சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மகன் தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92.

Google Oneindia Tamil News

சென்னை: புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான, தமிழ்மாமணி மன்னர் மன்னன் இன்று வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92.

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித் தந்தவர். மிகச் சிறந்த பேச்சாளர் எழுத்தாளர் கவிஞர். பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டவர். தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

மன்னர் மன்னன் வாழ்க்கை வரலாறு:

மன்னர் மன்னன் வாழ்க்கை வரலாறு:

மன்னர் மன்னன் அவர்களின் இயற்பெயர் கோபதி ஆகும். இவர் பிறந்த நாள் 03.11.1928. தந்தையார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தாயார் திருவாட்டி.பழநியம்மா. உடன்பிறந்தோர் சரசுவதி(அக்கா), வசந்தா, இரமணி. பிரெஞ்சுமொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். மன்னர்மன்னன் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் சாவித்திரி அம்மையார் ஆவார். இவர்களின் திருமணம் 1955 ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவாக நடைபெற்றது. கோவை அய்யாமுத்து அவர்கள் திருமணத்தை நடத்திவைத்தார்.
இவர்களுக்கு செல்வம், தென்னவன், பாரதி என்ற ஆண்மக்களும், அமுதவல்லி என்ற மகளும் உண்டு.

மன்னர் மன்னன் இளம் வயதிலேயே தமிழ் ஈடுபாட்டால் "முரசு" என்னும் கையெழுத்து ஏட்டை வெளியிட்டார். இவருடன் இந்த ஏடு உருவாக்குவதில் கவிஞர் தமிழ்ஒளியும் இணைந்து பணிபுரிந்தவர். அரசுக்கு எதிரான ஏடாக இது இருந்ததால் இருவரையும் பிரெஞ்சு அரசு குற்றம் சாட்டியது. மன்னர்மன்னுக்கு 14 வயது என்பதால் தண்டனை இல்லை. தமிழ்ஒளியைத் தண்டித்தது. கோபதி என்ற இயற்பெயரில் குற்றம் சுமத்தப்பட்டதால் மன்னர்மன்னன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.

1947 இல் அந்நிய ஆட்சி அகல வேண்டும் என்று மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரெஞ்சுப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பாவேந்தரின் குயில் இதழ் தொடர்ந்து வெளிவருவதற்கும், பாரதிதாசன் பதிப்பகம், பழநியம்மா அச்சகம் சிறப்பாகச் செயல்படுவதற்கும் துணையாக இருந்தவர். மணிமொழி நூல்நிலையம், மிதிவண்டிநிலையம் நடத்திய பட்டறிவும் இவருக்கு உண்டு.
அரசியல் பயணம்

பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுவை மாநிலக் கிளையை முதன்முதல் 1947 இல் தோற்றுவித்த நிறுவுநர்கள் ஐவரில் மன்னர்மன்னனும் ஒருவர். 1954 இல் இந்தியாவுடன் புதுவை மாநிலம் இணைவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு, புதுவையிலிருந்து வெளியேறி விடுதலைக்குப்பின் தம் தந்தையாரின் கவிதைப் பணிக்குப் பாடுபட்டவர்.

எழுத்துப்பணி

எழுத்துப்பணி

1964 இல் பாவேந்தரின் மறைவுக்குப் பின் தம் பொறுப்பில் வானம்பாடி, தமிழ்முரசு, வழிகாட்டி முதலிய இதழ்களை வெளியிட்டவர். பாரதிதாசன் குயில் என்ற இலக்கிய இதழ் இவரின் எழுத்துத் திறனுக்கும் தமிழுணர்வுக்கும் சான்றாகும். 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு 45 நாள் சிறையில் இருந்தவர். 1968 இல் புதுவை வானொலியில் எழுத்தாளர் பணியில் இணைந்தார். பணியில் இணைந்த பிறகு தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான நாடகங்களைப் புதிய உத்திகளைப் பயன்படுத்தி ஒலிபரப்பும் முயற்சியில் உழைத்தவர். சிறந்த கலைஞர்களையும் அறிஞர்களையும் அழைத்து மிகுதியான வாய்ப்புகளை வழங்கியவர். பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கையைக் கலங்கரை விளக்காகக் காட்டும் கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல் என்ற நூலினை இருபதாண்டுகள் உழைத்து, ஆராய்ந்து எழுதி வெளியிட்டவர்.

தமிழுக்கு தொண்டு செய்த மன்னர் மன்னன்

தமிழுக்கு தொண்டு செய்த மன்னர் மன்னன்

மன்னர்மன்னனின் சிறுகதைகள் "நெஞ்சக் கதவுகள்" என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இது தமிழக அரசின் இரண்டாம் பரிசைப் பெற்ற பெருமைக்குரிய நூலாகும். பாவேந்தரின் இலக்கியப் பாங்கு என்னும் நூல் புதுவை அரசின் 5000 உருவா பரிசைப் பெற்றது. இவரின் 16 நூல்களும் தமிழ் இலக்கியத்துக்குச் சிறப்பு சேர்ப்பன. சில நூல்கள் கல்லூரிகளில் பாடநூல்களாக வைக்கப்பட்ட பெருமைக்குரியன. தமிழ்நாட்டரசின் இயல் இசை நாடக மன்றம் இவருக்குக் கலைமாமணி விருது அளித்துப் போற்றியுள்ளது. 1991(மலேசியா ,சிங்கப்பூர்), 1992(பிரான்சு), 1996 இல் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு பாவேந்தருக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் பெருமை சேர்த்தவர். புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் கருத்து உரைஞராகப் (Consultant) பணியாற்றியவர்.

அரசு விருதுகள்

அரசு விருதுகள்

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பாவேந்தரின் கவிதைகள் ஆங்கில ஆக்கம் பெற்று வெளிவர உதவியவர். பாவேந்தரைப் பற்றி இவர் எழுதிய பாவேந்தர் இலக்கியப் பாங்கு, பாவேந்தர் படைப்புப் பாங்கு, பாவேந்தர் உள்ளம் முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கன. பாட்டுப் பறவைகள் என்ற இவரின் நூல் பாரதியின் பத்தாண்டுக்காலப் புதுவை வாழ்வையும், பாரதிதாசனாருடன் அமைந்த தொடர்பையும் சிறப்பாக விளக்குகின்றது. நிமிரும் நினைவுகள் என்ற பெயரில் மன்னர்மன்னன் பலவாண்டுகளாக இலக்கிய ஏடுகளில் எழுதிவந்த புதுவை வரலாற்றுக் கட்டுரைகள் இவரின் பவள விழா வெளியீடாக வெளிவந்துள்ளது. புதுவை அரசின் கலைமாமணி விருது(1998), தமிழ்மாமணி விருது(2001) இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழ்நாட்டரசின் திரு.வி.க. விருதும்(1999) இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மன்னர் மன்னன் காலமானார்

மன்னர் மன்னன் காலமானார்

தமிழ்நாட்டரசின் தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள்பீடப் பொதுக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டவர். மன்னர்மன்னன் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று(2000) மிகச்சிறந்த தமிழ்ச்சங்கக் கட்டடம் உருவாகக் காரணமாக இருந்தவர்.
வயது முதிர்வு காரணமாக இன்று மன்னர் மன்னன் காலமானார். அன்னாரது இறுதிச்சடங்கு நாளை மாலை நடைபெறுகிறது. அவரது வீட்டு
முகவரி எண்:04 , 10 ஆவது குறுக்குத் தெரு, காந்தி நகர், புதுச்சேரி.

English summary
Mannar Mannan Son of Pavendar Bharathidasan passed away today in Pudhucherry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X