சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மரியம் பீவிக்களும், மாரியம்மாக்களும்.. வலி நிறைந்த அனுபவம்.. பிரதமருக்கு மதுரை எம்பி அனுப்பிய கடிதம்

பிரதமர் மோடிக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: கடிதங்கள் வெறும் காகிதங்கள் அல்ல.. அவை நெருக்கத்தை ஏற்படத்தக்கூடியது.. சொல்ல வரும் வார்த்தையைவிட மிக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.. உணர்வுபூர்வமாக மட்டுமில்லாமல், சில சரித்திர நிகழ்வுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது நிறைய தலைவர்களின் கடிதங்களும்கூட! அந்த வகையில் சமீபத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.. மரியம் பீவியின் கடிதத்தையும் இணைத்து அனுப்பி உள்ளார்.. யார் இந்த மரியம் பீவி? அந்த கடிதங்கள் என்ன? பின்னணி என்ன? அவைகளை பற்றின செய்திதான் இது!

திருச்சியை சேர்ந்தவர் மரியம் பீவி.. தன்னுடைய பிறப்புச் சான்றிதழை பெறுவதற்காக மதுரை மாநகராட்சி ஆபீசில் 2 வருஷமாக முயற்சி செய்து வந்திருக்கிறார்... இதற்காக திருச்சியிலிருந்து மதுரைக்கு அடிக்கடி பயணம் செய்து வந்துபோனார்.

ஆனால் கார்ப்பரேஷனில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இழுத்தடிப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது.. சான்றிதழும் கிடைக்கவில்லை.. இந்த சமயத்தில்தான் குடியுரிமைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் சு.வெங்கடேசன் கலந்துகொள்கிறார் என்ற தகவல் மரியம் பீவிக்கு கிடைத்தது.

நொந்து போனார்

நொந்து போனார்

அதனால் வெங்கடேசனை சந்தித்து மனு வழங்கலாம் என்று முடிவு செய்து அவரை சந்திக்க சென்றார். ஆனால் அந்த போராட்டத்துக்கு வெங்கடேனால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.. அதனால் மனம் நொந்துபோனார் மரியம் பீவி. உடனே அங்கிருந்தவர்கள், நேரில் சந்திக்க முடியாவிட்டால் என்ன, வெங்கடேசனுக்கு இதை மனுவாக அனுப்பி வையுங்கள் என்று சொல்லவும், அரைகுறை மனசோடு அதை மனுவை அனுப்பி வைத்தார் மரியம்பீவி!

மரியம் பீவி

மரியம் பீவி

தன் அலுவலகத்துக்கு வந்த இந்த கடிதத்தை வெங்கடேசன் படித்தார்.. உடனடியாக மாநகராட்சி அலுவலகத்துக்கு கடிதம் ஒன்றை எழுத.. அவர்களோ மரியம் பீவியை போனில் அழைத்து ஆபீசுக்கு வரசொல்லி, கையோடு பிறப்புச் சான்றிதழையும் கொடுத்து அனுப்பினர்.. 2 வருடமாக அலைந்து கொண்டிருந்த மரியம்பீவிக்கு இந்த சான்றிதழை பார்த்ததும் கண்களில் ஆனந்த நீர் பெருக்கடுத்தது.. உடனடியாக சு.வெங்கடேசனுக்கு மரியம் பீவி ஒரு நன்றி கடிதம் எழுதினார்.

நீண்ட ஆயுள்

நீண்ட ஆயுள்

அதில், "உயிர் உள்ளவரை நீங்கள் எனக்கு செய்த இந்த உதவியை மறக்க மாட்டேன்... இறைவா, என் அண்ணன் வெங்கடேசன் அவர்களும் அவரது குடும்பத்தாரும் அவரது நண்பர்களும் நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வத்தோடும் இருக்க வேண்டும். நோய் நொடி இல்லாத வாழ்க்கையையும் சாந்தியும் சமாதானமும் நிலைத்து நிற்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.

கடிதம்

கடிதம்

மரியம் பீவி எழுதிய இந்த கடிதம் வெங்கடேசனுக்கு நெகிழ்ச்சியை தந்தது.. உடனடியாக தன் ஃபேஸ்புக்கில் இதை பதிவிட்டார்.. "நாடாளுமன்ற உறுப்பினரின் பணிக்காக எனக்கு எழுதப்பட்ட கடிதம்தான் அது... ஆனால் அதில் இருந்த வார்த்தைகள் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாதவை. வலி நிறைந்த அனுபவம் ஒன்றிலிருந்து மீள உதவியமைக்காக நிறைந்த அன்பாலும், அளவிட முடியாத நன்றியுணர்வாலும் எழுதப்பட்ட கடிதம் அது" என்று பதிவிட்டார்.

