தகிக்கும் பாஜக? போனை எடுக்காத அதிமுக தலைகள்.. நெல்லையில் "கேம்ப்" அடித்த நயினார் நாகேந்திரன்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் தனி தனியாக ஆலோசனை செய்து வருகின்றன. இதில் சென்னையில் பாஜக நடத்தி வரும் ஆலோசனையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதான கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தீவிரமாக ஆலோசனைகளை செய்து வருகிறது. அதிமுக சார்பாக வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
கயல்,சுந்தரி, ரோஜா,துளசி எல்லாருக்குமே இந்த வாரம் அதிர்ச்சியாவே இருக்கே - கிரக பலன் எப்படி இருக்கு?

அதிமுக கூட்டம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கட்சி கூட்டம் நடக்கிறது. கூட்டணி கட்சியான பாஜகவிற்கு எந்த இடங்களை எல்லாம் ஒதுக்குவது. பாஜகவிற்கு எத்தனை மேயர் பதவிகளை கொடுப்பது என்ற ஆலோசனையை அதிமுக தலைமை செய்ய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுக தரப்பு ஒரு பக்கம் பரபரப்பாக காணப்படுகிறது.

பாஜக கூட்டம்
இன்னொரு பக்கம் பாஜக சார்பாகவும் இன்று ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. பாஜகவின் பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதில் அதிமுகவிடம் கோவை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களின் மேயர் பதவிகள், நகராட்சி பதவிகள் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்கும் முடிவில் பாஜக இருக்கிறதாம்.

அதிமுக விரும்பவில்லை
ஆனால் அதிமுகவோ பாஜகவிற்கு அதிக மேயர் இடங்களை ஒதுக்கும் எண்ணத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு பாஜக சார்பாக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை அச்சமின்றி கேள்வி எழுப்பி வருகிறார்.

அதிமுக கோபம்
சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். இவரின் இந்த பேச்சு அதிமுகவினரை கடுமையாக சீண்டி உள்ளது. இதற்கு நயினாரும், அண்ணாமலையும் விளக்கம் அளித்துவிட்டாலும் கூட அதிமுக நிர்வாகிகள் இன்னும் சமாதானம் அடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகாவை பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு அதிமுக வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

போனை எடுக்கவில்லை
இதனால்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பாஜக நிர்வாகிகள் சிலர் போன் செய்ததற்கும் அதிமுக நிர்வாகிகள் போனை எடுக்கவில்லை என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரன் அப்படி பேசி இருக்ககூடாது . இது அதிமுக தலைமையிலான கூட்டணி என்பதை அவர்கள் மறந்துவிட்டனர் என்று அதிமுக நிர்வாகிகள் புகார் வைத்து வருகிறார்களாம். மேலும் நயினார் நாகேந்திரன் தரப்பு பாஜகவிற்கு நெல்லை மேயர் பதவியை பெற திட்டம் போட்டதாக கூறப்படுகிறது.

வழங்க கூடாது
ஆனால் அவரின் சமீபத்திய ஸ்டேட்மென்ட் காரணமாக நெல்லை மேயர் பதவியை பாஜகவிற்கு கொடுக்க கூடாது என்ற முடிவில் அதிமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக தரப்பு கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறது. அதோடு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நயினார் வரக்கூடாது என்றும் அதிமுக தலைமை கோரிக்கை வைத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் சென்னையில் இருப்பதை தவிர்த்துவிட்டு தற்போது நயினார் நாகேந்திரன் நெல்லையில் கேம்ப் அடித்து உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.