மருத்துவ மேற்படிப்பு: அரசு மருத்துவர்களுக்கு குட் நியூஸ்! 2 சலுகைகளை வழங்க தடையில்லை- சென்னை ஐகோர்ட்
சென்னை: கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் என இரண்டுமே வழங்கத் தடையில்லை என்ற தனி நீதிபதி உத்தரவை இரண்டு நீதிபதி கள் கொண்ட அமர்வு உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள எம்டி, எம்எஸ் போன்ற முதுகலை மருத்துவ படிப்பில் உள்ள இடங்களில் 50% அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் மீதுள்ளவை தமிழக மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது.
வட கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை...சென்னைவாசிகளும் அனுபவிக்க தயாராகுங்கள்
அதில் கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் முன்னுரிமை அளித்து வந்தது.

வழக்கு
இந்நிலையில் இது குறித்து அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு எம்டி, எம்எஸ் முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் ஊக்கத்தொகை மதிப்பெண் வழங்கப்படும் எனக் கடந்த 2021 அக்டோபர் மாதம் அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஒன்று தான் வழங்க வேண்டும்
தமிழகம் முழுவதும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் 1968 இடங்கள் உள்ளது என்றும், இதில் 50 சதவீதம் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிடும் என்றும் மீதமுள்ள 969 இடங்கள் உள்ளதாகவும், அதில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்குக் கொடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர் .மேலும் ஊக்க மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்குவதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தனியார் மருத்துவமனையில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோவதாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே இதில் ஏதாவது ஒன்றைத்தான் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

தனி நீதிபதி உத்தரவு
இந்த வழக்கின் மீதான வாதப்பிரதிவாதங்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன்பு நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி தண்டபாணி, கிராமப்புற மருத்துவமனைகளில் பணி புரியும் மருத்துவர்களுக்கு இரண்டுமே வழங்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்கத் தடை இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

மேல்முறையீடு
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நீதிபதி பரேஷ் உபாத்யாயா, சக்திகுமார் சுகுமார குரூப் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர், அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்களில், மலைப்பகுதி அணுக முடியாத பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிவதாகவும் இதனால் பொதுமக்கள் தான் பயன் வருவதாகவும் தெரிவித்தனர்.

தள்ளுபடி
இதைத் தனி நீதிபதி ஆராய்ந்துதான் உரிய உத்தரவு வழங்கி உள்ளதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தனர். எனவே மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவு சரிதான் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.