சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாமல்லபுரமும் இன்னொரு கீழடியே... ஆழிப்பேரலை அகழ்ந்து கொடுத்த சங்ககால முருகன் கோவில்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்நாட்டின் மிக பழமையான கோவில்-வீடியோ

    சென்னை: சங்க கால துறைமுகப்பட்டினமான மாமல்லபுரம் பெளத்தம், சமணம், முன்னோர் வழிபாடு என அத்தனை சான்றாதாரங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. பின்னாளில் கோயில் நகரமாக இந்துமதத்தின் அடையாளமாகவும் மாறியிருக்கிறது. இந்த வகையில் மூத்தோர் வழிபாடு எனப்படும் முருகன் வழிபாடு நடைபெற்ற கற்கோவில் மாமல்லபுரம் சாளுவன்குப்பத்தில் இருக்கிறது.

    2004-ம் ஆண்டு சுனாமி எனும் ஆழிப்பேரலை தமிழகத்தில் பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டது. அப்போதுதான் குமரி கண்டத்தையும் பூம்புகாரையும் கடல்கோள் எப்படியெல்லாம் சிதைத்திருக்கும் என்பதை தமிழர்கள் உணர்ந்த தருணம் அது.

    அதே ஆழிப்பேரலைதான் தமிழருக்கு ஒரு வரலாற்று பொக்கிஷத்தை கடலுக்குள் இருந்து வெளியே அடையாளப்படுத்திக் காட்டியது. தமிழகத்திலேயே இதுவரை கண்டெடுக்கப்படாத முருகன் கோவிலாக இருந்தது.

    தற்போது சாளுவன் குப்பம் என அழைக்கப்படும் இடத்துக்கு சங்ககாலப் பெயர் திருவிழிச்சில். கீழடியில் கிடைத்திருக்கும் செங்கற்களைப் போலவே சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கட்டுமானமும் பிற்கால கருங்கல் கட்டுமானமும் கொண்டதாக இந்த முருகன் கோவில் தோண்டி எடுக்கப்பட்டது.

    அன்று பார்த்திபன் கனவு' நூலில் கல்கி விவரித்த மாமல்லபுரத்தின் விழாக்கோலம் இது!அன்று பார்த்திபன் கனவு' நூலில் கல்கி விவரித்த மாமல்லபுரத்தின் விழாக்கோலம் இது!

     2004 ஆழிப்பேரலை அதிசயம்

    2004 ஆழிப்பேரலை அதிசயம்

    இந்த கோவில் பற்றி எழுத்தாளர் பொற்செல்வி எழுதிய கட்டுரை விவரம்:

    2004ம் ஆண்டு, டிசம்பர் 26ம் நாள், தமிழகத்தை சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கியது. அதனால் மாமல்லபுரத்தை அடுத்த சாளுவன் குப்பம் என்ற சிற்றூரில், அதுவரை மண்ணில் புதைந்திருந்த பாறை தெரிந்தது. அதில் தெரிந்த கல்வெட்டே மாபெரும் கண்டுபிடிப்புக்கு வழிகாட்டியது. கி.மு. 935ம் ஆண்டைச் சார்ந்த இராஷ்ட்ரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் அக்கல்வெட்டு், முருகன் கோயிலுக்கு விளக்கெரிக்கத் தங்கம் வழங்கியதைப் பற்றிக் கூறியது. அதை வைத்து இந்திய தொல்பொருள் துறையினர், அந்த இடத்தில் பல்லவர் காலக் கோயில் இருந்திருக்கலாம் என்று, அருகே இருந்த மேடான பகுதியில் ஆய்வைத் துவங்கினர்.

     யூகங்களுக்கு வித்திட்ட சான்றுகள்

    யூகங்களுக்கு வித்திட்ட சான்றுகள்

    முதலில் கிடைத்த காசுகள், மண்பாண்டத் துண்டுகள், உடைந்த சுடுமண் உருவத் துண்டுகள், பித்தளை விளக்கு முதலியவை நம்பிக்கை ஊட்டின. ஒன்பதாம்நூற்றாண்டைச் சார்ந்த கற்தளம், சிதைந்த விமானத்தின் கற்கள், பல கல்வெட்டுகளுடன் தூண்கள் என்று பல்லவர் காலக் கோயில் வெளிப்பட்டது. ஒரு காலத்தில் மாமல்லபுரத்தின் கடற்கரையில் அழகான ஏழு கோபுரங்கள் இருந்தன, அவற்றின் அழகு கண்டு பொறாமை கொண்ட தேவதைகள் கடலைப் பொங்கச் செய்து அழித்து விட்டன என்று கூறப்படுவதுண்டு. அழகான கற்பனைக் கதை என்று கருதப்பட்ட 'மாமல்லபுரத்தின் ஏழு பகோடாக்கள் (கோபுரங்கள்)' - இவற்றில் ஒன்றாக இக்கோயிலும், கடற்கரைக் கோயிலுக்கருகில் சுனாமியின் போது தென்பட்ட மற்றொரு கோயிலும் இருந்திருக்கலாமோ என்று தற்போது எண்ணத் தோன்றுகிறது.

