• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

உயிர்தான் முக்கியம்..கொரோனாவைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கலாம் - டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: வீண் விமர்சனங்களை விட விலைமதிப்பற்ற மக்களின் உயிர்கள் மிகவும் முக்கியமானவை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். ஊரடங்கு என்றால் எவரும் வெளியில் வரக்கூடாது. சாலைகளில் அவசர ஊர்தி தவிர மற்ற வாகனங்கள் வலம் வரக் கூடாது. அந்த அளவுக்கு மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா கால லாக்டவுன் பற்றி தனது முகநூல் பதிவில் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓரளவு குறைந்தாலும், உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்த எந்த கவலையும், பொறுப்பும் இல்லாமல் சாலைகளில் வாகனங்களில் வலம் வருவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்திருப்பது மிகவும் அச்சமளிக்கிறது. ஒரு சில நகரங்களைத் தவிர மற்ற நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஊர் சுற்றுவோரை கட்டுப்படுத்த அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

Life is important..coupling drastic action to control the corona - Dr. Ramdoss

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள் கட்டுப்பாடின்றி வலம் வந்ததை தொடர்ந்து சுட்டிக்காட்டியதுடன், ஊரடங்கை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 14ஆம் தேதி முதல் ஊரடங்கு தீவிரமாக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த 3 நாட்கள் மட்டும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் அனைத்து சாலைகளிலும் மக்கள் கட்டுப்பாடின்றி வலம் வரத் தொடங்கி விட்டனர். இது ஆபத்தானது.

சென்னை அண்ணா சாலையில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் குவிந்தன. காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து, வாகனத் தணிக்கை மேற்கொண்டு, தேவையானவர்களை மட்டும் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதித்தனர். ஆனால், அதையும் கடந்து சென்னையின் பெரும்பான்மையான சாலைகளில் அதிக அளவில் வாகன நடமாட்டத்தை காண முடிந்தது.

சென்னையிலாவது தேவையின்றி சுற்றித் திரியும் வாகனங்களை தடுத்து நிறுத்தவும், கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், தமிழகத்தின் மற்ற நகரங்களில் அத்தகைய தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக கடலூர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் திருவிழா போன்று சாலைகளில் இரு சக்கர ஊர்திகளிலும், மகிழுந்துகளிலும் வலம் வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதே நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் தமிழகத்தின் சாலைகளே கொரோனா தொற்று மையங்களாக மாறி விடக்கூடும். இதை மக்கள் தான் உணரவில்லை என்றால், அரசும், காவல்துறையும் கூட உணராதது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவிலேயே தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. இது நமக்கு பெருமையளிக்கும் விஷயமல்ல... கவலையளிக்கும் விஷயமாகும். தினசரி கொரோனாத் தொற்று 60 ஆயிரத்திற்கு மேல் பதிவான மராட்டியம், 50 ஆயிரத்துக்க்கும் மேல் பதிவான கர்நாடகம், 40 ஆயிரத்திற்கும் மேல் பதிவான கேரளம், கட்டுப்பாடின்றி கொரோனா பரவல் இருந்த உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது.

மராட்டியம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனாத் தொற்று 30 ஆயிரத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் அந்த மாநிலங்களில் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவது தான். இந்தியாவிலேயே தினசரி தொற்று 30 ஆயிரத்திற்கும் அதிகமாக 33,000 என்ற அளவைக் கடந்திருப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான். இதற்குக் காரணம் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அரசாலும், மக்களாலும் மதிக்கப்படாமல் காற்றில் பறக்கவிடப்படுவது தான்.

கொரோனா ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 335ஐ தாண்டி விட்டது. கணக்கில் வராத உயிழப்புகள் ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும். நமக்கு நெருக்கமானவர்கள், நம்மை நேசிப்பவர்கள், நம்மால் நேசிக்கப்படுபவர்கள், குடும்ப உறவுகள், நண்பர்கள், அண்டை வீட்டார் என பலரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இவ்வளவுக்குப் பிறகும் மக்கள் அச்சமின்றியும், பொறுப்பின்றியும் சாலைகளில் வலம் வருகிறார்கள் என்றால் அவர்களை என்ன சொல்வது?

தமிழக அரசுக்கு மீண்டும் மீண்டும் நான் சொல்வது என்னவென்றால் மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தான் ஆக வேண்டும். அவ்வாறு செய்வதால் எத்தகைய விமர்சனங்கள் எழுந்தாலும் கவலைப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

வீண் விமர்சனங்களை விட விலைமதிப்பற்ற மக்களின் உயிர்கள் மிகவும் முக்கியமானவை. ஊரடங்கு என்றால் எவரும் வெளியில் வரக்கூடாது. சாலைகளில் அவசர ஊர்தி தவிர மற்ற வாகனங்கள் வலம் வரக் கூடாது. அந்த அளவுக்கு மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கசப்பு மருந்துகள் எல்லாம் அடுத்த சில வாரங்களுக்குத் தான். கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விட்டால் அதன்பின் மக்கள் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் வலம் வரலாம் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை கடுமைப்படுத்துவதற்காகவும், சாலைகளில் வாகனப் போக்குவரத்தைத் தடுப்பதற்காகவும் தமிழக சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை, ஊர்க்காவல் படை ஆகியவற்றை சாலைகளில் நிறுத்த வேண்டும். தேவைப்பட்டால் மத்திய துணை இராணுவப் படைகளையும் தமிழகத்திற்கு அழைக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் தனது முகநூலில் அறிவுறுத்தியுள்ளார்.

English summary
PMK Founder Dr. Ramadoss has posted his face book page, the lives of precious people are more important than vain criticism. Curfew means no one should come outside. Vehicles other than emergency vehicles should not be allowed on the roads. He also said that more drastic measures should be taken to that extent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X