சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொஞ்சம் பிளானிங்.. கொஞ்சம் உழைப்பு.. அவ்வளவுதான் வெற்றி ஃபார்முலா!

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளிக்கு ஊருக்கு போகலாம்னு டிக்கெட் போடப் போனா டிரெயின், பஸ் எதுலயும் டிக்கெட் இல்லே... அப்படியே இருந்தாலும் யானை விலை, குதிரை விலை போட்டிருக்கானுங்க... என்று அலுத்துக் கொண்டார் நண்பர் ஒருவர். இப்படி கடைசி நேரத்தில் சென்று முட்டுவதால் தேவையில்லாத அலைச்சல், மன நிம்மதி கெடுறது, பண விரயம் என்று நிறைய பிரச்னைகளை நாம அடிக்கடி சந்திச்சிருப்போம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு. எதையும் திட்டமிட்டு செய்யுங்க என்பதுதான்.

வாழ்க்கையில நாம தினமும் எத்தனையோ விஷயங்களை செய்றோம். எல்லாத்துக்கும் திட்டம் போட்டு பிராஜக்ட் ரிப்போர்ட் ரெடி பண்ணி வெச்சிகிட்டு களத்துல இறங்க முடியாது. ஆனால், நம்ம வாழ்க்கையையே புரட்டிப் போடுற விஷயங்களுக்காவது நாம கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணித்தான் ஆகணும். இல்லேன்னா, ஒவ்வொரு முறை நீங்க விடும் அம்பும் குறி தவறித்தான் போகும். அப்புறம் உங்க நிலைமை கரடியே காறித் துப்பின 23ஆம் புலிகேசி மாதிரி ஆகிரும். நாஞ்சில் சம்பத் மாதிரி, துப்பினா தொடச்சிக்குவேன் என்று சொல்பவர்கள் மேல்கொண்டு படிக்க வேண்டாம். வாழ்க்கையில கொஞ்சம் உருப்படலாமே என்று ஆசைப்படுபவர்கள் மட்டும் தொடர்ந்து படிங்க.

little planning little hard work that is the formula for success

பிளான் பண்ணி ஒரு விஷயத்துல இறங்கினாலே, பாதி ஜெயிச்ச மாதிரிதான். ஒரு விஷயத்தை எப்படி செஞ்சா சிறப்பா வரும்னு நாம கொஞ்சம் சீரியஸா சிந்திக்க ஆரம்பிச்ச பிறகுதான் மூளை அந்த விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்குமாம். அதேபோல ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் திட்டமிட்டு, அந்த திட்டத்தை மெருகேற்றிகிட்டே போனா, அது மெல்ல ஆழ்மனதிலும் இடம்பிடிக்க ஆரம்பித்துவிடுமாம். ஒரு விஷயம் ஆழ்மனதிற்குள் போய்விட்டால், பின்னர் நம்ம ஆழ்மனசு அந்த விஷயத்தை வெற்றிகரமா முடிச்சு கொடுத்துடும் என்கிறார்கள். நம்மூரில் குறிப்பிட்ட மந்திரத்தை 108 முறை சொல்லு, 1008 முறை சொல்லு என்று சொல்வதன் பின்னால் உள்ள உளவியல் இதுதான். குறிப்பிட்ட விஷயம் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தபடி ஒரு மந்திரத்தை பலமுறை சொல்லும்போது, அந்த விஷயம் மீதான பிடிப்பும், உறுதியும் ஆழ்மனதில் அதிகரித்துக் கொண்டே போகுமாம். அப்புறம் என்ன.. அந்த விஷயம் நீங்க நினைச்சா மாதிரியே சிறப்பா நடந்துடும்.