     கல்வெட்டு விவரங்கள்

    கல்வெட்டு விவரங்கள்

    ஒருதூணில் உள்ள கி.மு. 858ம் ஆண்டுக் கல்வெட்டு மாமல்லபுரத்தைச் சேர்ந்த கீரார்பிரியன் என்பவர் 10 கழஞ்சு தங்கம் கோயிலுக்குக் கொடுத்து, அதன் வட்டியிலிருந்து கார்த்திகை மாதத்தில் திருவிழா கொண்டாட ஊரார் மற்றும் சபையாரைக் கேட்டுக் கொண்டதைக் குறிப்பிடுகிறது. மணியூர் (திருவள்ளூர் அருகில் உள்ள தற்போதைய மனையூர்) சாண்டில்ய கோத்திரம் ஸ்ரீகம்பட்டார் மனைவி வசந்தனார் என்ற பிராமணப் பெண்மணி, வட்டியிலிருந்து விளக்கெரிக்க, 16 கழஞ்சு பொன் கொடுத்ததாகக் கூறும் 813ம் ஆண்டுக் கல்வெட்டு ஒரு தூணில் உள்ளது. அக்காலத்திலேயே ஊர்த் தேவைகளைக் கவனிக்க சபை இருந்திருக்கிறது, அவையும் திறம்படச் செயல்பட்டிருக்கின்றன என்பது கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. மூன்றாவது தூணில் ராஜராஜ சோழன் கல்வெட்டு காணப்படுகிறது. மேலும் பல்லவ மன்னர்களான முதலாம் தந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன், கம்பவர்மன், ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன், மூன்றாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகள் திருவீழ்ச்சில் என்று அப்பொழுது அழைக்கப்பட்ட இந்த ஊரில் இருந்த சுப்பிரமணியர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானத்தைப் பற்றிக் கூறுகின்றன. அதற்கு மேலும் அகழ்ந்த போது தான் பெரும் புதையல் கிடைத்தது. பல்லவ கால கருங்கல் கோயில், பழமையான சங்க கால செங்கல் கட்டுமானத்தின் மேல் கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.

     பூம்புகார் செங்கற்கள்

    பூம்புகார் செங்கற்கள்

    அடிப்பகுதியில் மூன்று அடுக்கு லேட்டரைட் எனப்படும் செம்புரைக் கற்களின் மேல், செங்கற்களால் கட்டப் பட்டிருக்கின்றன. இந்தச் செங்கற்கள் பெரியதாக, புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு போன்ற இடங்களில் கிடைத்த சங்க காலக் கற்களைப் போல் உள்ளன. சுண்ணாம்பு கொண்டு செங்கற்கள் இணைத்துப் பூசியுள்ளனர். வெளிப்புறம் தண்ணீர் உள்ளே கசிந்து விடாமலிருக்க, பருமனான சுண்ணாம்புப் பூச்சு பூசப்பட்டுள்ளது. இரண்டு வகைக் கட்டுமானம் தெளிவாகத் தெரிவதால், பழமையான சங்க காலக் கோயில் சுனாமியாலோ, புயல் காரணமாக ஏற்பட்ட பேரலைகளாலோ அழிந்து பட, 6 - 7ம் நூற்றாண்டில் பல்லவர் காலக் புதிய கற்கோயில் கட்டப் பட்டிருக்கிறது என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். செங்கல்லால் சுற்றுச் சுவர் எழுப்பப் பட்டு, பிரகாரத்துடன், பெரிய கோயில் வளாகமாக 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்க வேண்டும். கருவறை 2 மீ நீளம், 2.2 மீ அகலத்துடன் 27 செங்கல் அடுக்குகளால் கட்டப் பட்டிருக்கிறது. வர்ணம் பூசப்பட்ட முருகன் சுடுமண் வடிவம் கருவறையில் வைக்கப் பட்டு வழிபாடு செய்திருக்கலாம். கருவறையின் முன் மண்டபம் உள்ளது.

