சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாத்தான்குளம் மரணங்களுக்கு சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் - கவிஞர் வைரமுத்து

Google Oneindia Tamil News

சென்னை: சாத்தான்குளம் மரணங்களுக்கு சத்தியத்தால் எழுதப்படுகிற தீர்ப்பு வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்குதலில் தந்தை, மகன் இறந்த நிகழ்வு குறித்து கவிஞர் வைரமுத்து கூறியுள்ளதாவது:

சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர்; மனிதர்கள் மற்றும் தந்தை - மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால்தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகிவிட்டது. பெருமைக்கும் பேருழைப்புக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக் காவல்துறையைச் சிறுமைக்கு உள்ளாக்கிவிட்டது சிந்தி முடித்த சிவப்பு ரத்தம்.

 சாத்தான்குளம் சம்பவத்திற்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது - ப.சிதம்பரம் சாத்தான்குளம் சம்பவத்திற்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது - ப.சிதம்பரம்

இதயத்தில் விழுந்த இடி

இதயத்தில் விழுந்த இடி

சிறைக் கோட்டத்துக்குள் எத்துணையோ தனி மரணங்கள் நேர்ந்ததுண்டு. ஆனால், ஒரு குடும்பத்தின் தகப்பனும் மகனும் ஒரே நேரத்தில் இறந்துபோன சம்பவம் இதயத்தின் மத்தியில் இடிவிழச் செய்துவிட்டது. குற்றவாளிகள் வேறு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு. ஒரு விசாரணைக் கைதியைக்கூடக் குற்றவாளி என்று அழைப்பது பிழை; குற்றம் சாட்டப்பட்டவர் என்பதே சரி. ஒருவன் குற்றவாளி என்று தீர்மானிப்பது நீதிமன்றத்தின் பொறுப்பே தவிர காவல்துறையின் அதிகாரமன்று.

இது எந்த இந்தியாவில்?

இது எந்த இந்தியாவில்?

காவல்துறையின் அதிகாரம் என்பது உண்மைக்குள் செலுத்தப்படுவதே தவிர உடலுக்குள் செலுத்தப்படுவது அல்ல. 1928இல் விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதிராய், ஜேம்ஸ் காட் என்ற காவல்துறை அதிகாரியின் இடிகள் போன்ற அடிகள் தாங்கித்தான் இறந்துபோனார் என்பது வரலாறு. ஆனால், 2020இல் பச்சைத் தமிழர்கள் இருவர் சிறைக் கோட்டத்தில் செத்துப் போனார்கள் என்றால் நாம் பிறந்ததும் வாழ்வதும் பிரிட்டிஷ் இந்தியாவிலா? சுதந்திர இந்தியாவிலா?

யுத்த காயங்கள் போல ரத்த காயங்கள்

யுத்த காயங்கள் போல ரத்த காயங்கள்

விதைகளை மறைக்கலாம்; விருட்சங்களை மறைக்க முடியாது. உண்மை இப்போது விருட்சமாகிவிட்டது. மருத்துவ அறிக்கைகளும் நீதித்துறை ஆவணங்களும் தகப்பன் உடம்பிலும் மகன் உடம்பிலும் யுத்தக் காயங்கள் போன்ற ரத்தக் காயங்களை உறுதிபடுத்துகின்றன. அவர்கள் என்ன சமூக விரோதிகளா? தீவிரவாதிகளா? தங்கள் செல்போன் கடையிலிருந்து உலக நாடுகளுக்கு உளவு சொன்னவர்களா? அல்லது சீனா வெற்றிபெற வேண்டும் என்று செய்வினை செய்தவர்களா? நேர்மையாகப் பிழைக்க வேண்டுமென்று கடை விரித்தவர்கள். ஊடரங்கு விதிகளைச் சில நேரங்களில் மீறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊரடங்கை மீறியதற்காக உயிரடங்கு செய்வதா? செய்தி கேட்ட அன்று என்னால் இரவு உணவு அருந்த முடியவில்லை. இலக்கிய மனதுதான் வலிக்கிறது என்று பார்த்தால் எல்லா மனங்களும் அப்படியே வலித்துத் துடிக்கின்றன.

கால்பந்தாகிவிடும் கைதி

கால்பந்தாகிவிடும் கைதி

மெய்யான காவலர்கள் மேன்மைக்குரியவர்கள். கொரோனாவுக்காக உழைத்தவர்களுக்கு நாம் கும்பிட்டு நன்றி சொன்னோம். கொடுமையைக் காணும்போது கும்பிட முடியுமா? குமுறி அழுகிறதே மனது. காவல்துறைக்கென்று வகுக்கப்பட்ட விதிகளை மறந்துவிட்டோம். 1872இல் இயற்றப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தக் கூடாது; அவர்கள் மீது வசை மொழி வீசக்கூடாது என்று வகைப்படுத்துகிறது. ஆனால், விசாரணைக் கைதிகளின் உடல்கள் சில காவலர்களுக்கு விளையாட்டு மைதானங்களாகி விடுகின்றன. இரண்டு காவலர்களுக்கு மத்தியில் ஒரு கைதி கால்பந்தாகிவிடுகிறான்.

இனி என்ன செய்ய வேண்டும்?

இனி என்ன செய்ய வேண்டும்?

காவலன் என்பவன் எல்லா உயிர்களுக்கும் கண்களாகவும் உயிராகவும் இருந்து காவல் காப்பவன் என்று பதிற்றுப்பத்து இலக்கியத்தில் பழைய நீதி படைத்தவன் தமிழன். ஆனால், மக்களின் உயிரையும் கண்களையும் பறிப்பவனா காவலன்? பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வேண்டும். இனி இதுபோல் பரிதவிக்க விடமாட்டோம் என்ற உறுதிமொழி வேண்டும். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களின் வரம்புகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த அதிகாரம் கட்டுப்பாட்டில் செலுத்தப்படுகிறதா என்று கண்காணிக்கவும் வேண்டும்.

தேவை சத்தியத் தீர்ப்பு

தேவை சத்தியத் தீர்ப்பு

"காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று கவிதை படித்த இனத்தில் இந்துவும் - கிறிஸ்தவனும் - இஸ்லாமியனும் எங்கள் ஜாதியாக இருக்க மாட்டானா? இருக்க வேண்டும். அவனுக்கு இறப்பு வேண்டாம்; இருப்பு வேண்டும். சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும். இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

English summary
Here is Lyricist vairamuthu's comments on Sathankulam Lockup Deaths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X