திட்டமிடுதல், வியூகம் வகுத்தல் எல்லாம் ஒழுங்கா செய்தால் தான் இங்கே ஆட்சியையே பிடிக்க முடியும். கலைஞர் கலர் டிவி கொடுத்தது, அம்மா விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் கொடுத்து எல்லாமே இப்படிப்பட்ட அதிரி புதிரி வியூகங்கள்தான். அதிலும் இலவசம்னு சொன்னா மக்கள் தப்பா எடுத்துப்பாங்களோன்னு, விலைஇல்லா என்று சொன்னாங்க பாருங்க, அது எல்லாமே நுணுக்கமான வியூகம்தான். அவர்கள் தாங்களாகவே தங்களுக்கான வியூகங்களை வகுத்தார்கள். இன்றைய அரசியல்வாதிகள் பிரசாந்த் கிஷோர் மாதிரி வியூக வகுப்பாளர்களின் உதவியை நாடுறாங்க. ஏன்னா, எந்த மாதிரி வாக்கு வங்கியை வசீகரிக்க என்ன மாதிரி வியூகம் வகுக்கணும் என்பதில் அவர்கள் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.

போருக்கும், தேர்தலுக்கும் மட்டும்தான் வியூகங்கள் உதவும் என்று நினைத்துவிடாதீர்கள். நம்முடைய அன்றாட வாழ்க்கையில, புது வேலையில சேருவதில் இருந்து, இருக்கிற வேலையில பிரமோஷன் வாங்குற வரைக்கும் சரியா வியூகம் அமைச்சு செயல்பட்டா வெற்றி நிச்சயம், பாஸ்.

எனக்கு தெரிஞ்ச ஒரு அரசியல்வாதி. கடந்த தேர்தலில் அவங்க ஊர்ல அமோக வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சாரு. அதுக்கு பின்னாடி இருந்த வியூகம் ரொம்ப சிம்பிள். எதிர்கட்சி காரங்க நாங்கள் ஆட்சிக்கு வந்தா, பூரண மதுவிலக்கு கொண்டு வர்ரோம்னு தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்காங்க. நம்ம அண்ணன் என்ன பண்ணாரு தெரியுமா?

அவர் ஊர்ல இருக்கிற டாஸ்மாக் கடைக்காரங்க கிட்டே சொல்லி, கடைக்கு வர்ர குடிமகன்கள் கிட்டே எல்லாம், சரக்கு கொடுக்கும்போது, இப்போவே நல்லா குடிச்சிக்க, இனிமே குடிக்கவே முடியாது, தேர்தல் முடிஞ்சு எதிர்கட்சி ஆட்சிக்கு வந்தா கடை இருக்காது, என்று சொல்ல சொல்லியிருக்கிறார். எல்லா குடிமகன்கள் கிட்டேயும் இதே மந்திரத்தை ஓதியிருக்காங்க. எதிர்பார்த்தா மாதிரியே மந்திரம் நல்லா வேலை செஞ்சிடுச்சு. எதிர்கட்சி ஜெயிச்சாதானே கடை இருக்காது, அதனால அண்ணனுக்கே குத்துவோம்னு குடிகாரர்கள் மொத்தமா சேர்ந்து அண்ணன் சின்னத்துல குத்திட்டாங்க. ஒரே ஒரு அறிவிப்புதான். அலட்டிக்காம ஜெயிச்சிட்டாரு.

எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்... என்று நம்ம 'சங்கிமங்கி' வடிவேலு சொன்னது சாதாரண விஷயம் கிடையாது. அது ஒரு தேவ ரகசியம். அட ஆமாங்க, எவ்ளோ பெரிய பெரிய மனுஷன்லாம் திட்டமிட்ட வியூகத் தாக்குதலுக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லாம போயிருக்காங்க. ஒரு பிரதான சேனலில் ஒருமுறை சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டூப்பர் புதுப்படம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை போடுவதாக விளம்பரம் கொடுத்திருந்தார்கள். அந்த படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி கிட்டத்தட்ட தமிழர்கள் எல்லோரும் விரும்பிப் பார்த்த மெகா ஹிட் படம். மற்ற சேனல்களை நிச்சயம் மக்கள் பார்க்க மாட்டாங்க என்ற நிலை. அந்த பிரதான சேனலின் எதிர் சேனல் என்ன செஞ்சாங்க தெரியுமா? சூப்பர் ஸ்டாரின் ஆரம்ப கால சூப்பர் டூப்பர் ஹிட் படம் ஒன்றை எடுத்து, இந்த புதுபடம் ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் முன்னாடி போட்டுட்டாங்க. அந்த படத்தை இன்றைய டீன் ஏஜ் பசங்க பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே அதைப் பார்க்கலாமே என்று பலர் நினைத்துவிட்டார்கள். விளைவு, கூட்டம் இரண்டாக பிரிந்துவிட்டது. இதுதான் வியாபார தந்திரம்.

