• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தீயசக்தியை வீழ்த்தி தமிழகத்தைக் காத்திட சபதம் ஏற்போம் - ஓபிஎஸ் இபிஎஸ் சொல்வது யாரை தெரியுமா

|

சென்னை: ஒரு குடும்பத்தின் சுயநலத்திற்காகவும், சுரண்டல் சிந்தனைகளுக்காகவும் தமிழ்நாட்டையும், தமிழ்ச் சமூகத்தையும் பலிகொடுத்து, அதிகாரத்தை அடையத் துடிக்கும் தீய சக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக, எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் இருக்கும் என்பதை நினைவில் கொள்வோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நல்லாட்சி தொடர,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தில் வெற்றிநடை போடும் தமிழகத்தை காத்திட அனைவரும் சபதம் ஏற்போம் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்ணா தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் பொன்னாள். எளியோரை இரட்சிக்க வந்த இதய தெய்வம், ஏழைகள் வாழ்வில் இருள் நீக்க உதித்த ஒளி விளக்கு,

 MGR 104 Birthday: OPS and EPS letter To AIADMK workers

ஒழுக்க நெறிகளை கலைத்துறையால் பயிற்றுவித்த கலங்கரை விளக்கம், உழைப்பவர் எல்லாம் உயர்ந்தவரே என்ற உண்மையை உரக்கச் சொன்ன தனிப்பிறவி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா, உலகில் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் மகத்தான திருவிழா. மனிதர்களில் மாணிக்கம்

'தன்னை தலையாகச் செய்வானும் தான்'' என்று சங்கத் தமிழ் கூறும் வாழ்க்கை நெறிக்கு சிறந்த எடுத்துக்காட்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வறுமையின் கோரப்பிடியில் வாடிய இளமைக்காலத்தில் தொடங்கி, புகழ் ஏணியின் உச்சத்தைத் தொட்டு, நாடாளும் மன்னனாக வாழ்வை நிறைவு செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உழைப்பாலும், முயற்சியாலும், தன்னலம் துறந்து, பிறர் நலம் பேணி வாழ்ந்த வாழ்க்கை முறையாலும் ''மனிதர்களில் மாணிக்கம்'' என்ற இரவாப் புகழ் பெற்ற சரித்திர நாயகர்.

திரை உலகில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டு, அதன்மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை சொந்தமாக்கிக்கொண்ட புரட்சித் தலைவர், தனது உழைப்பும், புகழும் மக்களுக்கு நல்ல கருத்துகளையும், அறநெறிகளையும் கொண்டு சேர்க்கும் வலுவான ஆயுதங்களாகப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். திரைப்படங்களின் மூலம், குறிப்பாக பாடல்களின் மூலம், புரட்சிகரமான சிந்தனைகளையும், சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் எடுத்துச் சொன்னதில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நிகராக இன்னொரு மனிதரை உலகில் வேறு எங்கும் காண முடியாது. சொன்னதை செய்தார் புரட்சித் தலைவரின் திரைப்படங்கள் காட்டப்பட்டபோது, திரையரங்குகள் எல்லாம் வகுப்பறைகளாக அல்லவா மாறி இருந்தன.

மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு

கல்லாதபேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என்தோழா! - என்றும், ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே - என்றும் பாடி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போல, கலைவழிப் பாடம் நடத்திய வாத்தியார்'' யாரேனும் இருக்க முடியுமா?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தான் சொன்னதையெல்லாம் செய்தும் காட்டிய செயல் வீரர். உலகமே போற்றும் சத்துணவுத் திட்டம்; பெண்மையைப் போற்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு; தலைமுறை, தலைமுறையாக பள்ளத்தில் வீழ்ந்து கிடந்த பலகோடி மக்கள் வாழ்வில் ஏற்றம்பெற, இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 69 விழுக்காடு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு;

கிராமப்புறங்களில் நிலவிய அடிமைத்தனங்களுக்குக் காரணமாயிருந்த நிர்வாக முறையை முற்றிலும் ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் என்னும் புதுப் பதவிகள் மூலம் நிர்வாகத்தை மக்கள் கையில் கொண்டுசேர்த்த மனிதாபிமானப் பணி; மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை தோற்றுவித்து, உயர்ந்தவர் -தாழ்ந்தவர் என்ற சதிவலை பிண்ணிய சாதிப் பெயர்களை பொது வெளிகளில் இருந்து நீக்கிய சமூகப் புரட்சி;

கம்ப்யூட்டர் காலத்திலும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் என்றெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நிகழ்த்திய சாதனைகள், வேறு யாராலும் அத்தனை எளிதாக செய்திட முடியாத அரும் பெரும் சாதனைகளாகும். எனவே தான், அவர் மக்கள் மனதில் புரட்சித் தலைவராகவும், பொன்மனச் செம்மலாகவும் அன்பு சிம்மாசனம் போட்டு மன்னாதி மன்னனாக வீற்றிருக்கிறார்.

