கோயில் நிலங்கள்.. இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் போட்ட சூப்பர் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் இந்துஅறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலங்களில் நிரந்தரமான கட்டிடங்களை கட்டக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரிமிப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு வருகின்றன. கோயில் நிலங்களை ஆக்கிரிமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள், பல சிறு கோயில்கள் சில மலைகள், குன்றுகள் மீதும் வனப்பகுதி நிலங்களிலும் அமைந்துள்ளது.
ரஜினி எப்படி இருக்கிறார்? நேரடியாக காவேரி மருத்துவமனை சென்று விசாரித்த முதல்வர்!

அடிப்படை வசதி
இக்கோயிலும், கோயிலைச் சுற்றியுள்ள நிலப்பகுதியை கோயில் பெயருக்கு பட்டா வழங்கினால் பக்தர்கள் பயன்பாட்டிற்கு எதுவாக அமையும். கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்கு தங்கும் கூடங்கள் அமைத்தல், அவர்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வாகன பாதுகாப்பு மையங்கள் அமைத்தல், குளியலறை மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருதல் போன்ற பொது நலன் கருதி செய்யப்பட வேண்டிய அத்தியாவசிய மேம்பாட்டு பணிகளுக்கு பிற வகைப்பாடுகளில் உள்ள கோயில் மற்றும் கோயிலைச் சுற்றி உள்ள புறம்போக்கு வனப்பகுதி நிலங்களைகோயில் பெயரில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டு உரிய ஆணை வழங்க ஆவன செய்ய வேண்டுமென ஆணையரால் கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டு அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது.

உயர்நீதிமன்றம்
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளில் கீழ்க்கண்டவாறு பொதுவான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதில், கோயில் புறம்போக்கு நிலங்கள் நீண்டகால பயன்பாட்டில் இருந்தாலும், இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டத்தின்படியும் பரிந்துரைக்கப்பட்ட உரிமைகளின் அடிப்படையில் நிலத்தை கோயில் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் .

தடையின்மைச் சான்று
கோயில் நிலங்களில் நிரந்தரமான கட்டுமானங்கள் கட்டக்கூடாது என்றும், வருவாய்த்துறை பிற பயன்பாட்டிற்கு உட்படுத்தக்கூடாது எனவும், மேலும் கோயில் புறம்போக்கு நிலத்தை மறுவகைப்படுத்தி பட்டா வழங்க முற்பட்டால் அதற்கு முன்னர், அறநிலையத்துறை ஆணையரின் தடையின்மைச் சான்று பெற வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனே அகற்றுங்கள்
எனவே, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் அனுபவத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களை சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மேற்கண்ட உத்தரவுகளின் அடிப்படையில் கோயிலுக்கான உரிமையை பேணி பாதுகாத்திட, கோயில் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு ஏதும் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அதனை அகற்றி கோயில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது