சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

Google Oneindia Tamil News

தீர்மானம் 16

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, 7 பேரையும் விடுதலை செய்யப் பரிந்துரை செய்து, தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு 2018, செப்டம்பர் 9-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

அரசியல் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்கீழ், மாநில அரசின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்து உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும், தமிழக அமைச்சரவை தீர்மானம் அனுப்பி ஓர் ஆண்டு முடிந்த போதும், தமிழக ஆளுநர் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு இருக்கின்றார். 7 தமிழர்கள் விடுதலையில் மத்திய பா.ஜ.க. அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது என்பது மக்கள் அறிந்ததே. ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து, 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றது.

MDMK Chennai COnference declars India as United States of India #Anna111

தீர்மானம் 17

வீட்டுவசதி, மகளிர் மேம்பாடு, பழங்குடியினர் மேம்பாடு, வேலைவாய்ப்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகின்றது. அந்த வகையில், தமிழக அரசுக்கு 14-ஆவது நிதி ஆணையம் 2017-18 ஆம் நிதி ஆண்டில் 5920 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த நிதியை, குறிப்பிட்ட கால அளவுக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லையேல், மத்திய அரசுக்குத் திரும்பச் சென்று விடும். தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் 3676 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல், மத்திய அரசுக்குத் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதை மத்திய தணிக்கைத் துறையின் ஆய்வு அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கின்றது.

மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு உரிய பங்கீடு வழங்குவது இல்லை என்று தமிழக அரசு குறை கூறி வரும் நிலையில், மத்திய அரசு வழங்கிய நிதியில் 3676 கோடி ரூபாய் செலவழிக்காமல் திரும்ப ஒப்படைத்தது கண்டனத்துக்கு உரியது.

2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் முதல்வர் ஆனபோது, தமிழ்நாட்டின் கடன்சுமை ரூ. 1,14,470 கோடியாக இருந்தது. கடந்த எட்டு ஆண்டுக்கால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் கடன்சுமை 4 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து விட்டது. 2017-இல் 'இந்தியா ஸ்பெண்ட்' மேற்கொண்ட ஆய்வின்படி தமிழகத்தில் ஒரு நபருக்கு சராசரியாக 28,778 ரூபாய் கடன் இருக்கின்றது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் நிர்வாகம் மட்டுமின்றி நிதி நிர்வாகமும் சீர்கெட்டு இருப்பதையே இவை படம்பிடித்துக் காட்டுகின்றன. எனவே, எடப்பாடி பழனிசாமி அரசு நிதி நிர்வாகத்தைச் சீர்படுத்த வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 18

2016-ஆம் ஆண்டில் 26,995 கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் 'டாஸ்மாக்' மதுபான வருமானம், இரண்டு ஆண்டுகளில் 31,157 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து இருக்கின்றது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 3866-இலிருந்து 5152 ஆக உயர்ந்து இருக்கின்றது.

2016, மே மாதம் முதல்வர் பதவி ஏற்றவுடன், தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று, ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், அவரது மறைவுக்குப் பின்னர் பொறுப்பு ஏற்ற எடப்பாடி பழனிசாமி ஆட்சி, வரைமுறை இன்றி புதிய டாஸ்மாக் கடைகளைத் திறந்து வருகின்றது. தமிழகத்தை எல்லா வகையிலும் நாசப்படுத்தி வரும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளைக் குறிப்பிட்ட கால அளவுக்குள் மூடி, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 19

உலகின் மொத்த பருத்தி நூல் தேவையில் 26 விழுக்காட்டினை இந்தியா நிறைவு செய்கின்றது. பருத்தி நூல் தயாரிப்பில், தமிழகம் முன்னணியில் உள்ளது. நாட்டின் மொத்த பருத்தி நூல் உற்பத்தியில் 32 விழுக்காடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில், 27 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இந்திய நூலுக்கு சீனாவில் 3.5 விழுக்காடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் 4 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகின்றது. வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொண்டு, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்கின்றன. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்), பருத்தி நூல் ஏற்றுமதி சுமார் 33 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் பாகிஸ்தானுக்கும் இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால், இனி பாகிஸ்தானில் இருந்தும் சீனா தமது தேவைக்கான நூலை கொள்முதல் செய்துகொள்ளும். இதனால், இந்தியாவில் இருந்து சீனாவுக்கான நூல் ஏற்றுமதி மேலும் குறையும்.கடந்த சில மாதங்களாக நலிந்து வரும் நூற்பு ஆலைகளுக்கு இது மேலும் ஒரு பேரிடி ஆகும்.

எனவே, நூற்பு ஆலைகள் நலிவு அடைவதைத் தடுக்கவும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைமையைத் தவிர்க்கவும், ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகை, வட்டி சலுகை, மத்திய - மாநில அரசுகளுக்கான வரிகளைத் திரும்பப் பெறும் சலுகை, சர்வதேச விலைக்கு நிகராக இந்திய நூலின் விலையைக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 20

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்குக் கடந்த டிசம்பர் மாதம் நேரடித் தேர்வு, அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்டது. முதலில் எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு, உதவி மின் பொறியாளர்களாக 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள்36 பேர் கர்நாடகம், ஆந்திரா, கேரளா, உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது.

தமிழ்நாட்டில் 90 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருக்கின்ற நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து தேர்வு செய்து இருப்பது, கண்டனத்திற்கு உரியதாகும்.

2013 ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வு பெற வேண்டுமானால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனை 2016, செப்டம்பர் 1 இல் சட்டமன்றத்தில் தமிழக அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணைய விதிகளில் திருத்தம் செய்தது அதிமுக அரசு.

இதன்படி 7.11.2016 இல் கொண்டுவரப்பட்ட புதிய உத்தரவின்படி, தமிழக அரசுப் பணிகள் வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி, நேபாளம், பாகிஸ்தான், பூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் பணி அமர்த்த வழிவகை செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, 7.11.2017 இல் தமிழக அரசு வெளியிட்டது. அதில் இயந்திரப் பொறியியல் துறைக்கு 219 பேர் தேவை என்ற நிலையில். பொதுப்பட்டியலில் 67 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 46 பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது 68 விழுக்காடு, அயல் மாநில இளைஞர்கள்.

அதே போன்று மின்னணு தொடர்பியல் துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில், பொதுப்பிரிவில் 36 பேர் தேர்வு செய்யப்பட்டவர்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர்.

பாலிடெக்னிக் கல்லூரி விரைவுரையாளர்கள் தேர்வில் மதிப்பெண் ஊழல் காரணமாக பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோன்று, தற்போது மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் தேர்விலும் வெளிமாநிலத்தவர்களைத் தேர்வு செய்து இருப்பது ஏற்கக் கூடியது அல்ல.

தமிழக அரசுப் பணிகளில் பொதுப்பிரிவில் வெளிமாநிலத்தவர்கள் சேர்க்கப்பட்டால், அது பொதுப் பிரிவினர்களுக்கும், சிறப்பாக தேர்வு எழுதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்குத்தான் அரசுப்பணி என்பதை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளதைப் போன்று, தமிழ்நாடு அரசும் சட்டம் இயற்றி தமிழக அரசுப் பணிகள் மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

English summary
MDMK's Anna Birthday Conference has declared India as United States of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X