ஈஷா அறக்கட்டளை மீது மேல் நடவடிக்கை தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமானங்கள் மேற்கொண்டதாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கக்கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி அருகே வெள்ளியங்கிரி அலை அடிவாரத்தில் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம்.
வனப்பகுதியின் அருகில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த யோகா மையம் அமைந்துள்ளது.

ஈஷா யோகா மையம்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பலர் இந்த மையத்தில் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு இங்கு 112 அடி உயரம், 500 டன் எடை கொண்ட ஆதியோகி சிலை திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு தான் சிவ ராத்திரி வெகு விமர்சிக்கக் கொண்டாடப்படும். அப்போது திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அங்குச் செல்வது வழக்கம்.

நோட்டீஸ்
இதனிடையே சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமானங்கள் மேற்கொண்டதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கடந்த நவம்பர் 19 ஈஷா யோகா மையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்தச் சூழலில் ஈஷா அறக்கட்டளை சார்பில் சி.ஆர். தினேஷ் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு
அந்த மனுவில் அவர், "எங்கள் வளாகத்தில் 2006 முதல் 2012 வரை 91,519 சதுர மீட்டர் அளவிற்குக் கட்டிடங்கள் கட்டப்பட்டு, உண்டு உறைவிட பள்ளி, யோகா பள்ளி ஆகியவை செயல்பட்டு வந்தது. 2014ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட புதிய சுற்றுச்சூழல் விதிகளின்படி 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டப்படும் கல்வி நிலையங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை. அந்த வகையில் கல்வி நிறுவனம் என்ற அடிப்படையில் தங்கள் கட்டிடத்துக்கும் சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவை என்பதால் விலக்கு கோரி விண்ணப்பித்து உள்ளோம். எனவே மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

நடவடிக்கை எடுக்கத் தடை
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டார், நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ஏற்கனவே சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "2014 அறிவிப்பாணையில் முன் தேதியிட்டு அமல்படுத்துவதாகக் குறிப்பிடப்படாத நிலையில், அதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் 2 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டனர்.