புத்தகபைகளில் அரசியல் தலைவர்கள் படம்.... உயர் நீதிமன்றம் வைத்த செக்
சென்னை: பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிட்டு, அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருப்பில் உள்ள, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அச்சிடப்பட்ட நோட்டு புத்தகங்கள், புத்தகப் பைகளைக் கைவிடும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது
குட்கா வழக்கு உயிர் பெறுகிறது: முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை

நீதிமன்றத்தில் வழக்கு
அந்த மனுவில், தற்போது இருப்பில் உள்ள நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களில் உள்ள முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வழங்கலாம் எனவும், அதை விடுத்து, இருப்பில் உள்ள நோட்டுகள், பைகளை விநியோகிக்காமல் தவிர்ப்பதன் மூலம் பொது மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவற்றை மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்க உத்தரவிட வேண்டும் எனவும் எதிர்காலத்தில் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் விரும்பவில்லை
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், முன்னாள் முதல்வர் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தகப் பைகள், 10 லட்சம் எழுதுபொருட்கள் வீணாக்கப்பட மாட்டாது என்றும், அவை மாணவர்களுக்குச் சரியான முறையில் விநியோகிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பள்ளி புத்தகப் பைகளில் படத்தை அச்சிடுவதை முதலமைச்சர் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், பள்ளி மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால் புத்தகப் பைகள், புத்தகங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை அச்சிட்டு, அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

தலைவர்கள் படத்திற்குத் தடை
அரசு நிதி விளம்பரத்திற்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் படங்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.



Click it and Unblock the Notifications





































