கொடநாடு எஸ்டேட் வழக்கு.. சசிகலாவிடம் 100 கேள்விகள்.. பங்களாவில் இருந்தது என்ன? திருப்பம் ஏற்படுமா?
சென்னை: சென்னை தியாகராய நகர் வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 8 பேர் கொண்ட போலீஸார் கடந்த இரண்டு மணி நேரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
மேலும் அந்த பங்களாவில் கொள்ளை சம்பவமும் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் திடீரென உயிரிழந்தார்.

5 ஆண்டுகள்
இந்த கொடநாடு தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியின் மகன் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதாவது கனகராஜ், ஆறுகுட்டியின் மகனிடம் பணியாற்றியது தெரியவந்ததை அடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கோவை ஜெயலலிதா பேரவை செயலாளர்
இந்த நிலையில் கோவை ஜெயலலிதா பேரவை செயலாளர் அபினவ் ரவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கனகராஜ் இறப்பதற்கு முன்னர் அனுபவிடம் பேசியதாக தகவல்கள் எழுந்தன. இதை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

எஸ்டேட்டில் என்ன
எஸ்டேட்டில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்பது குறித்து அறிந்தவர்கள் ஜெயலலிதாவும் அவரது நெருங்கிய தோழி சசிகலாவும்தான். இவர்களில் ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை. பங்களாவில் என்னென்ன இருந்தன, என்னென்ன காணாமல் போனது என்பது குறித்து விவரங்கள் தெரிந்தால் மட்டுமே இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும்.

இன்று சசிகலாவிடம் விசாரணை
இதனால் அந்த பங்களாவை பற்றி நன்கு அறிந்த சசிகலாவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் வீட்டில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உள்ளிட்ட 8 பேர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சுமார் 2 மணி நேரத்தை கடந்து நடந்த நிலையில் உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விசாரணை நடத்தப்படும்.

100 கேள்விகள்
அவரிடம் 100 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொடநாடு பங்களாவில் என்னென்ன ஆவணங்கள், பொருட்கள், நகைகள், பணம் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்தன? இதற்கு முன்னர் சசிகலா கொடநாடு எஸ்டேட்டிற்கு எப்போது சென்றார்?

கொடநாடு எஸ்டேட் மேனேஜர்
கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன் தொடர்பாக கேள்விகளும் சசிகலாவிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ஏற்கெனவே இந்த வழக்கில் நடராஜன் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டும் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் இறந்த கனகராஜ் குறித்தும் கணினி ஆபரேட்டராக இருந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷ் குறித்தும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது தெரிகிறது.

கொடநாடு பங்களா
கொடநாடு பங்களாவில் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் எத்தனை பேர், யார் மூலம் வேலையாட்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்? கொலை, கொள்ளை வழக்கில் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்றும் சசிகலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கொலை, கொள்ளை சம்பவம் எப்போது யார் மூலம் உங்களுக்கு தெரியவந்தது?

பணம் நகை இருப்பது யாருக்கு தெரியும்?
கொடநாடு பங்களாவில் நகை, பணம் இருப்பது குறித்து சசிகலாவும் மேலாளர் நடராஜனுக்கு தெரிந்துள்ள நிலையில் இவர்களை தவிர வேறு யாருக்கெல்லாம் இந்த விஷயம் தெரியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. சசிகலா அளித்து வரும் வாக்குமூலம் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.