புரட்சித் தலைவர் அண்ணா திமுகவிற்கும், தமிழ்நாட்டிற்கும் வழங்கிய மாபெரும் கொடையாக வந்தவர் புரட்சித் தலைவி அம்மா. புரட்சித்தலைவர் ஆட்சியின் நீட்சியாகவும், அவர் திட்டமிட்டிருந்த சமூகப் புரட்சிகளையும், வளர்ச்சிகளையும் நடைமுறைப்படுத்தும் கலைகளை அறிந்தவராகவும் சிறப்பாக ஆட்சி செய்தவர் புரட்சித் தலைவி அம்மா. அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் இன்றும், இனிவரும் காலங்களிலும் அண்ணா தி.மு.க. ஆட்சி வெற்றி நடைபோடும் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.

நமது இயக்கம் சமூக மாற்றத்திற்கான இயக்கம். அண்ணா தி.மு.க. அரசியல் கட்சி மட்டுமல்ல, ஏற்றத் தாழ்வுகள் இல்லாத, எல்லோரும் சம உரிமையும், சம வாய்ப்பும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கான இடையறாத முயற்சிதான் அண்ணா தி.மு.க.வின் உழைப்பு.

ஜனநாயகப் பண்புகளை நிலைநாட்டி, சமத்துவ சமுதாயம் அமைத்து, சமதர்மம் காத்து தமிழ் இனம் இந்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக வாழ்ந்திட, ஓயாது பாடுபடும் இயக்கம் தான், புரட்சித் தலைவரால் நிறுவப்பட்ட அண்ணா தி.மு.க. கழகத்தின் லட்சியப் பயணத்தில் இதோ இன்னும் சில மாதங்களில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்னும் ஜனநாயகப் போர்க்களத்தை நாம் சந்திக்கப் போகிறோம்.

கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் 2783 பேருக்கு செலுத்தப்பட்டது - தயக்கம் வேண்டாம் என்கிறார் அமைச்சர்

2021ல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப் போவது, மக்களாட்சியின் மாண்புகளைப் போற்றி, எல்லோரும் பங்குபெறும் உண்மை ஜனநாயகமா? அல்லது ஒரு குடும்பத்தின் பதவி வெறிக்கு மக்களை பலியிடும் போலி ஜனநாயகமா? என்ற வினாவிற்கு விடைகாணப் போகும் களமாக எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் களம் அமையப் போகிறது.

ஒரு குடும்பத்தின் சுயநலத்திற்காகவும், சுரண்டல் சிந்தனைகளுக்காகவும் தமிழ்நாட்டையும், தமிழ்ச் சமூகத்தையும் பலிகொடுத்து, அதிகாரத்தை அடையத் துடிக்கும் தீய சக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக, எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் இருக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.

வளர்ச்சி ஏதுமின்றி இருள் சூழ்ந்த மந்தநிலை, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, கட்டுப்பாடற்ற காட்டாட்சி, உலகத் தமிழர்களின் உரிமைகளைப் பற்றிய கவலை சிறிதும் அற்ற போலி தமிழ் முழக்கம் என்று, திமுக நடத்தத் துடிக்கும் வன்முறை வெறியாட்டம் மீண்டும் தலைதூக்க முடியாத வண்ணம் தேர்தல் களத்தில் நாம் அனைவரும் விழிப்புடன் பணியாற்ற வேண்டிய நேரமிது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் நடத்திய, இன்று நாமும் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நல்லாட்சி தொடர்ந்திட புரட்சித் தலைவரின் 104வது பிறந்த நாளில், வெற்றிநடை போடும் தமிழகத்தைக் காத்திட, நாம் அனைவரும் சபதம் ஏற்போம்; கடுமையாக களப் பணி ஆற்றுவோம்; வெற்றி காண்போம். வெற்றி நமது சொந்தம், வீரம் நமது சொத்து. நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். வெற்றி நமதே." எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 
 
 
English summary
The OPS and EPS have written to volunteers to remember that the forthcoming assembly general election will be a platform to sacrifice Tamil Nadu and the Tamil community and cut down the injustice of the evil force that seeks to seize power.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X