எத்தனையோ மாணவர்களுக்கு மாலை போட்டுள்ளேன்.. ஆனால் நேற்று போட்ட அந்த மாலை.. கண் கலங்கிய அன்பில் மகேஷ்!
சென்னை: தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சார விபத்தில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம் குறித்து சட்டசபையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கண்கலங்கியபடியே பேசியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ், சிறிய வயதாக இருந்தாலும் முதல்முறையாக அமைச்சர் பொறுப்பை ஏற்றாலும் அவரது பணியை சிறப்பாக செய்து வருகிறார் என பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிகின்றன.
பள்ளிகளில் ஆசிரியர்களிடம் மாணவர்கள் சேட்டை செய்யும் விவகாரத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாகவே கையாள்கிறார். நீட் தேர்வு, ஆன்லைன் கேம்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரங்களில் இது போன்றதொரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம் அவர் அறிவுரைகளை வழங்குகிறார்.
தேசியக் கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய முடியாது! அமைச்சர் பொன்முடி மிகத் திட்டவட்டம்!

சேட்டை விவகாரம்
மாணவர்கள் சேட்டை விவகாரத்தில் கண்டிப்பு வார்த்தைகளிலும் மென்மையை கடைப்பிடிக்கும் அதே வேளையில் அந்த மாணவர்கள் திருந்துவதற்கு நல்லதொரு வாய்ப்பையும் வழங்குகிறார். படிப்பிலும், விளையாட்டிலும், இதர திறமைகளிலும் சுட்டியாக கெட்டியாக உள்ள மாணவர்களை கண்டறிந்து ஊக்கம் அளித்து வருகிறார்.

பெண் குழந்தைகள்
பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு பிரச்சினை என்றால் இரு குழந்தைகளின் தந்தையாக என் மனம் வேதனை அடைகிறது என விம்முகிறார். இந்த நிலையில் தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். இதில் 3 சிறுவர்களும் அடங்குவர். இந்த சம்பவம் குறித்து ஒரு நபர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ்
இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டசபையில் பேசுகையில் தஞ்சாவூர் களிமேட்டில் அதிகாலை 3 மணியிலிருந்து 3.10 மணிக்குள் விபத்து நடந்தது. எனினும் காலை 5 மணிக்கே முதல்வர் என்னை தொடர்பு கொண்டார். அது போல் இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்க அதிகாரிகளும் முதல்வரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர் என்றால் எத்தகைய சுதந்திரம் அவர்களுக்கு கிடைத்துள்ளது என்பதை உணர முடிகிறது.

கண் கலங்கிய அமைச்சர்
11 பேரின் உடல்களையும் அரசு மருத்துவமனையில் பார்த்து அஞ்சலி செலுத்துங்கள், தனித்தனியாக ஒவ்வொரு வீடுகளுக்கும் வர வேண்டாம் என முதல்வரிடம் நான் தெரிவித்தேன். அதற்கு அவர் இல்லை 11 பேரது வீடுகளுக்கும் சென்றால்தான் என் மனம் ஓரளவாவது சமாதானம் அடையும் என்றார். 11 மாதங்களாக பல பள்ளி நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல மாலைகளை மாணவர்களுக்கு சூட்டியுள்ளேன். ஆனால் முதல்முறையாக நேற்று உயிரிழந்த 8ஆம் வகுப்பு மாணவனின் உடலுக்கு மாலை அணிவித்தேன், என கலங்கிய கண்களுடன் உருக்கமாகவே பேசினார்.