மோடி

மோடி

இந்த சமயத்தில்தான் வெங்கடேசனின் பிறந்தநாளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பிரதமர் வாழ்த்து தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருந்தார்.. "உங்களின் வளமான பல்வேறு அனுபவங்கள் தொடர்ந்து இத்திருநாட்டின் உயர்வுக்கு உதவட்டும்" என்று பிரதமர் வெங்கடேசனுக்கு வாழ்த்து கூறியிருந்தார். இந்த இரு கடிதத்தையும் ஒருசேர கண்டார் வெங்கடேசன்.. மரியம் பீவி தனக்கு எழுதிய கடிதத்தை பிரதமருக்கு இணைத்து, தான் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

வாழ்வு

வாழ்வு

அதில், "பிரதமர் அவர்களே, முன்பின் முகம் பார்த்தறியாத அந்த சகோதரி எனக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் நோய்நொடி இல்லாத வாழ்வையும் வழங்க இறைவனை மனமுருகிப் பிராத்திக்கும் அளவுக்கு நான் அவருக்கு எதுவும் செய்துவிடவில்லை. என் அலுவலகத்துக்கு வந்த ஒரு கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலருக்கு அனுப்பி வைத்தேன். அது மட்டுமே நான் செய்தது. இச்சிறுபணிக்கு உயிருள்ள வரைமறக்க முடியாத நன்றியை மக்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்றால், அப்பணி செய்ய முடியாமல் அவர்களை தடுத்து கொண்டிருக்கும் சுவர்கள் எவ்வளவு வலிமையானதாக இருக்கும்?

பெற்றோர்

பெற்றோர்

தனது பிறப்புச் சான்றிதழ் பெறவே இவ்வளவு துன்பப்பட வேண்டிய நிலையில் மரியம் பீவிக்களும், மாரியம்மாக்களும் இருக்கிறார்கள். நீங்களோ அவர்களுடைய பெற்றோரின் பிறப்புச்சான்றிதழையும் சேர்த்துக் கேட்கிறீர்கள். எனக்கு நீங்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் `உங்களின் வளமான பல்வேறு அனுபவங்கள் தொடர்ந்து இத்திருநாட்டின் உயர்வுக்கு உதவட்டும்' என்று குறிப்பிட்டுள்ளீர்களே, அந்த வார்த்தையுள் இருக்கும் உண்மையைப் பற்றிக் கேட்கிறேன்.

பொறுப்பு

பொறுப்பு

சிஏஏ வைத் திரும்பப் பெறுங்கள், என்பிஆர், என்ஆர்சியைக் கைவிடுங்கள். உங்களின் நலனுக்காகவும் வளத்துக்காகவும் இறைவனைத் தொழ எண்ணிலடங்காத எளிய மக்கள் காத்திருக்கிறார்கள். இந்திய நாட்டின் உயர்வுக்கு அது பேருதவியாக இருக்கும். நாம் வாழ்கிற காலத்துக்கும், வகிக்கிற பொறுப்புக்கும் அர்த்தம் இருக்கிறது. அது மக்களின் துயர்நீங்க உழைப்பதும், அவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நிலமாக இத்திருநாட்டினை மாற்றுவதும்" என எழுதியுள்ளார்.

வன்முறை

இதனை தன் ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார்.. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்து வரும் நிலையில் எம்பி வெங்கடேசனின் இந்த 2 கடிதங்கள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. கடிதம் என்பது ஒரு மெசேஜ், குறிப்பு, செய்திகளை மட்டுமே சொல்லக்கூடிய சாதாரண பேப்பர் கருவி இல்லை.. இவைகள் அனைத்தையும் தாண்டி ஏதோ ஒன்றில் மனித உறவையும்-மனித உணர்வையும் கட்டிப்போடும் சக்தி படைத்தவை என்பதைதான் இந்த கடிதங்கள் நமக்கு சொல்லும் செய்தி!

English summary
Madurai mp su venkatesan writes letter to prime minister modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X