ஒரே நாளில் 2வது சம்பவம்.. முதல்வர் காரை திருட்டு பைக்கில் முந்த முயன்ற இளைஞர்! கைது செய்த போலீஸ்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற காரை திருட்டு பைக்கில் முந்தி செல்ல முயன்றவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நேப்பியர் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கான்வாய் கடந்து சென்றுகொண்டிருந்தது. காமராஜர் சாலையில் முதலமைச்சரின் கார் சென்றுகொண்டிருந்தபோது, சாலையை கடந்து எதிர் திசையிலிருந்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ஒரு இளைஞர் வேகமாக உள்ளே வந்து இருக்கிறார்.

அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காரை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கிப் பிடித்தனர். அத்துடன் அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாத காரணத்தால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்து அந்த இளைஞரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதலமைச்சரின் காரை முந்த முயன்ற இளைஞரின் பெயர் அஜித்குமார் என்றும், சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
நம்பர் பிளேட் குறித்தும், முதலமைச்சர் வாகனத்தை முந்த முயன்றது குறித்தும் அவரிடம் போலீசார் விசாரித்ததில் அது திருட்டு வாகனம் என்று தெரிவித்து இருக்கிறார் அஜித் குமார். இதுதொடர்பாக அந்த இளைஞரை கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் இன்று காலை ஆழ்வார்பேட்டை பகுதியிலும் முதலமைச்சர் சென்ற கான்வாயை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனத்தையும் போலீசார் மடக்கிப்பிடித்து இருக்கின்றனர். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 2 முறை நடைபெற்ற இதுபோன்ற சம்பவங்களால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்,