சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை

Google Oneindia Tamil News

தீர்மானம் 7:

மத்திய பா.ஜ.க. அரசு நியமித்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வரைந்துள்ள, புதிய கல்விக் கொள்கை முன்வரைவு -2019, ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பு இன்மை முதலான அரசியல் அமைப்புச் சட்ட மதிப்பீடுகளை முற்றிலும் புறந்தள்ளி இருக்கின்றது.

ஆரியப் பண்பாட்டு ஆதிக்க மொழியான சமஸ்கிருதத்தையும், அதன் வழிவந்த இந்தி மொழியையும் உயர்த்திப் பிடிப்பது, இந்தி இனத்தின் ஆதிக்கத்தை இதர தேசிய இனங்களின் மீது திணிப்பது, பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு நிறுவனங்களுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குவது, கல்வித் துறையை முற்றிலும் மத்திய அரசின் ஏகபோக ஆதீக்கத்தின் கீழ் கொண்டுவந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, கல்வித் துறையில் தனியார் மயத்தை ஊக்குவிப்பது, பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் 'கல்வித் தொழிலில்' ஈடுபட உரிமம் அளிப்பது, பழங்காலப் பெருமை என்ற பெயரில் ஆரியப் பண்பாட்டைத் திணிப்பது, தேசிய இனங்களின் அடையாளங்களை அழிப்பது போன்ற கருத்துகள்தான், 484 பக்க புதிய கல்விக் கொள்கை -2019, வரைவு அறிக்கை முழுவதிலும் நிரம்பி வழிகின்றது.

MDMK Chennai COnference declars India as United States of India #Anna111

விருப்பப் பாடம் என்ற பெயரில், இந்தி பேசாத மாநிலங்கள் மீது, இந்தி மொழியை மூன்றாம் வகுப்பில் இருந்தே திணிக்கின்றது. நடைமுறையில் பள்ளிக் கல்வி என்பது, 1ஆம் வகுப்பில் இருந்து அதாவது 5 வயது முதல் தொடங்குவதை மாற்றி, மழலையர் பள்ளியில் இருந்தே பள்ளிக் கல்வி 3 வயதில் இருந்தே தொடங்கும் என்று இக்கல்விக் கொள்கை கூறுகின்றது. 9 வயதில் அதாவது 5 ஆம் வகுப்பில் குழந்தைகள் பொதுத்தேர்வு எழுத வேண்டும்.

3 ஆம் வகுப்பில் இருந்தே பொதுத் தேர்வைப் புகுத்துவதற்கு வரைவு அறிக்கை கூறுகின்ற, 85 விழுக்காடு மூளை வளர்ச்சி அடைந்த நாடுகளின் புள்ளி விவரங்களை கல்வி வளர்ச்சி குறைந்த இந்தியாவில் பொருத்திப் பார்க்க முடியாது.

இந்த முன் மழலையர் வகுப்பில் இருந்து (Pre KG), பள்ளிக் கல்வி, கல்லுரிக் கல்வி, பல்கலைக் கழகக் கல்வி, உயர் ஆய்வு நிறுவனங்கள் ஆகியவை அனைத்தையும் 'தேசிய கல்வி ஆணையம் (National Education Commisiion)' 'ராஷ்ட்டிரிய சிக்ஷா ஆணையம்' என்ற அதிகாரக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருகின்றது.

மழலையர் பள்ளியில் இருந்து உயர் ஆய்வு மையம் வரை மேலாண்மை செய்கின்ற இந்த ஆணையத்தின் தலைவராக பிரதமர் செயல்படுவார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், துணைத் தலைவராக இருப்பார். இந்த தேசியக் கல்வி ஆணையம்தான், இனி கல்வி குறித்த அனைத்தையும் முடிவு செய்யும் அதிகாரம் உள்ளதாக இருக்கும்.

MDMK Chennai COnference declars India as United States of India #Anna111

ஒவ்வொரு மாநிலத்திலும் முதல் அமைச்சர் தலைமையில் உருவாக்கப்படும் மாநிலக் கல்வி ஆணையம், பெயரளவில்தான் இயங்க முடியும். கல்விக் கொள்கைகள் பாடத் திட்டங்கள் உருவாக்குதல் போன்ற எதிலும் மாநில அரசுகள் இனி சுயேச்சையாகச் செயல்பட முடியாது. அதற்கு அதிகாரமும் இல்லை.

இதன்மூலம், பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வித் துறையை, புதிய கல்விக்கொள்கை - முழுதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாற்றுகின்றது.

மேலும் கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் டில்லியில் குவிப்பதற்கு தேசியக் கல்வி ஆணையத்தின் கீழ்,

'தேசியத் தேர்வு முகமை (National Testing Agency)', 'தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம் (National Higher Eductaional Regulatory Authority -NHERA)',

'பொதுக் கல்விக் குழு (General Education Council)'

'உயர் கல்வி நல்கைக் குழு (Higher Education Grants Commision)',

'தேசிய ஆய்வு நிறுவனம் (National Research Foundation)'

ஆகிய அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

இனி பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு ஆகியவற்றில் இருந்து உயர்கல்வி, தொழில் கல்வி அனைத்திற்கும், 'நீட்' போன்று, அனைத்து இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதன் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளிலும் மாணவர்கள் பயில்வதற்கு புதிய கல்விக் கொள்கை வழிவகை செய்கின்றது.

