முட்டுக்காடு அருகே நடு ரோட்டில் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்.. குஷ்பு அதிரடி கைது
சென்னை: திருமாவளவனுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்க சென்றபோது நடுவழியில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார் பாஜக பிரமுகரான நடிகை குஷ்பு.
மனுஸ்மிருதி நூலில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி யூடியூப் சேனல் ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் பேசியிருந்தார்.
பெண்களை திருமாவளவன் இழிவு செய்து விட்டார் என்றும், மனுஸ்மிருதியில் அதுபோன்ற எந்த வார்த்தையும் இல்லை என்றும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன் மீது வழக்கு
திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், திருமாவளவனும் அவருக்கு ஆதரவாக இருக்கும், திமுக தலைவர் ஸ்டாலினும், தமிழகத்தில் எங்கும் வெளியே நடமாட முடியாத அளவுக்கு பெண்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று பாஜக தலைவரும் முருகன் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

திருமாவளவனுக்கு எதிராக போராட்டம்
அதேபோல ஈரோடு மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருமாவளவன் நேற்று சென்ற போது பாஜக மற்றும் இந்து அமைப்பினர் அவருக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர் காரை முற்றுகையிட சென்ற போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் வலதுசாரியினர் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பையும் போலீசார் கைது செய்தனர். காவல்துறையின் வாகனத்தின் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

சட்டம்-ஒழுங்கு
இது போன்ற ஒரு சூழ்நிலையில்தான் குஷ்பு தலைமையில் பாஜக மகளிர் அணியினர் திருமாவளவனின் மக்களவை தொகுதியான சிதம்பரத்தில் இன்று தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதேநேரம் பாஜகவை எதிர்த்து தாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று விடுதலை சிறுத்தைகள் அறிவித்தனர். எனவே இரு தரப்பு போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். போராட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கில் பாதிப்பு ஏற்படும் என்று காவல்துறை நினைப்பதால் குஷ்பு உள்ளிட்டோரின் போராட்டத்திற்கு அனுமதி தரமுடியாது என்று அறிவித்தனர்.

வாகன தணிக்கை
இருப்பினும், தடையை மீறி சிதம்பரத்தில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்தது. இதில் நடிகை குஷ்பு பங்கேற்பதாக இருந்தது. குஷ்பு போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கில் பாதிப்பு ஏற்படும் என்று சந்தேககித்த போலீசார் சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

குஷ்பு கைது
மாமல்லபுரம் டிஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது இன்று காலை முட்டுக்காடு அருகே குஷ்பு சென்ற காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர் போலீசார். மேலும் அங்கேயே குஷ்புவை கைது செய்தனர். போராட சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் சமீபத்தில் இணைந்தார் நடிகை குஷ்பு. இதன் பிறகு தற்போது இந்த சம்பவத்தால் முதல் முறை அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.