சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உளறிக் கொட்டுனாதான் நீ தலீவரு... லோக்கல் டூ லோகம் வரை.. Y பிளட், சேம் பிளட்!

Google Oneindia Tamil News

சென்னை: "ஒரு மாதிரி எல்லாம்... ஒரு மாதிரிதான், ஆனா... ஒரே மாதிரி இல்லை" என்று பட்டிமன்ற பேச்சாளர் அறிவொளி கூறுவார்.

ஒரு மன நல ஆஸ்பத்திரிக்கு அமைச்சர் ஒருவர் பார்வையிட வந்திருந்தாராம். அப்போது ஒரு வார்ட்டில் இருந்த மன நலம் பாதிக்கப்பட்டவர் லைலா.. லைலா.. என்று கத்துக்கிட்டே இருந்தாராம். ஏன் இவர் இப்படி கத்துறாருன்னு அமைச்சர் கேட்டாராம். இவர் லைலான்ற பொண்ணை காதலிச்சாரு, ஆனா லவ் ஃபெயிலியர் அதனால மனசு பாதிச்சிருச்சுன்னு சொன்னாங்களாம்.

local to world leaders bluff indiffrently

அடுத்த வார்டுக்கு போனா அங்கேயும் ஒருத்தர் லைலா.. லைலா.. என்று கத்திக்கிட்டு கிடந்தாராம். இவரும் லவ் ஃபெயிலியரான்னு கேட்டாராம் அமைச்சர். இல்லீங்க சார், இவர் அந்த லைலாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு, அதனால இப்படி ஆயிட்டாருன்னாங்களாம். அவரும் "ஒரு மாதிரி"தான், இவரும் "ஒரு மாதிரி"தான். ஆனா.. இரண்டு பேரும் "ஒரே மாதிரி" கிடையாது, என்று அறிவொளி உதாரணம் சொல்வார்.

அவர் சொல்றது இருக்கட்டும், நீங்க ஏன் இப்போ இதை சொல்றீங்கன்னு கேட்கறீங்களா? காரணம் இருக்கு. சமீப காலமா நம்ம ஊர் அரசியல்வாதிகள் பேசுறதை கேட்கும்போதெல்லாம் எனக்கு இது நியாபகத்துக்கு வந்திருது.

புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதமா உதவியது என்று கேட்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அய்யா சாமீ, புவி ஈர்ப்பு விசை பத்தி சொன்னது ஐன்ஸ்டீன் இல்லீங்கோ, அது நியூட்டன்னு ஒரு ஆளுங்கோ என்று ட்விட்டரில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். இதேபோல ஓலா, ஊபர்ல பொதுமக்கள் அதிகம் பயணம் பண்றதுனாலதான் கார் விற்பனை சரிஞ்சிருச்சின்னு சொல்லி நம்மையெல்லலாம் ஒரேசமயத்தில் சிலிர்க்கவும், சிந்திக்கவும் வெச்சாரு நம்ம நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

local to world leaders bluff indiffrently

மத்தியில்தான் இப்படி என்று நினைத்துவிடாதீர்கள். மாநிலத்தில் இதைவிட அதிரடிப் பேச்சுகளை அடிக்கடி கேட்க முடிகிறது. சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என்கிறார் முதலமைச்சர் எடப்பாடி, மணிமேகலை காப்பியத்தை எழுதியவர் கீர்த்தனார் என்கிறார் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின். சீத்தலை சாத்தனாரை கீர்த்தனார் என்று ஸ்டாலின் மாற்றிச் சொன்னதை சமூக வலைதளங்களில் வளைத்து வளைத்து கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் எல்லாம் ஒட்டுமொத்தமா வேற லெவல். அவங்களுக்கு நிகர் அவங்கதான்.

விஜயகாந்த் சொல்வதைப் போல இதையெல்லாம் பார்க்கும்போது "ஆத்திரங்கள் வருது மக்களே" என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் அதே விஜயகாந்த்தும் பல நேரங்களில் குழப்பமாக பேசியுள்ளதை நினைக்கும்போது வந்த ஆத்திரம் அப்படியே உள்ளே போய்ருது மக்களே. நாம் மட்டும்தான் இப்படி அரசியல்வாதிகளின் அரைகுறை பேச்சுகளால் அவதிப்படுகிறோம் என்று நினைத்துவிடாதீர்கள். உலகம் முழுவதுமே இதுமாதிரி காமெடிகளை பெரிய பெரிய அரசியல் தலைகள் எல்லாம் அசால்டாக அரங்கேற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

உலகத்துக்கே பெரியண்ணன் போல ரவுசு விடும் அமெரிக்காவிலும் இதே அக்கப்போர்தான். அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் அதிபர் டிரம்ப் அதிரடிக்கு பெயர் போனவர் என்பது உலகத்துக்கே தெரியும். பிரபல அரசியல்வாதியான மிட் ரோம்னி பென்குயின் போல நடக்கிறார் என்று கேலி செய்தது முதல் தனது பொதுக்கூட்டத்தில் எதிர்ப்புக் குரல் எழுப்பியவரை "வந்தன்னா மூஞ்சியிலயே குத்திருவேன்" என்று அசால்ட் காட்டுவது வரை டிரம்ப் பட்டையை கிளப்புகிறார். "சீனாவுக்கு டிரம்ப் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவரது மிக மிகப்பெரிய மூளையை சீனா மதிக்கிறது." இப்படி யார் சொன்னான்னு கேட்கிறீங்களா? நம்ம டிரம்பேதான் தன்னைப்பற்றி தானே இப்படி புகழ்ந்து கூறினார்.

