சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலையில்லை என்று சொந்த ஊர்களுக்கு சென்றால்.. தலைவிரித்தாடும் ஜாதி கொடுமை.. கண்ணீரில் தொழிலாளர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: "அண்ணே.. அரை கிலோ பருப்பு கொடுங்க.." என்று மளிகைக் கடைக்காரரிடம் பலமுறை கேட்ட போதிலும் தனக்குப் பிறகு கடைக்கு வந்தவர்களுக்கு கூட கடைக்காரர் கொடுத்த அனுப்பிக் கொண்டிருப்பதை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள தேவர் என்ற கிராமத்தில் வசிக்கும் இந்த 24 வயது இளைஞர்.

"நமது ஊர் இன்னும் மாறவில்லை.. உயர் ஜாதிக்காரர்களுக்கு முதலில் பொருளை கொடுத்து அனுப்பிய பிறகு கடைசியாகத்தான் நமக்கு பொருளை தருகிறார்கள்" என்பதை புரிந்து கொள்ள சில நிமிடங்கள் அவருக்கு தேவைப்பட்டது.

நாடு தாராளமயமாக்கல் கொள்கையை அறிமுகப்படுத்தி அடுத்த வருடத்தோடு 30 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் இதுதான் இந்திய கிராமங்களின் நிலைமை.

நகர்ப்புற பாதுகாப்பு

நகர்ப்புற பாதுகாப்பு

ஜாதி ஏற்றத்தாழ்வு நிலைமை இன்னும் அங்கு நீடிக்கிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு இதுவரை இந்த விஷயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்ததற்கு காரணம் அவர்கள் நகரங்களை நோக்கி குடிபெயர்ந்ததுதான். ஆனால் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா என பல்வேறு நகரங்களில், பணியாற்றிக்கொண்டிருந்த, தலித், பழங்குடியினர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சாதியினர் பலரையும், உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் என தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பச் செய்தது. இதன்பிறகுதான் இந்த ஜாதி ஏற்றத்தாழ்வு இன்னும் வலுவாக கிராமங்களில் இருப்பதை அவர்களால் உணர முடிந்தது.

அதிகரித்த பொருளாதார வளர்ச்சி

அதிகரித்த பொருளாதார வளர்ச்சி

1991ஆம் ஆண்டு, தாராளமயமாக்கல் கொள்கையை அறிமுகப்படுத்தியது அப்போதைய நரசிம்மராவ் அரசு. அப்போது 1 சதவீதம் ஜிடிபி என்ற நிலையில் இருந்த இந்தியப் பொருளாதாரம், அதன் பிறகு வேகமாக வளர்ந்து, 2007ம் ஆண்டு 10 சதவீதம் என்ற அளவுக்கு சூப்பர் வளர்ச்சி எடுத்தது. பணப்புழக்கம் அதிகரித்த நிலையிலும், மக்களின் மனப் புழுக்கம் குறைந்தபாடில்லை என்பதைத்தான், ஊரடங்கிற்கு, பிந்தைய செயல்பாடுகள் அம்பலப்படுத்துகின்றன. நகரங்களுக்கு குடிபெயர்ந்ததால் எந்த ஜாதி கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றோமோ.. கிராமங்களுக்கு திரும்பியதால் மறுபடியும் அதே கூண்டில் சிக்கிக் கொண்டோம் என்கின்றனர்.. பெரும்பாலான தலித் மற்றும் பழங்குடியின ஜாதியைச் சேர்ந்த தொழிலாளர்கள்.

கிராமப்புற வேலைவாய்ப்பு

கிராமப்புற வேலைவாய்ப்பு

மத்திய பிரதேச மாநிலம் அஸ்தான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 33 வயதாகும் ராஜு பன்ஸ்கார். டெல்லியில் கட்டிட வேலை செய்து வந்த இவர் இப்போது வேலை இல்லாமல் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இப்படி ஊர் திரும்புபவர்களுக்காக, கிராமப்புற பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்காக தனிக்கவனம் செலுத்தி திட்டங்களை அறிவித்தது மத்திய அரசு. இந்த திட்டத்தின்கீழ் தனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவருக்கு ஏமாற்றம்தான். ஏனெனில், கிராமத்தின் தலைவர், கிடைக்கும் வேலைவாய்ப்புகளையும், வருமான வாய்ப்புகளையும் உயர்ஜாதி தொழிலாளர்களுக்கு ஒதுக்குகிறாராம். ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கு பணிகள் கிடைப்பது இல்லை என்கிறார் வேதனையுடன் ராஜு பன்ஸ்கார்.

நிலைமை மோசம்

நிலைமை மோசம்

"உயர் ஜாதியினரை பட்டியலின ஜாதியினர் தொட்டுப் பேசக்கூடாது என்ற வழக்கம் இன்னமும் எங்கள் கிராமத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. எங்களுக்கு சொந்தமாக நிலம் கிடையாது. இதற்கு இடையே ஜாதி ஒடுக்குமுறை வேறு.. எனவே தான் 12 வருடங்களுக்கு முன்பாக கிராமத்தை விட்டு டெல்லிக்கு இடம்பெயர்ந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் மறுபடியும் கிராமத்துக்கு திரும்பியபோது முன்பு எப்படி இருந்ததோ அதே நிலைதான் நீடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அதைவிட மோசமான நிலைமைதான் இருக்கிறது" என்கிறார் ராஜு பன்ஸ்கார்.