வியூகம் வகுப்பதில் நீங்கள் வல்லவராக இருந்தால் மட்டும் போதாது. உங்கள் போட்டியாளர் உங்களை விட வல்லவராக இருந்தால், நீங்க அதைவிடவும் அதிக வல்லவராக இருக்கணும். அப்பதான் மார்க்கெட்ல நிக்க முடியும். இதுக்கு ஒரு அருமையான உதாரணம் அண்மையில் அமெரிக்காவில் நடந்தது. பிரபல பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளான பெப்ஸி - கோக் இரண்டும் விளம்பரத்துல எப்படி சண்டை போட்டுப்பாங்கன்னு நாம நிறைய பார்த்திருக்கோம். அந்த மாதிரி பர்கர் உணவுல போட்டி போடக் கூடிய அமெரிக்க நிறுவனங்கள்தான் Burger King மற்றும் McDonald's இரண்டும்.

சமீபத்துல McDonald's ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க.

அதாவது தன்னுடைய Big Mac என்ற பர்கரின் ஒருநாள் விற்பனை தொகை மொத்தத்தையும் புற்றுநோயாளிகளின் நலனுக்காக கொடுக்கப் போறோம்னு சொன்னாங்க. உடனே அந்த கம்பெனிக்கு பயங்கரமான பப்ளிசிட்டி. போட்டி நிறுவனமான Burger King என்ன செஞ்சாங்க தெரியுமா? இங்கதான் அவங்களோட வித்தியாசமான வியூகத்தை நாம கவனிக்கணும். McDonald's நிறுவனத்தின் அறிவிப்பு ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம், இதுல நாங்களும் எங்களால் முடிஞ்ச பங்களிப்பை செய்ய விரும்புறோம், அதனால எல்லோரும் Big Mac வாங்குறதுக்கு வசதியா அன்னைக்கு ஒரு நாளைக்கு எங்களின் Big Whopper பர்கரின் விற்பனையை நிறுத்தி வைக்கிறோம். எல்லோரும் போய் Big Mac வாங்கி சாப்பிடுங்க, நாம புற்றுநோயாளிகளுக்கு உதவுவோம்னு சொல்லிட்டாங்க. இது எப்படி இருக்கு?

வியாபாரம் பண்றவங்க மட்டும்தான் வியூகம் பத்தி யோசிக்கணும்னு கிடையாது. நான் ஏற்கனவே சொன்னா மாதிரி, நீங்க விரும்பின விஷயங்களை அடையுறதுக்கும் வியூகம் ரொம்ப ரொம்ப முக்கியம். தினமும் முயற்சி பண்ணா நீங்களும் ஒரு சிறந்த வியூக வகுப்பாளராக மாற முடியும்னு உளவியல் நிபுணர்கள் சொல்றாங்க. அதனால் இனிமே பெரிய விஷயம் எது பண்றதா இருந்தாலும், அதை எப்படி எல்லாம் செய்யலாம் என்று யோசிச்சு, விரிவா திட்டம் போட்டு செய்யுங்க. அதுக்கப்புறம் எப்பவுமே வெற்றி உங்கள் பக்கம்தான். வாழ்த்துகள்.

- கௌதம்

English summary
Lut us have some planning, little hard work and that is enough for the Success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X