பெண்கள் விவகாரத்தில் சிறையில் இருக்க வேண்டியவர் ஜெயக்குமார்! கோவை செல்வராஜூக்கு வந்தது பாருங்க கோபம்
சென்னை: பெண்கள் தொடர்பான வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்க வேண்டியவர் ஜெயக்குமார் என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் ஆவேசம் காட்டியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது என அவர் வினவியுள்ளார்.
ஓபிஎஸ் ஸை பற்றி பேசுவதை ஜெயக்குமார் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவருக்கு கடுமையான முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளார் கோவை செல்வராஜ்.
பொதுக்குழு கூட்டத்தில் பிரச்சனை செய்ய ஓபிஎஸ் சதி..டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்ட ஜெயக்குமார்

கோவை செல்வராஜ்
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் கோமாளிகள் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி பேசுவதை ஜெயக்குமார் நிறுத்தாவிட்டால் நடப்பதே வேறாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், உதவிக் கேட்டு வரும் பெண்களை மானப்பங்கப் படுத்தியதற்காக ஜெயக்குமார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் இருக்க வேண்டியவர் எனக் கூறி கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் கோவை செல்வராஜ்.

கடும் எச்சரிக்கை
அன்று ஆட்சியும் அதிகாரமும் கையில் இருந்ததால் ஜெயக்குமாரை எதிர்த்து பெண்கள் புகார் கொடுக்க அஞ்சினார்கள் என்றும் ஆனால் இன்று அவரால் பாதிக்கப்பட்ட பெண்களை புகார் கொடுக்க வைத்தால் வழக்குப் பதியப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார் எனவும் சற்று கடுமையாகவே ஜெயக்குமாருக்கு எதிராக ஆக்ரோஷம் காட்டினார் கோவை செல்வராஜ். அதிமுக செய்தித் தொடர்பாளர் ஒருவரே அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரை இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

மொட்டைக் கடிதம்
ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என தனக்கு கடிதம் வந்துள்ளதாகவும் ஆனால் யாருடைய கையெழுத்தும் இல்லாமல் மொட்டைக் கடிதமாக வந்திருப்பதால் அது உண்மையிலேயே தலைமைக் கழகத்தில் இருந்து தான் வந்ததா அல்லது வேறு யாரேனும் அனுப்பினார்களா என சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். இதனால் அந்த பொதுக்குழுவுக்கு தாம் செல்ல மாட்டேன் எனக் கூறினார்.

டிராமா போடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி ஒன்றும் தெரியாததை போல் டிராமா போட்டு வருகிறார் என்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான துரோகத்திற்கும் சதிக்கும் மூலக்காரணமே அவர் தான் எனவும் கோவை செல்வராஜ் வசைபாடினார். இதனிடையே இதே கோவை செல்வராஜ் ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் மிகுந்த நெருக்கம் காட்டியவர் என்பதும் ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.