சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜராஜ சோழன் விவகாரம்... இயக்குநர் ரஞ்சித் மீது திமுகவின் மனுஷ்யபுத்திரன் கடும் தாக்கு!

Google Oneindia Tamil News

சென்னை; ராஜராஜ சோழன் விவகாரத்தில் இயக்குநர் ரஞ்சித் மீது திமுக பேச்சாளரும் எழுத்தாளருமான கவிஞர் மனுஷ்யபுத்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக மனுஷ்யபுத்திரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது:

ரஞ்சித்தின் ராஜராஜ சோழன் பற்றிய கருத்தை வைத்து இங்கே நடக்கும் விவாதம் தமிழ் நாட்டின் பண்பாட்டு அரசியலைப்பற்றி எந்தப் புரிதலும் அற்ற ஒரு வெற்று முற்போக்கு ஆவேசம் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.

Manushyaputhiran condemns Director Ranjith

ராமரை தேசிய இந்துத்துவா மத அடையாளமாக வெகுசன உளவியலில் மாற்றும் ஒரு அரசியல் கட்டமைக்கப்படும்போது ராஜ ராஜ சோழன், கண்ணகி என தமிழ்மரபு சார்ந்த வெகுசன பண்பாட்டு அரசியலை நாங்கள் கட்டமைக்கவே செய்வோம். திராவிட அரசியல் இந்த தமிழ் பண்பாட்டு உயர்வு நவிற்சியை கட்டமைத்ததன் மூலமே தாழ்வுற்று விடுதலை தவறிக்கெட்ட தமிழ் சமூகத்தை தலை நிமிர வைத்தது.

சங்கிகள் திப்பு சுல்தானின் ஆட்சியில் கொடுங்கோன்மைகள் நடந்ததாக கூறி அவனது விடுதலைப்போராட்ட வரலாற்றை மூடி மறைப்பதற்கு சமமானது ராஜ ராஜசோழனின் பிராமண ஆதரவை காரணம்காட்டி அவனது தமிழ் தமிழ் மரபுசார்ந்த அடையாளத்தை ஒழித்துகட்டுது. கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்றுகூட சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதற்காக அதுதான் அவனது அடையாளமா?

நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல் நரர்களென்று தருதார் ஆட்டு மந்தை யாமென் றுலகை ,
அரச ரெண்ணி , விட்டார்
காட்டு முண்மை நூல்கள் பல தாங் காட்டினார்க ளேனும் நாட்டு ராஜ நீதி - மனிதர் நன்கு செய்யவில்லை

எனறு பாஞ்சாலி சபதத்தில் பாரதி மனம் கசந்து பாடும் வரிகளுக்குள் வராத அரசன் யார்? ஜனநாயக அமைப்பிலேயே நாட்டு ராஜ நீதி நன்கு செய்யும் தலைவர்களை காண்பது அரிதாக உள்ளது. ராஜ ராஜ சோழனை விமர்சனமின்றி ஏற்கவேண்டும் என்பது இல்லை. ஆனால் வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், மொழிரீதியாகவும் தொடர்ந்து ஒடுக்கப்படும் ஒரு இனம் தனது சில வரலாற்றுபெருமைகளை பொதுமக்கள் உளவியலில் கட்டமைப்பது ஒரு அரசியல், வரலாற்றுத்தேவை.

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி' என்று சொல்லபட்டதை கேலி செய்தவர்கள் எல்லாம் யார் என்று நமக்குத் தெரியும். 'முதல் குரங்கு தமிழ் குரங்கு' என எள்ளி நகையாடியவர்களையும் நமக்குத் தெரியும். அவர்கள் அடிப்படையில் தமிழ்பண்பாட்டு விரோத மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தார்கள்.

Manushyaputhiran condemns Director Ranjith

ஆனால் தொடர்ச்சியாக ஆயிரம் ஆண்டுகளாக பண்பாட்டுப்படையெடுப்பகளுக்கு ஆளாகி வரும் ஒரு சமூகம் தனக்கெனெ சில 'ஐகான்'களை கட்டமைக்காமல் எழுச்சி பெற இயலாது. தஞ்சை பெரிய கோயிலும், கடற்படை நடத்தியதும், கடாரம் கொண்டதும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததும், கண்ணகியும், அய்யன் திருவள்ளுவரும், கம்பனும் இளங்கோவும் நமது தமிழ் அடையாள மீட்சிகான களங்கள்.; இதன் வழியாகவே நாம் எழுந்து நின்றோம்.

