"சபதம்".. அதிகாரிகளை திகைக்க வைத்த பதில்.. சொல்ல முடியாது.. கண்டிப்பாக பேசிய சசிகலா! என்ன நடந்தது?
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் பல முக்கியமான கேள்விகள் நேற்று விசாரணையின் போது கேட்கப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.
இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று சசிகலாவிடம் அவரின் தி நகர் வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இன்றும் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
கோடநாடு வழக்கு.. 6 மணி நேரம் விசாரித்தும் முடியவில்லை.. கூலாக பேசிய சசிகலா.. இன்று மீண்டும் விசாரணை

முக்கிய கேள்விகள் என்ன?
நேற்று நடந்த இந்த விசாரணையில் பல முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறது.
கோடநாடு வழக்கில் மரணம் அடைந்தவர்களில் எத்தனை பேரை உங்களுக்கு தெரியும்? கோடநாடு பங்களாவில் என்னென்னெ இருந்தது? அங்கு இருந்த பைல் ஒன்று சென்னை சிஐடி வீட்டிற்கு வந்தது எப்படி? பங்களாவில் இருந்த நகைகள் என்னென்னெ? ஜெயலலிதாவின் முக்கிய கோப்புகள் பங்களாவில் இருந்ததா?, கொடநாடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? கொலை பற்றி உங்களிடம் முதலில் சொன்னது யார்? அவருக்கு எப்படி அந்த தகவல் தெரியும்? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டு இருக்கிறது.

வெளியே வந்தது என்ன?
இதில் எளிமையான கேள்விகள் அனைத்திற்கும் சசிகலா பதில் அளித்து இருக்கிறார். மிகவும் மென்மையாக சசிகலா பதில் அளித்ததாக கூறப்படுகிறது. முதலில் கோடநாடு சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பதை மொத்தமாக அவர் மறுத்துள்ளார். அதே சமயம், யார் குற்றவாளியாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. அவர்களுக்கு நான் எங்கும்.. எந்த சாட்சியும் சொல்ல தயார் என்று சசிகலா சபதம் போடுவது போல உணர்ச்சிவசமாக பேசி இருக்கிறார். ஆனால் இவை எல்லாம் ஊடகங்களில் வெளியான தகவல் மட்டுமே.

வெளியே வராதது என்ன?
ஊடகங்களில் வெளியாகாத இன்னும் பல சிக்கலான கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக அங்கு இருந்த சில கோப்புகளை குறிப்பிட்டு, சில கோப்புகளை சசிகலாவிடமே காட்டி விளக்கம் கேட்கப்பட்டு இருக்கிறதாம். சிக்கலான சில கேள்விகளுக்கு சசிகலா பதில் சொல்ல மறுத்து இருக்கிறார். சில கேள்விகளுக்கு. இல்லை எனக்கு தெரியாது. நான் அப்போது அங்கே இல்லை என்று மழுப்பலாக பதில் அளித்து இருக்கிறார். இதனால் அதிகாரிகள் முழுமையாக சில பதில்களில் திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது.

திகைத்த அதிகாரிகள்
அதோடு நேற்று நடந்த 6 மணி நேர விசாரணையில் சசிகலா சொன்ன சில பதில்கள் விசாரணை அதிகாரிகளை திகைக்க வைத்து உள்ளதாம். எதோ ஒன்று நினைத்து சென்ற போது சசிகலா அதற்கு எதிர்மாறாக சில விஷயங்களை சொன்னதாக கூறப்படுகிறது. இன்று கிட்டத்தட்ட 300 கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்படுகிறது. கேள்வி, பதில்கள் அனைத்தும் ரெக்கார்ட் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் கணினியில் டைப் செய்யவும் பட்டுள்ளது.

சசிகலா சொல்ல மறுப்பு
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா.. விசாரணை பற்றி இன்று பேட்டி அளிப்பேன் என்று கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர் எத்தனை கேள்விகள் உங்களிடம் கேட்கப்பட்டது என்று கேட்டார். இதற்கு கண்டிப்புடன் பதில் அளித்த சசிகலா.. அது சொல்ல முடியாது. மற்ற விவரங்களை இப்போது சொல்ல முடியாது விசாரணை முடிந்து சொல்கிறேன் என்று சசிகலா கூறினார்.