     புறநானூறு காட்டும் கல்வேல்

    புறநானூறு காட்டும் கல்வேல்

    கோயிலின் முன்புறம் செங்கல் அடித்தளத்தின் மேல் கல்லால் ஆன 6 அடி உயர வேல் உள்ளது.
    'கலிகெழு கடவுள் கந்தம் கைவிட'
    என்று புறநானூறு (52) குறிப்பிடும், கந்தம் என்பது கல்லால் ஆன வேல் என்று முனைவர் இளங்கோ குறிப்பிடுகிறார். கல்லால் ஆன வேல் கிடைத்திருப்பது இந்த அகழாய்வின் சிறப்புகளில் ஒன்றாகும். இக்கோயிலின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதாகும். வழக்கமாக திருக்கோயில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியே அமைக்கப் பட்டிருக்கின்றன. அதனால் சிற்ப சாஸ்திரம் எழுதப்படுவதற்கு முன் 6 - 7ம் நூற்றாண்டிற்கு முன் கட்டப் பட்டிருக்க வேண்டும். saluvankuppam temple 51215ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இருப்பதால், பல்லவர் காலக் கோயில் 13ம் நூற்றாண்டில் கடல் சீற்றத்தால் சிதைந்து மண் மூடியிருக்கலாம். செங்கற் கட்டுமானங்களின் மேல் கருங்கற்கள் தென்படுகின்றன. சுற்றுச் சுவரில் சில தூண்கள் உள்ளன. வளாகத்திற்குள் ஒரு பாறைக்கு முன் கோயில் அமைந்துள்ளது.

     முருகன் கோவில்தான்

    முருகன் கோவில்தான்

    அகழ்வின் போது சுடுமண் நந்தி, சுடுமண் விளக்குகள், பச்சைக்கல்லால் ஆன லிங்கம், மண் பாண்டங்களின் சில்லுகள், சோழர் காலச் செப்புக் காசுகள் கிடைத்துள்ளன. ஐந்து பெண்கள், சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் குறவைக்கூத்து ஆடும் புடைப்புச் சிற்பம் உள்ள, 13 செமீ நீளம், 12 செ.மீ. அகலமுள்ள சுடுமண் பலகையும் கிடைத்திருக்கிறது. வேல், குறவைக் கூத்து போன்றவை முருகன் கோயில் என்ற கருத்திற்கு வலுவூட்டுகின்றன. இக்கோயிலும், தஞ்சை மாவட்டம் வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் கோயிலுமே தமிழகத்தில் கிடைத்துள்ள பழமையான செங்கற் கோயில்கள். சாளுவன் குப்பத்து 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சங்க கால முருகன் கோயில் தான், தென் இந்தியாவின் மிகப் பழமையான கோயில் ஆகும். அருமையாக அகழ்ந்தெடுத்து, பாதுகாக்க வேலியும் தொல்லியல் துறை போட்டு வைத்திருக்கிறது.

     கேட்பாரற்று இருக்கிறது

    கேட்பாரற்று இருக்கிறது

    கிழக்குக் கடற்கரைச் சாலையில் பழமையான இந்த இடத்தைக் காட்டும் எந்த வழிகாட்டியும் இல்லை. மாமல்லையின் சிற்ப அழகுகளில் ஒன்றான புலிக்குகைக்கு முன்னரே சாலையிலிருந்து இறங்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. புலிக்குகைப் பகுதியிலிருந்து இங்கு வருவதற்கு அகலமான படிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. பார்ப்பதற்கு ஆட்கள் வராததாலோ என்னவோ அவை அடைக்கப்பட்டு, சாலையிலிருந்து கல்லும், முள்ளும் உள்ள பகுதியில் தான் வர வேண்டியிருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் முன்னோர்கள் வழிபட்ட இடத்தில், என் கணவர் மட்டுமே கூட இருக்க, சுற்றிச் சுற்றி வந்தது அற்புதமான ஓர் அனுபவம். விளக்கிச் சொல்வதற்கு விவரம் தெரிந்தவர்கள் கூட இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பார்க்க வேண்டிய முக்கிய விவரங்களை ஒரு பலகையில் எழுதியாவது வைத்திருக்கலாம். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருவர் தென்படுகிறார்களே என்று எண்ணியோ என்னவோ, அந்த நேரம் ஒரு ஹெலிகாப்டர் வந்து சுற்றிச் சென்றது.

     சிதைந்த கல்வேல்

    சிதைந்த கல்வேல்

    2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, விலை மதிப்பில்லாத, கல்லால் ஆன வேலை சிறிது காலத்திற்கு முன் யாரோ உடைத்திருக்கிறார்கள். ஒட்டி வைக்கப் பட்டிருக்கும் அந்த வேலைப் பார்க்க மிக வருத்தமாக இருந்தது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்! நம் நாட்டின், பாரம்பரியத்தின், முன்னோர்களின் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டாமா! அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டாமா! நாம் என்ன செய்யப் போகிறோம்? இவ்வாறு பொற்செல்வி எழுதியுள்ளார்.

    English summary
    Ancient Port City Mamallapuram also one More Sangam Age period like Keezhadi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X