சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக

Google Oneindia Tamil News

தீர்மானம் 11:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்காத கர்நாடக மாநிலம், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றது. கடந்த 2018 செப்டம்பர் மாதம் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறைக்கு, கர்நாடக அரசு அனுப்பிய வரைவுத் திட்ட அறிக்கையில், மேகேதாட்டுவில் ரூ.5912 கோடியில் தடுப்பு அணையும், சுமார் 400 மெகாவாட் திறன்கொண்ட நீர் மின்சார உற்பத்தி நிலையமும் அமைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வளக் குழுமம், நவம்பர் 22, 2018 இல் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்காக ஆய்வு அனுமதியை அளித்தது.

2018, டிசம்பர் 3 அன்று, டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில், கர்நாடகத்திற்கு வழங்கிய ஆய்வு அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், அதன் பின்னர் கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், நிபுணர் குழுவுடன் சென்று பார்வையிட்டு, மேகேதாட்டுவில் அணை கட்டுவதில் கர்நாடகம் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

2019 ஜூன் 20 இல் கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் அனுமதி கேட்டு அனுப்பிய திட்ட அறிக்கையில், அணை திட்ட மதிப்பீட்டுத் தொகை 9 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் நான்கு ஆண்டுகளுக்குள் அணை கட்டுமானம் நிறைவு அடையும் என்று குறிப்பிட்டு இருந்தது. மேலும் இந்த அணை கட்டுவதற்கு 5252 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று தெரிவித்தது.

MDMK Chennai COnference declars India as United States of India #Anna111

கர்நாடகம் மேகேதாட்டுவில் அணை கட்டினால், அதன்பிறகு மேட்டூருக்கு ஒரு சொட்டு நீர்கூட வராது, காவிரி பாசனப் பகுதிகளில் வேளாண்மைத் தொழிலை முழுமையாகக் கைவிட்டு, மக்கள் வெளியேறும் நிலைமை ஏற்பட்டுவிடும்.

எனவே, காவிரியில் கர்நாடக மாநிலம் மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 12:

காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு எடுக்கும் திட்டங்களுக்கு எதிராக, கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர். தமிழக மக்களின் எதிர்ப்புகளைத் துச்சமாகக் கருதி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, காவிரிப் படுகையை இரு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி வழங்கி உள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அமைத்து இலட்சக்கணக்கான மக்களின் உடல் நலனுக்கு கேடு விளைவித்தும், வேளாண் சாகுபடி நிலங்களை மலடாக்கி நாசப்படுத்திய வேதாந்தா குழுமத்திற்கும், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி உள்ளது.

ஹைட்ரோ கார்பான் திட்டங்களால் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்குக் கீழே போவதுடன், கடல் நீர் உட்புகும் ஆபத்தும் சுற்றுச் சூழல் நாசமாகும் நிலையும் ஏற்படும். மக்கள் குடிநீருக்குக் கூட வழி இன்றித் தவிக்கும் மோசமான சூழல் உருவாகும்.

நாட்டிற்கே உணவு அளிக்கும் நெற்களஞ்சியமான சோழ மண்டலத்தை பாலைவனம் ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி, கடந்த ஜூன் 23, 2019 இல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் இராமேஸ்வரம் வரையில் 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் கைகோத்து அணிவகுத்து நின்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. மரக்காணத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்றார்கள்.

காவிரிப் பாசனப் பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் திட்டங்களை முழுமையாகக் கைவிட்டு, காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 13:

ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பால், உலகப் பாரம்பரிய பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில், சுமார் 20 இலட்சம் டன் பாறைகளை உடைத்து நொறுக்கி, நியூட்ரினோ ஆய்வகம் அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதனை எதிர்த்து, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், நியூட்ரினோ திட்டத்திற்கு தடை விதித்து 2015 மார்ச் 26 ஆம் நாள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை, கேரளப் பகுதியில் உள்ள இடுக்கி அணை உள்ளிட்ட 12 நீர் நிலைகள் பாதிக்கப்படும். சுற்றுச் சூழல் சீர்கேடு அடைவதுடன், நீராதாரமும் பாதிக்கப்படும். பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மண்டலமான மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவும் சிதைவு அடையும்.

இத்திட்டத்தை எதிர்த்து, பூவுலகு நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில், எவ்வித ஆய்வுகளும் இன்றி அளிக்கப்பட்ட சுற்றுச் சூழல் அனுமதியை 'தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தென்னக அமர்வு 2017 மார்ச் 20 இல் இரத்து செய்தது.

ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதை சிறப்புத் திட்டமாக, பிரிவு 'பி' திட்டம் என்று அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி சுற்றுச் சூழல் அனுமதி அளிக்க முடிவு செய்தது. இதற்காக பிரதமர் தலைமையில் நடந்த அணுசக்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்தைச் செயல்படுத்த, இந்திய அரசின் தலைமைச் செயலாளரைப் பொறுப்பாளராக நியமித்துப் பணிகளைத் தொடங்கத் தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை மாதம் மாநிலங்கள் அவையில் மத்திய அணுசக்தி மற்றும் வின்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உள்ளார்.

