திமுக கூட்டணிய விட்டு வெளியே வாங்க..! கழன்று ஓடும் காங்கிரஸ் நிர்வாகிகள்! கையை பிசையும் அழகிரி & கோ!
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கொண்டாடிய திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டுமென வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் பல நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தமிழகத்திலுள்ள பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
விடுதலை தீர்ப்பு வெளியானதும் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன். மேலும், தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
திமுக கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என கேட்ட செய்தியாளர்.. கே எஸ் அழகிரி சொன்ன பதில்!

பேரறிவாளன் விடுதலை
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம்தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்ததாகவும், அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

திமுக கூட்டணி
அதே நேரத்தில் நேற்று நடைபெற்ற ராஜீவ்காந்தி நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, திமுகவுடன் கூட்டணி வேறு, கொள்கை வேறு அவர்கள் கொள்கையை அவர்கள் சொல்கிறார்கள், எங்கள் கொள்கையை நாங்கள் சொல்கிறோம், ஆகையால் இதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார். இதனை கண்டித்து பல காங்கிரஸ் பிரமுகர்கள் தலைமைக்கு எதிராக பேசி வரும் நிலையில், சிலர் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

நிர்வாகிகள் ராஜினாமா
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினர் தியாகராஜன் தர்மபுரி மாவட்ட தலைவர் கோவி. சிற்றரசு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் சுபாஷ், வேலன், சரவணன், வஜ்ஜிரம், ராஜபிரகாஷ், பூபதி ராஜா உள்ளிட்டோர் வெளிப்படையாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் பல நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருவதாகவும், இது குறித்த கடிதத்தினை கட்சி தலைமைக்கு அனுப்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியில் குழப்பம்
இதுமட்டுல்லாது மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போஸ்டர்களையும், பேனர்களையும் வைத்து வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களிலும் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் பேரறிவாளன் விடுதலையை ஆதரிக்கும் திமுக கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நன்றாக அறிந்திருந்தாலும், கூட்டணி இருந்து வெளியேற வாய்ப்பில்லை என்றே கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.