை உலுக்கியுள்ளது.
ஒரு பண்ணையில் சுமார் 1,650 வாத்துகள் பறவைக் காய்ச்சல் நோயால் இறந்துள்ளதுதான் அந்த மாநிலத்தில் பதிவான முதல் கேஸ். கோட்டயத்தின் நீண்டூர் பஞ்சாயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் பறவைக் காய்ச்சல் அதிகம் பரவ வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அதிகாரிகள். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.