'ஹாட்ரிக்' வெற்றி வேட்பாளர்.. மீண்டும் ராயபுரம் தொகுதியில் போட்டி - அமைச்சர் டி.ஜெயக்குமார்
சென்னை: ராயபுரம் சட்டமன்ற தேர்தலில், அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுவதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருமாதம் கூட மீதமில்லை. கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதிகள் பங்கீடு குறித்தும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக முதற்கட்டமாக ஆறு பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகமும், சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதனும், நிலக்கோட்டை தனிதொகுதியில் எஸ். தேன்மொழியும் போட்டியிடுகின்றனர். இதில், ராயபுரத்தில் களம் காணும் வேட்பளார் ஜெயக்குமார் பயோ குறித்து இங்கே பார்க்கலாம்.
அமைச்சர் ஜெயக்குமாருக்கு மூன்று சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உண்டு. மூன்று சகோதரிகளில் ஒருவர் இறந்துவிட்டார். அதுபோல ஜெயக்குமாரின் முதல் தம்பி ராஜ்குமாரும் இறந்துவிட்டார். அவரது அப்பா, துரைராஜ், 1967-ல் தி.மு.க.வில் கவுன்சிலராக இருந்தவர்.
மாணவப் பருவத்தில் கம்யூனிஸ்ட் கொள்கையினால் ஈர்க்கப்பட்ட ஜெயக்குமார், சி.பி.எம் கட்சிக்காக சிறிது காலம் பணியாற்றினார். அ.தி.மு.க. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்தபோது ஜெயலலிதாவுடன் இணைந்தார். அதன்பிறகு 91-ல் ராயபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, மீன்வளத்துறை அமைச்சரானார். பிறகு சபாநாயகரான ஜெயக்குமார், மின்சாரம், சட்டத்துறை, நிதித்துறை எனப் பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார், இருக்கிறார்.
அ.தி.மு.க.வில் மீனவர் சமுதாயத்தில் இவர் மட்டும் எம்.எல்.ஏ. என்பதால் மீன்வளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
1991 - முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர் ஆன பின்பு, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார்.
2006 - மீண்டும் ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வானார்.
2011 - சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ராயபுரம் தொகுதியில் இருந்து தேர்வானார். அதே ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
2016 - தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர் மீன்வளத்துறை அமைச்சரானார்.
2017 - ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், 2017ஆம் ஆண்டு துவக்கத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் பிரிந்த போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த நிதி, திட்டம், ஊழியர், நிர்வாக சீர்திருத்தம் ஆகிய துறைகள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டது. பழனிசாமியின் பரிந்துரையின் பேரில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஜெயக்குமாருக்கு கூடுதலாக இந்த இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன.
பிறகு இ.பி.எஸ்.ஸுடன் இணக்கமானதால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதி, வீட்டுவசதி, கிராமப்புற வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற திட்டமிடல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவை ஒப்படைக்கப்பட்டது. தற்போது மீன்வளம், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார்.
ராயபுரம் தொகுதி
சென்னையில் உள்ள பழமையான சட்டமன்ற தொகுதிகளில் ராயபுரமும் ஒன்று. இந்த தொகுதியில் 1957, 1962-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் மாயாண்டி வெற்றி பெற்றார். 1967 மற்றும் 71ல் தி.மு.க. வேட்பாளர் வேதாச்சலம் வெற்றி பெற்றார்.
1977, 80, 84ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பி.பொன்னுரங்கம் தொடர் வெற்றி பெற்றார். 1989-ல் தி.மு.க. வேட்பாளர் ஆர்.மதிவாணன், 1991-ல் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமார், 1996-ல் மீண்டும் தி.மு.க. வேட்பாளர் ஆர்.மதிவாணன், 2001-ல் மீண்டும் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமார் என மாறி மாறி வெற்றி பெற்றனர். அதன்பிறகு, 2006, 2011, 2016 என தொடர்ந்து நடந்த தேர்தல்களில் ஹாட்ரிக் அடித்தார் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார்.
ராயபுரம் தொகுதியில் குடிநீர் பிரச்சனை ஆங்காங்கே உள்ளது. அதேபோல், சாலைகள் ஆக்கிரமிப்பு, மோசமான சாலைகள் போன்ற குறைகளும் உள்ளன. இந்த தொகுதியில் பெரும்பாலானோர் மீனவர்கள் தான். சுமார் 55 சதவிகிதம் பேர் வசிக்கின்றனர். அதேசமயம், நாடார், வன்னியர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களும் பரவலாக உள்ளனர் இருக்கின்றனர். எனினும், வெற்றியை தீர்மானிக்கும் மெஜாரிட்டி சக்தி மீனவ சமுதாயம் தான். களநிலவரப்படி, ராயபுரத்தில் வேட்பாளர் ஜெயக்குமார் இன்று பெரும் சக்தியாக உருவெடுத்து இருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.