தேனி மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 14

வங்கக் கடலில் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும் தமிழக மீனவர்கள் துயரம் ஒரு தொடர்கதையாக இருக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகினர். 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தக் குடும்பங்களுக்கு உரிய இழப்பு ஈட்டுத் தொகை வழங்கப்படவில்லை. அண்மைக்காலமாக, தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை, இலங்கைக் கடற்படை பறித்துச் சென்று, இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்து வருகின்றது. எவ்வளவோ கூக்குரல் எழுப்பியும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அண்மையில், மினோன், சிந்தாஸ், மதன், உமா கண்ணன், இலங்கேஸ்வரன், சசிகுமார் ஆகிய ஆறு மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.

எனவே, தமிழக மீனவர்களைக் காப்பாற்ற, இஸ்ரோ, இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் மீனவ பிரதிநிதிகள் அடங்கிய மீனவர் மீட்பு மேலாண்மைக்குழு அமைக்க வேண்டும்; மீன்களைச் சந்தைப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்; ஒக்கி பேரிடரின் போது இறந்தவர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது போல, அண்மையில் இறந்த ஆறு மீனவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 இலட்சம் இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் 15

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக் கழிவுகளைச் சேமித்து வைத்திட அணுஉலைகள் இருக்கும் இடத்தில் இருந்து தொலைவில் ஒரு இடம் (Away From Reactor - AFR) அணுக் கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ்நிலக் கருவூலம் (Deep Geological Repository -DGR) ஆகிய இரண்டு விதமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

ஆனால், கூடங்குளம் அணுமின் உலையில் அணுக் கழிவுகளைச் சரியாகக் கையாளாமலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் அணுமின் உற்பத்தி செய்யப்படுகின்றது.

அணுக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றாமல், கடலில் கொட்டுகின்றார்கள். இதனால் மிகப் பெரிய அளவில் சுற்றுச் சூழல் பாதிப்பும், கதிர்வீச்சு அபாயமும் ஏற்படும். எனவே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரையில், அணுமின் உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பூவுலகு நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில், அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு ஐந்து ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேசிய அணுமின் கழகத்திற்கு 2013 இல் உத்தரவிட்டது.

ஆனால், 2018 மார்ச் மாதம் 5 வருட கால அவகாசம் முடிவு அடைந்த நிலையில், AFR தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் சிக்கல்கள் இருப்பதால், மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என்று தேசிய அணுமின் கழகம் கோரியது.

பூவுலகு நண்பர்கள் அமைப்பின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் விதமாக, 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அணுக்கழிவுப் பாதுகாப்புப் பெட்டகத்தை அமைத்திட வேண்டும்" என்று 2018 ஆகஸ்டு 24-இல் உத்தரவிட்டு, அணுமின் உற்பத்தி தொடர அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து, கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே AFR பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்கி அணுக்கழிவுகளைச் சேகரிக்கத் திட்டமிட்டுள்ள தேசிய அணுமின் கழகம், கடந்த ஜூலை 10-ஆம் தேதி, நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. ஆனால், அந்தக் கூட்டம் நடைபெறவில்லை.

அணுக் கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க, உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் 'ஆழ்நிலக் கருவூலம்' (DGR) அமைப்பதற்கான இடமும், தொழில் நுட்பமும் இன்றுவரை இந்தியாவிடம் இல்லாத நிலையில், கூடங்குளத்தில் தற்காலிகமாக AFR பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி, அதில் கூடங்குளம் அணுக்கழிவுகளை மட்டும் அன்றி, இந்தியாவில் இயங்கி வரும் மற்ற 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டு வந்து சேமிப்பது, தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு ஆகும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு, ஜப்பான் நாட்டில் புகுஷிமா நகரில் அணு உலை விபத்து ஏற்பட்டபோது, அணுக் கழிவுகளால்தான் கதிர்வீச்சு உள்ளிட்ட மிகப் பெரிய பாதிப்புகள் உருவாகின. அணுகுண்டு போல எந்த நேரமும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய அணுக் கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் இந்திய அரசிடம் இல்லை என்று, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அணுக் கழிவுகளை முழுமையாகச் செயல் இழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இல்லாமல் திணறுகின்றன. ஏனெனில், புளுட்டோனியம் போன்ற அணுஉலைக் கழிவுகளைச் செயலிழக்கச் செய்ய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.

ஓர் அணு உலையை மூட 38 ஆயிரம் கோடி ரூபாயும், 40 முதல் 70 ஆண்டுகள் அவகாசமும் தேவைப்படும் என்று ஜப்பான் நாட்டுச் செய்திகள் கூறுகின்றன. ~புகுஷிமா விபத்துக்கு முன்பு ஜப்பானில் 60 அணு உலைகள் இயங்கி வந்தன. ஆனால், தற்போது, 9 அணு உலைகள்தான் இயங்கி வருகின்றன. தற்போது அந்நாட்டில் உள்ள 24 அணு உலைகளில் ~புகுஷிமாவில் உள்ள நான்கு உலைகள் உள்ளிட்டவற்றில் 40 விழுக்காடு அணு உலைகளை மூடிவிடத் தீர்மானித்துள்ளது.

எனவே, மத்திய அரசு, கூடங்குளத்தில் அணுக் கழிவு சேமிப்பகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

English summary
MDMK's Anna Birthday Conference has declared India as United States of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X