எல்லா மட்டங்களிலும் தகுதி, திறமை என்பதை வலியுறுத்தும் புதிய கல்விக் கொள்கை, இடஒதுக்கீடு, சமூக நீதிக் கொள்கையைப் புறந்தள்ளுகின்றது. முழுக்க முழுக்க கல்வித்துறை தனியாருக்குத் தாரை வார்க்கப்படும்போது, அவற்றில் இடஒதுக்கீடு என்று எதையும் கோர முடியாது என்பதை, புதிய கல்விக் கொள்கை உறுதிப்படுத்துகின்றது.

எனவே மாநில உரிமைகளுக்கு எதிராகவும், சமூக நீதித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைப்பதும், ஆரியப் பண்பாட்டைத் திணித்து இந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுப்பதுமான புதிய கல்விக் கொள்கை -2019 வரைவு அறிக்கையை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 8:

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெரும் வீழ்ச்சி அடைந்து வருவதாக, பொருளாதார அறிஞர்கள் ரகுராம் ராஜன், பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், நோபல் பரிசுப் பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென் போன்றோர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

பா.ஜ.க. அரசின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் 'நிதி ஆயோக்' துணைத் தலைவர் ராஜீவ்குமார், இந்தியா தற்போது நிதித்துறையில் சந்திக்கும் நெருக்கடி கடந்த 70 ஆண்டுகளில் நாடு சந்தித்தது இல்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கின்றார்.

மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி இருப்பதற்கு முழுமுதற் காரணம் ஆகும். பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி., திவால் நடவடிக்கை ஆகியவை பொருளாதாரத் துறையில் பெருமளவில் தடுமாற்றத்திற்கு வழி வகுத்து இருக்கின்றன. நாட்டின் உற்பத்தித்துறை பெரும் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது. குறிப்பாக வாகன உற்பத்தி தொழில்துறையில் ஏற்பட்ட சரிவு, தொழில்துறையில் பாதிப்பு ஏற்படுத்தியது மட்டும் இன்றி, பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலையை உருவாக்கி விட்டது. சிறு குறு தொழில் நசிந்து வருவதால், இந்தியாவின் பொருளாதாரம் முடங்கி விட்டது.

முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வரியைக் குறைத்த போதும், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து சுமார் 30 ஆயிரம் கோடி முதலீடுகள் வெளியேறி இருக்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துகொண்டே போகின்றது.

பொருளாதார மந்த நிலையில் இருந்து மீள்வதற்கு, ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் இருந்து 1.76 இலட்சம் கோடி ரூபாய் மத்திய அரசின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க முடியாது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

எனவே, இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்படுத்திட, சிறந்த பொருளாதார அறிஞர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒன்றை உருவாக்கி, அக்குழுவின் பரிந்துரைகளை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 9:

தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இதனால் 5 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று, தமிழக சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் கடந்த ஆண்டு தெரிவித்து இருக்கின்றார். 255 நூற்பு ஆலைகள் மூடப்பட்டதால், இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அந்நிய நேரடி முதலீடுகள் கடந்த ஆண்டில் 21 விழுக்காடு சரிந்து இருப்பதை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மாதம் சுட்டிக்காட்டி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3.42 இலட்சம் கோடி முதலீடுகள் வருவதற்குக் கையெழுத்து ஆகி உள்ளன. இதன் மூலம் 10.50 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆனால், ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற இரண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதி அளித்தபடி, முதலீடுகள் வரவில்லை. அதன்பிறகும், முதல்வர் எடப்பாடி அண்மையில் அயல்நாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய உடன்படிக்கைகள் செய்து இருக்கின்றார்.

எனவே, தமிழகத்தில் அயல்நாட்டு முதலீடுகள் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; தமிழ்நாட்டில் மூடப்பட்டுக் கிடக்கின்ற ஆலைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 10:

காலம் காலமாக ஒடுக்கப்பட்டு, சமூகத்தின் கீழான நிலையில் அழுத்தப்பட்டுக் கிடந்த மக்களின் விடியலுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் சமூக நீதிக்கொள்கை. வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை 1921 ஆம் ஆண்டில் பிறப்பித்து, சமூக நீதிக் கோட்பாட்டிற்கு முதன் முதலில் வாசலைத் திறந்தது, நீதிக் கட்சியின் ஆட்சி என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை ஆகும்.

இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட பின்னர்தான், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர் கல்வி பெறவும், அரசு வேலைவாய்ப்புகளைப் பெறவும் வழி பிறந்தது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி அரசு சமூகநீதிக் கொள்கையை நீர்த்துப் போகும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அரசியல் சட்டத்தில் எந்த வகையிலும் இடம்பெறாத பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீடு வழங்குவதற்காகத் திணித்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் (124) கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் உத்தரவுகளைப் பிறப்பித்தது.

ஆண்டுக்கு எட்டு இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுபவர்கள் உயர்சாதி ஏழைகள் என்று வரையறை செய்து இருப்பதை நியாயப்படுத்த முடியாது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி டெல்லியில் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றார். ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி இயங்கி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, சமூகநீதிக் கொள்கையைச் சீர்குலைக்க முயன்றால், கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை இந்த மாநாடு சுட்டிக்காட்டுவதுடன், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையைச் சிதைக்கும் வகையில், உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் பா.ஜ.க. அரசின் உத்தரவுக்கு தமிழக அரசு இசைவு அளிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கின்றது.

English summary
MDMK's Anna Birthday Conference has declared India as United States of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X