ரெய்டு நடத்தி மக்கள் கவனத்தை திசை திருப்புறாங்க சார்.. கொதிக்கும் ஜெயக்குமார்
சென்னை: மக்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பல்வேறு சோதனைகளைக் கண்ட அதிமுக இதனையும் சாதனைகளாக மாற்றும் என ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிமுகவின் முக்கியப் புள்ளிகளை குறிவைத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து வேலுமணி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அவர் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவரின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், மருமகள் வைஸ்னவி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கே.பி. அன்பழகன் 2016-21 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே தருமபுரி மாவட்டத்தில் கே.பி.அன்பழகன் மற்றும் அவர் தொடர்புடைய 42 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. காரியமங்கலம் அடுத்த கேரகொடாஅள்ளியில் உள்ள அவர் வீடு மற்றும் அவர்களது உறவினர்கள் என 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
ரூ.600 கோடிக்கு சொத்து சேர்த்த கே.பி.அன்பழகன்...ஆதாரம் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

200க்கும் மேற்பட்டோர் சோதனை
தருமபுரி நகரப்பகுதியில் மகன்களான சந்திரமோகன், சசிமோகன் அவருடைய மகள் வித்தியா மற்றும் அமைச்சருடைய சித்தப்பா வீடு உள்ளிட்ட பாலக்கோடு மாரண்டஅள்ளி 42 இடங்களில் வருமான வரித்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரெய்டுக்கு அதிமுகவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜெயக்குமார் பேட்டி
இந்த ரெய்டு குறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கே.பி அன்பழகனுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதில் உள்நோக்கம் உள்ளதாக கூறினார். மக்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதாகவும் ஜெயக்குமார் கூறினார்.

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்
அதிமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபடக் கூடாது என்பதற்காக சோதனை நடத்தப்படுகிறது. எத்தனையோ சோதனைகளை எல்லாம் எதிர்கொண்டு அதனை எல்லாம் அதிமுக சாதனையாக மாற்றியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சோதனைகளை எதிர்கொள்வோம்
சட்டசபைத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி சோதனை நடத்துகிறது என்றும் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். பல்வேறு சோதனைகளைக் கண்ட அதிமுக இதனையும் சாதனைகளாக மாற்றும்.

பொங்கல் பரிசு கலப்படம்
ரேசன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருட்களில் உள்ள கலப்படத்தால் திமுக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். மக்களின் வெறுப்பை திசை திருப்பவே கே.பி.அன்பழகன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தப்படுகிறது. இதற்கெல்லாம் அதிமுக பயப்படாது. தமிழ், தமிழர் என்று எப்போதும் பேசும் திமுக அரசு ஊசி உள்ளிட்ட கொள்முதலை வடமாநிலத்தவர்களுக்கு வழங்கியது ஏன் என கேள்வி எழுப்பினார்.

எம்ஜிஆர் இல்லை என்றால்
எம்ஜிஆரை பெரியப்பா என்று அழைக்கும் முதல்வர் ஸ்டாலின் அவரது பிறந்த நாளுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என கேட்டார். எம்ஜிஆர் இல்லையென்றால் கருணாநிதியே இருந்திருக்க மாட்டார். முதலமைச்சராக கருணாநிதியை முன்மொழிந்ததே எம்ஜிஆர் தான் என்று கூறிய ஜெயக்குமார், திமுகவை பட்டி தொட்டியெங்கும் வளர்த்ததே எம்ஜிஆர் தான் கருணாநிதி திரைக்கதை, வசனத்தால் அவரது குடும்பத்தில் இருந்தவர்களை பிரபலப்படுத்தாதது ஏன் என்று கேட்டார்.

நிராகரிக்கப்பட்ட ஊர்தி
2004, 2009 மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்த போது அலங்கார ஊர்தி நிராக்கரிக்கப்பட்ட போது எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன். இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி கலந்து கொள்ளாத நிலைக்கு செய்தி மற்றும் விளம்பர துறை தான் காரணம். சரியான வடிவில் வடிவமைக்காத காரணத்தால் அணிவகுப்பில் பங்கேற்க முடிய வில்லை, இதற்கு தமிழக அரசுக்கு தகுதியின்மை தான் காரணம் என்றார்.
நிராகரிப்பப்பட்டதற்கு முதலில் மேற்கு வங்க முதலமைச்சர் எதிர்ப்புப் தெரிவித்த பின்னர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.

வரலாற்றை மாற்றாதீர்கள்
தனது பெயரில் மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்கியதே எம்ஜிஆர் தான், இது அப்போதைய சுகாதார துறை அமைச்சர் ஹெண்டேவிற்கு தெரியும். வரலாற்றை மாற்றாதீர்கள் எனவும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். எம்ஜிஆர் நினைவிடத்தை அவர் பாரமரிப்பு என்ற பெயரில் வெறும் குடையை தான் வைத்தார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஜெயலலிதா தான் பெரிய அளவில் எம்ஜிஆர் நினைவிடத்தை மாற்றினார் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.