மாஸ்க் அணியவில்லை என்றால் வெளியே அனுப்புங்கள்.. நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சென்னை: அலுவலகங்களில் பணிபுரியும் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கொரோனா அதிகரித்துவரும் இந்த சூழலில் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
உலகமெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த நிலையில், தமிழகத்திலும் தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மூன்றாவது அலை நடப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
3 நாளாச்சு.. முடியல.. கோவையில் குடோனுக்குள் புகுந்த 'மாயாஜால' சிறுத்தை.. பரபரப்பில் மக்கள்

கொரோனா
கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழழில் ஒமிக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடங்கி இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு வரை செயல்படுத்தி வருகிறார்கள். கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதும், பள்ளிகள் மூடப்பட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்பு தொடங்கப்பட்டது. அதுபோல் தனியார் நிறுவனங்களும் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் திட்டத்தைக் கையிலெடுத்தன. இன்னும் சில தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில், "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 23,888 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 87 ஆயிரத்து 254ஆக அதிகரித்துள்ளது.

வெளியே அனுப்புங்கள்
அலுவலகங்களில் பணிபுரியும் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். அறிகுறி உள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 300 நபர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும்.

இடைவெளியை உறுதி செய்யுங்கள்
பணியிடங்களில் ஒரு நபருக்கு இடைவெளி 2 மீட்டர் உள்ளபடி பணி இடத்தை மாற்றி அமைத்திட வேண்டும், பணியிடங்களில் இடைவெளிவிட்டு மாற்றி அமைக்க முடியாத சூழலில் வெளிப்படையான திரைகள் மூலம் 2 மீட்டர் இடைவெளியை உறுதி செய்திட வேண்டும்'' என்று சுற்றறிக்கை தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பபட்டுள்ளன.