வறுமை நிலை

வறுமை நிலை

உலகம் முழுக்கவே கொரோனா நோய்த் தொற்று காரணமாக, பொருளாதாரம் பெரும் அடி வாங்கியுள்ளது. பல மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்காக இருக்கட்டும், லண்டனாக இருக்கட்டும் அல்லது மும்பையாக இருக்கட்டும். பல தொழிலாளர்கள் பணி இழப்பால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிய நிலையில் உள்ளனர். இந்தியா போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் அதிகம் இல்லாத ஒரு நாட்டில், மேலை நாடுகளை விடவும் இந்த பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. உலக வங்கியின் கணிப்பின்படி இந்தியாவில் செயல்படுத்தப்படும் லாக்டவுன் காரணமாக 12 மில்லியன் (1.2 கோடி) மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், அவர்கள் மறுபடி மீண்டு வருவது கடினமான விஷயம் என்றும் கூறப்படுகிறது.

பல மில்லியன் மக்கள்

பல மில்லியன் மக்கள்

"லாக்டவுன் பாதிப்பை இன்னும் நீண்ட காலத்துக்கு உங்களால் உணர முடியும். பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை எளிதாக இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பல மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே செல்லும் வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்" என்கிறார் டெல்லியை சேர்ந்த அப்சர்வர் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த நிரஞ்சன் சாஹு.

வேலைவாய்ப்பில் முன்னுரிமை

வேலைவாய்ப்பில் முன்னுரிமை

கிராமப்புற வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கினால் அது உயர் ஜாதியினருக்குதான் செல்கிறது என்பதே யதார்த்தம் என்கிறது ப்ளூம்பர்க் செய்தி ஏஜென்சி. இந்த ஏஜென்சி மத்திய பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் நேர்காணல் நடத்தியபோது இந்த விஷயங்களை உறுதி செய்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் அதிகாரிகள் சிலரிடம் செய்தி ஏஜென்சி பேசியபோது, தங்களிடம் இதுபோல ஜாதி ரீதியான பாகுபாடு பார்க்கப்படுவதாக எந்த புகாரும் வரவில்லை என்றும், இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளனர்.

பணி பாரபட்சம்

பணி பாரபட்சம்

இந்தியாவில், அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் ஜாதி கொடுமை நிலவுவது தொடர்கதையாக இருக்கிறது. ஆக்ஸ்பாம் இந்தியா என்ற டெல்லியைச் சேர்ந்த என்ஜிஓ அமைப்பு 2010ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், தலித், பழங்குடியினர், முஸ்லிம்கள் ஆகிய பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு பணி வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பிரிவினருக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. முறைசாரா தொழில் அமைப்புகளில் பணியாற்றக்கூடிய இந்தப் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்று அறிக்கை சுட்டிக் காட்டியிருந்தது. தற்போது ஊரடங்கு காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய துறை, முறைசாரா அமைப்புதான் என்பதால் இதுபோன்ற ஒடுக்கப்பட்டவர்களின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

மாற்றத்தை நோக்கி

மாற்றத்தை நோக்கி

22 வயதாகும் பெண்மணி கிருஷ்ண அஹிர்வார், டெல்லியில் இருந்து தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் அஸ்தான் கிராமத்துக்கு திரும்பி உள்ளார். ஊர் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க வரும்போது உயர்ஜாதி பெண்கள் தண்ணீர் பிடித்து சென்ற பிறகுதான் கடைசியாக இவருக்கு தண்ணீர் பிடிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறதாம். டெல்லியில் இதுபோன்ற சாதிய வேறுபாடுகளை அறிந்திராத அந்த இளம்பெண்ணுக்கு கிராமத்துக்கு திரும்பியதும் தங்களது பழைய நிலைமை மறுபடியும் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறுகிறார் கண்ணீருடன். அதேநேரம் நகரங்களுக்கு திரும்பி வருவதும் இவர்களுக்கு தயக்கத்தை கொடுக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் நகர்ப்புற நெருக்கடியில் மிக அதிகமாக இருக்கிறது என்பதால் அச்சமடைந்து தான் தங்களது சொந்த ஊரிலேயே இவர்கள் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எப்போது பொருளாதாரம் மேம்படும், எப்போது தாங்கள் நகரங்களுக்கு செல்வோம்.. இந்த ஜாதி தீண்டாமை கொடுமையிலிருந்து விடுதலை உணர்வை அப்போதுதான் அடைய முடியும் என்று காத்திருக்கின்றனர் இந்த புலம்பெயர் தொழிலாளர்கள்.

English summary
It will be 30 years since the country introduced its liberalization policy next year. But The caste inequality situation still persists there. The lockdown, which was triggered by the corona, forced many castes, including Dalits and tribals, who had been working in various cities, to return to their home states. Only then did they realize that this caste inequality was still strong in the villages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X