சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

EXCLUSIVE: "ஒரு ஊழல் புகாரும் இல்லை.. திமுக, அதிமுகவுக்கு மாற்று இனி மநீமதான்".. மூகாம்பிகா அதிரடி

திமுக, அதிமுகவுக்கு மாற்று மநீமதான்.. மூகாம்பிகை பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: "திமுக, அதிமுகவுக்கு மாற்று இனி மக்கள் நீதி மய்யம்தான்.. அதற்கு காரணம், எங்கள் மீது ஒரு ஊழல் புகார் இல்லை.. எந்த குறையும் சொல்ல முடியாது.. ஒவ்வொன்னுத்துக்கும் தைரியமா எங்கள் தவைர் குரல் கொடுத்துட்டே இருக்கார்.. மநீம தலைமையில் 3வது அணி உருவானால் நிச்சயம் தமிழகத்துக்கு அது மாற்றாக அமையும்" என்று ஸ்ட்ராங்காக சொல்கிறார் மூகாம்பிகா ரத்தினம்!

மூகாம்பிகா ரத்தினம் - மக்கள் நீதி மய்யம் சார்பாக பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் - மநீம மாநில மகளிர், குழந்தைகள் நல அணியின் செயலாளர் - அத்துடன், இவருக்கு பின்னால் மிகப்பெரிய சாதனைகளும் ஒளிந்திருக்கின்றன... பெண்களுக்கான சமூக செயற்பாட்டாளர்தான் மூகாம்பிகை. இவர் ஒரு ரேலியிஸ்ட், அதாவது கார் ஓட்டும் வல்லுநர்.. கோவையில் இருந்து லண்டனுக்கு காரிலேயே பயணம் செய்து சாதனை புரிந்தவர்.

makkal needhi maiam is the real alternative for dmk and aiadmk, says mookambika rathna

20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கல்வியின் முக்கியத்துவம், பெண் வலிமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காகவும் சாலைப் பயணம் மேற்கொண்டவர். மேலும், நலிந்த கலைகளை ஊக்குவிக்க வெவ்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து செல்பவர். குறிப்பாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி, அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு நட்டு வளர்க்க செடிகள் கொடுத்தல் போன்ற முயற்சிகளை செய்து வருகிறார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முதன்முதலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததில் இவரும் ஒருவர்!

தற்போது சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் இறங்கிவிட்ட நிலையில், மநீம என்ன மாதிரியான பணிகளை செய்து வருகிறது? தேர்தலுக்கு அக்கட்சி தயாராக உள்ளதா? மாநிலம் முழுவதும் மய்யத்தின் நிலை என்பது குறித்தெல்லாம் தெரிந்து கொள்ள முற்பட்டோம்.. "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக மூகாம்பிகா ரத்தினம் அளித்த சிறப்பு பேட்டி இதுதான்:

கொரோனா சமயத்துல என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுட்டு வர்றீங்க?

மாற்றத்துக்கான கட்சிதான் மக்கள் நீதி மய்யம்.. எங்க தலைவர் உட்பட நான் உட்பட எல்லாருமே புதிதானவர்கள்.. லஞ்ச லாவண்யம் உட்பட அனைத்து ஊழல்களையும் எதிர்ப்பவர்கள்.. "நாமே தீர்வு" என்ற அடிப்படையில்தான் நாங்கள் களப்பணியில் இறங்கியிருக்கோம்.. மாஸ்க்குகள், சானிடரி பேட்கள் உட்பட அனைத்து நிவாரண உதவிகளையும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வழங்கி வர்றோம்.. இதில் மகளிர் அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. மக்களுடன் மக்களாக நெருங்கி பழகி, அவர்களின் குறைகளையும் கேட்டு, அதை சரி செய்து தந்துட்டு இருக்கோம்.

கிராம சபை கூட்டங்கள் இப்போ எப்படி இருக்கிறது?

