கொடநாடு விவகாரம்:சிகரெட் விற்பனை டூ டிவி, பத்திரிகை, சினிமா, மதுபான ஆலை- யார் இந்த விவேக் ஜெயராமன்?
சென்னை: கோடநாடு (கொடநாடு) கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சசிகலாவின் உறவினரான விவேக் ஜெயராமன் இப்போது விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கிறார். தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பாக தலைப்பு செய்திகளில் அடிபட்ட இந்த விவேக் ஜெயராமன், சசிகலாவின் அண்ணன் மகன்.
2015-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஜாஸ் நிறுவனத்தின் உயர் பொறுப்பிலே இருப்பவர் சாட்சாத் இளவரசியின் மகன் விவேக். அவர் நிர்வாகத்திலே உள்ள நிறுவனம், தியேட்டரை வாடகைக்கு எடுத்து நடத்துகிறது என்றால், அதற்கான முதலீடு எங்கிருந்து, யார் மூலம் கிடைத்தது? சசிகலா குழுவினரின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இந்தியா முழுவதும் 136 திரையரங்குகள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? அதற்கான பணம் எங்கிருந்து யாரால் கிடைத்தது? என கேள்விகளை அடுக்கி இருந்தார். இந்த அறிக்கை அப்போது பெரும் பரபரப்பை கிளப்பியது.

சசிகலா அண்ணன் மகன்
அப்போது முதல் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியவர் விவேக் ஜெயராமன். ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தவர் சசிகலாவின் அண்ணன் ஜெயராமன். இவரது மனைவிதான் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுடன் 4 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த இளவரசி. ஜெயராமன் - இளவரசி தம்பதியரின் மகன்தான் விவேக்.

ஆஸ்திரேலியா- கொல்கத்தா- பெங்களூரு
விவேக் கைக்குழந்தையாக இருக்கும்போது ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து மரணம் அடைந்தார் தந்தை ஜெயராமன். இதனையடுத்து போயஸ் கார்டன் பங்களாவுக்கு ஜெயலலிதாவால் வரவழைக்கப்பட்டது இளவரசி குடும்பம். அன்று முதல் விவேக் ஜெயராமனின் முகவரியும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லம்தான். பள்ளிப் படிப்புக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் பி.ஏ. பைனான்சியல் அக்கவுண்ட்ஸ் படிப்பு. ஆஸ்திரேலியா படிப்பை முடித்த கையோடு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எம்.பி.ஏ. அந்த படிப்புக்குப் பின்னர் கொல்கத்தா ஐ.டி.சி. கம்பெனியில் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் வேலை.. விவேக் முதலில் பார்த்த வேலையே சிகரெட் விற்பனைதான். பின்னர் பெங்களூருவில் ஐடிசி நிறுவன மார்க்கெட்டிங் மேனேஜர் பணி.

பெங்களூரு சிறை டூ பெரும் சொத்துகள்
அப்போதுதான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் பெங்களூரு சிறைவாசம் அனுபவித்தனர். அந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கான மருந்துகளை கொண்டு போய் கொடுத்து வந்தார் விவேக். அங்கிருந்து விவேக் என்ற புதிய வரவின் அறிமுகம் அதிமுகவுக்குள் பரவத் தொடங்கியது. ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த காலத்தில்தான் ஜாஸ் சினிமாஸ் பொறுப்பு விவேக் வசமானது. இந்த விவேக் யார் என தெரியாமல் மாமூல் கேட்டு பாட்ஷா படத்தில் வரும் மெடிக்கல் காலேஜ் ஓனர் போல வெலவெலத்துப் போன அதிமுக பிரமுகர்கள் கதையும் ஏராளம் உண்டு. யாருப்பா நீ என எகிறி பின்னர் பின்னங்கால் பிடரியில் தலைதெறிக்க ஓடி காலில் விழுந்த மாஜி அதிமுக அமைச்சர்களும் உண்டு என்கின்றன அதிமுக வட்டாரங்கள். 2016-ல் விவேக்கின் திருமணம் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அப்போது இந்த திருமணத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா மட்டுமே கலந்து கொண்டார். ஜாஸ் சினிமாஸ் மட்டுமல்லாமல் விவேக் கட்டுப்பாட்டில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் மிடாஸ் மதுபான ஆலை என ஏகப்பட்ட பெரும் சொத்துகள் சேர்ந்தன.

கொடநாடு வழக்கு விசாரணை
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா, டிடிவி தினகரன் கோஷ்டிக்கு ஆயுதங்களாக இருந்தவை ஜெயா டிவியும் நமது எம்ஜிஆர் நாளிதழும்தான். சசிகலாவும் இளவரசியும் சிறைக்குப் போன காலத்தில் தினகரன் கோஷ்டியின் தளபதியாக இருந்தார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட போது விவேக் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக்கப்படலாம் என்கிற தகவல்கள் இறக்கை கட்டிப் பறந்தன. 4 ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா குடும்பத்தை குறிவைத்து மெகா ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. அப்போது வருமான வரித்துறையின் கிடுக்குப் பிடி சோதனைகளில் சிக்கியவர்களில் விவேக் ஜெயராமனும் ஒருவர். ஜெயலலிதாவின் வாரிசு என அம்ருதா என்ற பெண் புயலைக் கிளப்பிய போது எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார் போயஸ் கார்டனின் செல்வப் பிள்ளையான விவேக். என்.ஆர்.ஐ. கோட்டாவில் சட்டம் படித்தாரா விவேக் ஜெயராமன் என்கிற சர்ச்சையும் அவரை சுற்றி வட்டமடித்தது. இந்த நிலையில்தான் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று 3 மணிநேரம் போலீசாரால் துருவி துருவி விசாரிக்கப்பட்டது மூலம் மீண்டும் ஊடகங்களில் இடம்பிடித்துள்ளார் விவேக் ஜெயராமன்.