ராஜராஜ சோழனை சொந்தம் கொண்டாட பா.ஜ.க முயன்றபோது நாம்தான் அதைகடுமையாக எதிர்த்தோம். இன்று இந்த்துவா அடையாள அரசியல் உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் அது எல்லா அடையாளங்களையும் உள்வாங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இந்தக்காலகட்டத்தில் ராஜராஜ சோழனை ஒரு சாதிச் சங்கத் தலைவனாக்கும் முயற்சி யாருக்கு பயன்படும் என்பதை சிந்திதித்துப்பாருங்கள்

கீழடியில் நடக்கவிருந்த அடுத்தகட்ட ஆய்வு இன்று தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தமிழர்களின் வரலாற்றின் மீதும் பண்பாட்டின்மீதும் மண் அள்ளிபோடும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழ் அடையாளச் சின்னங்களுக்கும் பெருமிதங்களுக்கும் குழிதோண்டும் வேலையை நமக்குள்ளேயே சிலர் செய்து வருகிறார்கள். பெரியாரையே தலித் விரோதி என்றும் தமிழர் விரோதி என்றும் சொன்னவர்களின் நீட்சிதான் இப்போதுதான் ரஞ்சிதின் ராஜ ராஜ சோழன் குறித்த குரல் . அவர்களுடைய ஒரே நோக்கம் திராவிட இயக்க அரசியல் உருவாக்கிய தமிழ் பண்பாட்டு அரசியலை வேரறுக்க வேண்டும் என்பதுதான்.

ரஞ்சித் போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்டான ரஜினியை தூக்கிப்பிடித்துகொண்டே தமிழ் பண்பாட்டு அடையாளங்களை வேரறுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் ராம்விலாஸ் பாஸ்வானாகும் ஆசை ரஞ்சித் உள்ளிட்ட பலருக்கும் இருக்கிறது. ஆனால் அண்ணன் திருமாவின் திராவிட -தலித் அரசியல் இருக்கும்வரை இந்த கீழறுப்பு வேலை செல்லாது

மேலும் ரஞ்சித் ஒரு வெகுசன சினிமா இயக்குனர். ஒரு வரலாறு சார்ந்த விவாதத்தை அதுசார்ந்த அறிஞர்கள் , ஆய்வாளர்கள் மட்டுமே அதற்குரிய தர்க்கங்களுடன் நடத்த முடியும். ரஞ்சித் அதற்கு தகுதியானவர் அல்ல. அவரை வைத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அரசாட்சி குறித்த விவாதத்தை நடத்துவது அறியாமையோடு அறியாமையை கலப்பதாகும். ரஞ்சித் சீமான் பாணியின் வரலாற்றிலிருந்து ஆங்காங்கே தனக்குத் தேவையான சில கேக்குகளை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து தமிழர் வாயில் ஊட்டப் பார்க்கிறார்.

மரபு சார் பண்பாட்டு அரசியலை சங்கிகள் வெகுதிறமையாக கையாண்டு அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் குறைந்த பட்ச அரசியல் மதிநுட்பம் கூட இல்லாமல் நம்மிடம் இருக்கும் ஆயுதங்களை தரையில் போட்டு மிதித்துக்கொண்டிருக்கிறோம். இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கப்போகின்றன.

தமிழர் பண்பாட்டு பெருமிதங்களை அவை சற்றே மிகையாக இருந்தாலும் கூட இன்னும் ரொமாண்டிசைஸ் செய்து உயர்த்திப்பிடிப்பதே சமகால அரசியல் பணியாக இருக்க முடியும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ராஜராஜசோழனைப்பற்றி இவ்வளவு ஆத்திரமாக பேசும் ரஞ்சித் சமகாலத்தில் வாழும் ரஜினியின் அரசியல் பற்றி எப்போது பேசப்போகிறார்?

இவ்வாறு மனுஷ்யபுத்திரன் பதிவிட்டுள்ளார்.

English summary
DMK's Manushyaputhiran has condemned Director Pa. Ranjith for his comments against RajaRaja Cholan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X