ஒருமுறை விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ட்ரம்ப், அங்கிருந்த புகைப்படக்காரர்களைப் பார்த்து, எல்லாரையும் அழகா, ஒல்லியா தெரியுற மாதிரி படம் எடுங்க என்றார். இதை கேட்டதும் தானே ஒரு நடமாடும் அணுகுண்டு போல இருக்கும் வடகொரிய அதிபர் கிம்மின் முகம்போன போக்கையும் அங்கிருக்கும் கேமராக்கள் படம் பிடிக்கத் தவறவில்லை. அடுத்த சில நாட்களுக்கு இதுதான் இணையத்தில் வைரல் கண்டென்டாக இருந்தது.

local to world leaders bluff indiffrently

கூகுளில் முட்டாள் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன் என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் எழுப்பப்பட்ட கேள்வி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும். நீங்கள் தேடும் வார்த்தைக்கு ஏற்ற பதிவுகளை தேடும்படிதான் கூகுள் அல்காரிதம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எதையும் உள்நோக்கத்துடன் நாங்கள் செய்யவில்லை என்று கூலாக கூறிவிட்டார் சுந்தர் பிச்சை. அப்படி என்றால் அந்த அளவுக்கு அண்ணன் அட்ராசிட்டையை கிளப்பியிருக்கிறார் என்று அர்த்தம்.

இன்னொரு சர்ச்சை நாயகர் ரஷ்ய அதிபர் புதின். உடலை உறுதியாக வைத்துக்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் புதின், அடிக்கடி தன் கட்டுடலை காட்டி மாஸ் கூட்டுவார். தற்காப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து தனது வீரத்தை பறைசாற்றுவார். சமீபத்தில் அரசுக்கு எதிராக மாஸ்கோவில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, புதின் ஜாலியாக மாஸ்கோ நகரில் பைக் ஓட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். நம்மூர் அரசியல்வாதிகள்போல் சில நேரங்களில் தடாலடி கருத்துகளையும் தெரிவிப்பார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு கொடுக்கப் போனார் புதின். அப்போது அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் வயாக்ரா மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு வெற்றிகளைக் குவியுங்கள் என்று வாழ்த்துவிட்டு வந்தார். ஒரு நாட்டின் அதிபர் இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா என்று கொதித்துக் கொந்தளித்துவிட்டார்கள் அந்த ஊர் சமூக ஆர்வலர்கள்.

local to world leaders bluff indiffrently

இன்னொரு அரிய வகை அரசியல்வாதி இருக்கிறார். அவர் தான் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டி. இவர் நம்மூர் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ரேஞ்சுக்கு பேசக் கூடியவர். இவர் அண்மையில் உதிர்த்த அரிய முத்து ஒன்றைக் கேட்டால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க. அப்படி என்ன சொன்னார் தெரியுமா? பெண்கள் அழகாக இருப்பதால்தான் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன என்பதை கண்டுபிடித்து நாட்டு மக்களிடம் சொன்ன தலைவர் இவர். பெண்கள் முதலில் சம்மதிக்க மாட்டார்கள், வேண்டாம் என்பார்கள். அதனால் தான் கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது என்று பலமாக சிரித்துக்கொண்டே ஜோக் அடித்தார். ஆனால் அந்த ஜோக்கை யாரும் ரசிக்கவில்லை, பெண்கள் மத்தியில் இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல அரசு தரப்பில் இதற்கு ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார்கள். அதாவது, அதிபர் சொன்ன ஜோக்கை ஏன் தேவையில்லாமல் பெரிதுபடுத்துகிறீர்கள், இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் கற்பழிப்பு குறித்த ஜோக்குகளை பெண்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது என்றார் அரசு செய்தி தொடர்பாளர். சூப்பரப்பு என்று தலையில் கை வைத்துக்கொண்டார்கள் பிலிப்பைன்ஸ் மக்கள்.

local to world leaders bluff indiffrently

அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ, நான் வாங்குற சம்பளம் என் குடும்பத்துக்கு பத்தல. சாப்பாட்டு அலவன்ஸ் பணமும் தர்ரதில்லை. எனக்கு இரண்டு மனைவிகள் இருப்பதால், குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாம ஒரே கஷ்டமா இருக்கு, என்று தன் ஏழ்மையை விளக்கியிருக்கிறார் இந்த எளிய அதிபர். இவரை எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியலையே என்று விழிபிதுங்கி கிடக்கிறார்களாம் அந்த நாட்டு மக்கள்.

எனவே உலகம் முழுக்க இப்படி அரசியல்வாதிகள் அச்சுபிச்சென்று பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் தான் அறிவொளி அன்றே சொன்னார், "ஒரு மாதிரி எல்லாம்... ஒரு மாதிரிதான், ஆனா... ஒரே மாதிரி இல்லை".

- கௌதம்

English summary
From local to world most of the Political leaders are bluffing in various occasions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X