விரைவில் அதிமுக பொதுச் செயலாளராவார் ஓபிஎஸ்.. தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம்.. கோவை செல்வராஜ்
சென்னை: தமிழகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என அவரது ஆதரவாளரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. ஒற்றைத் தலைமைக்கான மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கே பெரும்பாலானோரின் ஆதரவு உள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டார்.
அதிலிருந்து கணிசமானோர் ஓபிஎஸ்ஸுக்கு போன் செய்து ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பஞ்சாயத்தை தீர்ப்பதற்காக ஓபிஎஸ் டெல்லி தலைமையின் உதவியை நாடினார். ஆனால் வெறுங்கையுடன் சென்னை திரும்பிவிட்டார்.
அதிமுக அலுவலகங்களில் ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றம்! மாவட்டச் செயலாளர்கள் அதிரடி!

அதிமுக பிரச்சினை
அதிமுக பிரச்சினை குறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் நீதிமன்றம் கூறிய பிறகும் பொதுக் குழுவை முறையாக நடத்தாமல் தீர்மானங்களை எடப்பாடி தரப்பினர் நிராகரித்துள்ளனர். நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

43 ஆவது விதி
அவர் கூறுகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என தெரிவித்துள்ளார். 43 ஆவது விதியின் கீழ் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதன்படி இருவரும் முழு அதிகாரம் பெற்றவர்கள். அதை செல்லாது என எப்படி சொல்ல முடியும்?

பதவி செல்லாது
இவர்களின் பதவிகள் செல்லாது என்றால் பொதுக் குழு உறுப்பினர்களின் பதவியும் செல்லாததுதானே! கட்சியை நாங்கள் நல்லபடியாக வழிநடத்துவோம். பிறகு எதற்காக நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாட வேண்டும். அன்று ஆட்சியை காப்பாற்ற மட்டும் ஓபிஎஸ் வேண்டுமா, அவரது காலில் இந்த முன்னாள் அமைச்சர்கள் விழுந்தார்கள்.

தொண்டர்கள்
தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம்தான் உள்ளார்கள். எங்கள் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர்களை பின்பக்கம் உட்காரவைத்துவிட்டு எடப்பாடி ஆதரவாளர்களை முன் இருக்கைகளில் உட்கார வைத்துவிட்டதால் ஓபிஎஸ்ஸுக்கு அனைவரும் எதிர்ப்பு மாதிரி பார்ப்பதற்கு தோன்றும். ஆனால் அது உண்மை அல்ல.

அரசியல் பயணம்
விரைவில் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை ஓபிஎஸ் மேற்கொள்வார். கட்சியையும் கைப்பற்றுவார், அவர்தான் அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்பார். கட்சியில் இருக்க பிடிக்காமல் ஓபிஎஸ் தலைமையை ஏற்க விரும்பாதவர்கள் கட்சியை விட்டு செல்லட்டும் என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சசிகலாவும் திங்கள்கிழமை முதல் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.