கொடநாடு எஸ்டேட்டில் நடந்தது என்ன? சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது.. போலீஸ் குவிப்பு.. கிளம்பும் பூதம்?
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் விசாரணை நடக்கிறது. இல்லம் முன் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்ட நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 5 வருடமாக வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும் இப்போதுதான் பல திருப்பங்கள் வழக்கில் ஏற்பட தொடங்கி உள்ளன.
முக்கியமாக வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ள நிலையில், விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கில் சமீபத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆறுக்குட்டியிடம் விசாரிக்கப்பட்டது. மேலும் அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளா் நாராயணன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
அதிமுக இடத்தை பிடிக்க பாஜக முயற்சிக்கிறதா?.. சசிகலாவிடம் கேட்ட செய்தியாளர்கள்

வழக்கு என்ன?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா நீலகிரி கோடநாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் இங்கு நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு இந்த எஸ்டேட்டில் அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார்.

அடுத்தடுத்த கொலை
இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுப்பட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார். இதனால் இந்த வழக்கு தேசிய அளவில் கவனம் பெற தொடங்கியது.

சயான்
இந்த வழக்கில் கனகராஜ் மரணம், சயான் குடும்பத்தினர் மரணம், கோடநாடு எஸ்டேட் எஞ்சினியர் தற்கொலை உள்ளிட்ட பல மர்ம மரணங்கள் தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சயான் ஏற்கனவே முக்கிய வாக்குமூலங்களை கொடுத்துவிட்டார். கனகராஜ் இறப்பதற்கு முன் கோவை மாவட்ட அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் அனுபவ் ரவியிடம் போனில் பேசி இருக்கிறார். இதனால் அவரிடமும் 3 நாட்களுக்கு முன் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விசாரணை
இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்டேட் உரிமையாளர் என்று முறையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சசிகலாவிடம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று விசாரணை செய்யப்படுகிறது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் எஸ்டேட்டில் காணாமல் போன ஆவணங்கள் குறித்து விசாரிக்கப்பட உள்ளது. சென்னை, தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் விசாரணை நடக்கிறது. இல்லம் முன் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்ட நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.