கிராம சபைன்னா என்னன்னாலே நாங்க வந்துதான் மக்களுக்கு தெரியவந்தது.. கிராம சபையின் முக்கியத்துவமும் வலிமையும் இப்பதான் மக்களுக்கு தெரிய ஆரம்பிச்சிருக்கு.. இதுல யாருக்குமே எந்த மாற்று கருத்தும் இருக்க வாய்ப்பே இல்லை... இப்பவும் கிராம சபையில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறோம்.. ஒவ்வொரு கூட்டத்திலயும் முன்மாதிரியா நாங்கள் பங்கேற்கிறோம்.

தேர்தல் வரப்போகுது? என்னென்ன மாதிரியான களப்பணியில் இறங்கியிருக்கீங்க? எப்படி உங்கள் கட்சியை தயார் பண்ணிட்டு இருக்கீங்க?

உறுப்பினர் சேர்க்கையும் அதிகமாயிட்டே இருக்கு.. குறிப்பாக இந்த ஒரு மாசத்துல எங்களுடைய உறுப்பினர் சேர்க்கை அதிகமாகியிருக்கிறது.. இன்னும் தேர்தலுக்குள் இது பன்மடங்காக பெருகும் என்று நம்புகிறோம். மாவட்ட வாரிய மகளிர் அணியை வலுப்படுத்த நேத்துகூட ஒரு அறிவிப்பு வெளியிட்டோம்.

makkal needhi maiam is the real alternative for dmk and aiadmk, says mookambika rathna

கடந்த முறை மாதிரியே இந்த முறையும் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

கண்டிப்பா.. பெண்களுக்கு முக்கியத்துவம் தரணும்னு தலைவர் உறுதியாக இருக்கிறார்.. அவருக்கு பெண்கள் மத்தியில் எப்போதுமே தனி மரியாதையும், கிரேஸும் இருக்கு.. முக்கியமாக மதுரை அவருக்கு மிகவும் பிடித்த ஊர்.. அதனால், மதுரை மாவட்டத்தில் இது அதிகமாகவே இருக்குன்னு சொல்லலாம்.. பெண்களை கவரக்கூடிய நபராக எங்க தலைவர் எப்போதுமே இருக்கிறார்.. எங்க போனாலும் மகளிர் கூட்டத்துக்கு மட்டும் பஞ்சமே இருக்காது.. பெண்களுக்கு முக்கியத்துவம் தரணும் என்பற்காகவே பல புதிய அறிவிப்புகளையும் இந்த தேர்தல் அறிக்கையில் வெளியிட வாய்ப்பு இருக்கு. தலைவர் முதல்வர் ஆனால், குடும்ப தலைவிகளுக்கான ஊதியம் என்பது போன்ற சிறப்பு திட்டங்களை கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மநீம இனி இருக்குமா?

இதை நாங்க போன முறை எம்பி தேர்தலியே ஓரளவு நிரூபித்தோம்.. இடையில் வந்த தேர்தல்களில் போட்டியிட முடியாவிட்டாலும், எங்களுக்கு இருக்கும் பலம் அதிகமாகிட்டுதான் இருக்கு.. அது நிச்சயம் வர போகிற தேர்தலில் நன்றாகவே தெரியும்.. வாக்கு சதவீதம் இரட்டிப்பாகும்.. அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு எங்களுக்கு இருக்கு.

ஆனால், கடந்த முறை நகர்ப்புறங்களில் வாங்கிய ஓட்டு சதவீதம், கிராம புறங்களில் உங்களுக்கு கிடைக்கவில்லையே? கிராம சபையை முன்னெடுத்தும் ஏன் இந்த பின்னடைவு?

உண்மைதான்.. கிராம சபையே முன்னெடுத்தாலும்கூட, உடனே அனைவராலும் ஒரு மாற்றத்தை ஏற்க முடியாது.. டைம் எடுக்கும்.. அவர்கள் 50 வருஷமாக ஒரே விஷயத்தில் ஊறி போயுள்ளனர்.. அவர்களை மாற்றுவது சிரமம் என்றாலும், அதற்கான பணிகளையும் நாங்கள் எப்போதோ தொடங்கிவிட்டோம்.. கடந்த முறையே கட்சி ஆரம்பித்து, ஒரே வருஷத்தில் தேர்தலை எதிர்கொண்ட எங்களக்கு இந்த வாக்கு வீதம் என்பது அதிகம்தான்.. ஆனால், இந்த கொரோனா காலத்தை மிக சரியாக அதற்கு பயன்படுத்தி கொண்டோம்.. கிராமப்புறங்களை நோக்கியேதான் தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இது எங்களுக்கு நல்ல பெயரையும் பெற்று தந்துள்ளது.

கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட இந்த 3 வருடத்தில் கட்சியின் சாதனையாக எதை பார்க்கிறீர்கள்?

டாஸ்மாக் விஷயத்தைதான்.. ஏன்னா, டாஸ்மாக்கை திறக்க கூடாதுன்னு எதிர்த்து கோர்ட் வரை போய் வெற்றி பெற்றது நாங்கள்தான்.. இது மக்கள் மனதில் நன்றாக பதிந்துவிட்டது.. எங்கே போனாலும் இதைதான் எங்களிடம் சொல்லி கிராமப்புற பெண்கள் பூரித்து போகிறார்கள்.. ஏன், நகர்ப்புறத்திலும் பல பெண்கள் எங்களிடம் வந்து சொன்னாங்க, "தாலியை வித்து தண்ணி அடிக்கிறாங்க.. டாஸ்மாக்கை திறப்பதற்கான நேரம் இது கிடையாது.. டாஸ்மாக்கை நடத்துவது அரசாங்கத்தின் வேலையாக இருக்ககூடாது"ன்னு சொல்றாங்க.

ஒரு கட்சிக்கு அடிப்படையாக தேவை பேச்சாளர்கள்தானே? ஆனால், உங்கள் கட்சியில் அப்படி தலைசிறந்த பேச்சாளர்களே காணோமே? எங்கே போனாலும் உங்கள் தலைவர் மட்டுமே பேசி வருகிறாரே.. இது பலவீனம் இல்லையா?

எல்லா கட்சியுமே ஆரம்பத்துல அப்படித்தானே இருக்கும்? தலைவரின் வழிநடத்தல்படி நாங்கள் நடக்கிறோம்.. ஆனால், இப்போ நிறைய பேச்சாளர்கள் உருவாகிவிட்டார்கள்.. எல்லாருமே பேச்சாளர்கள் ஆகிவிட முடியாது.. மக்களுடன் இணைந்து செயல்படுவதில்தான் நாங்கள் நிறைய ஆர்வம் காட்டுறோம்.. மேடைப்பேச்சாளர்களா இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. எல்லாருமே எங்க கட்சியில பார்த்தீங்கன்னா, வேலைக்கு போறவங்கதான்.. வேலைக்கு போய்ட்டு வந்து களப்பணியில் ஈடுபடறோம்.. முழு நேரமா இறங்கி அரசியல் பண்ணவங்களை 50 வருஷமா பார்த்தாச்சு.. நீங்க சொல்ற மாதிரி, பேச்சாளர்கள் இல்லை என்பது ஒரு சிறு குறைதான்.. அதையும் களைந்து வருகிறோம்.

கமல்ஹாசன் தலைமையில் 3வது அணி உருவாகுமா?

அப்படி ஒரு வாய்ப்பு இருக்கவே செய்யுது.. வலுவாகவே இருக்கு.. அப்படி வந்தால் நல்லதுதானே.. ஒரு நேர்மையான தலைவர் எங்களுக்கு இருக்கிறார்.. யாரை கண்டும் அவருக்கு பயம் இல்லை.. எந்த ஊழல் குற்றச்சாட்டும் அவர் மீது வைக்க முடியாது.. ஒவ்வொன்னுத்துக்கும் தைரியமா குரல் கொடுத்துட்டே இருக்கார்.. அதேசமயம் நல்லது எங்கே, எந்த தலைவரிடம் இருந்தாலும் அதை மனசார பாராட்டவே செய்யறார்.. அந்த வகையில் வலுவான தலைவராக உருவெடுத்து வரும் எங்கள் தலைவர், தலைமையில் 3வது அணி உருவானால் நிச்சயம் தமிழகத்துக்கு அது மாற்றுதான்!" என்று நம்பிக்கையுடன் சொல்லி முடித்தார் மூகாம்பிகா!

English summary
makkal needhi maiam is the real alternative for dmk and aiadmk, says mookambika rathna
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X