இப்படியே பேசிக்கிட்ருந்தா.. “நல்லாருக்காது” - மதுரை ஆதீனத்திற்கு அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!
சென்னை : மதுரை ஆதீனம் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகிறார். சமீபத்தில் எழுந்த தருமபுர ஆதீன மட பட்டின பிரவேசம் விவகாரத்திலும் அரசை கடுமையாக விமர்சித்தார் மதுரை ஆதீனம்.
இதைத்தொடர்ந்து, மதுரை ஆதீனத்திற்கும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது.
அறநிலையத்துறையை கொள்ளைக் கூடாரம் என விமர்சித்த மதுரை ஆதீனம், தொடர்ந்து இப்படியே பேசி வந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆய்வு நடக்கும்..மடியிலே கனமில்லை என்றால் பயம் எதற்கு..கேட்ட சேகர்பாபு - வழிக்கு வந்த தீட்சிதர்கள்

மோதல் போக்கு
தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொடர்பாக மதுரை ஆதீனம் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அந்தப் பிரச்சனை சுமூகமாக முடிந்தாலும், அதன்பிறகு தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவையும், இந்து சமய அறநிலையத்துறையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார். இதனால், மதுரை ஆதீனத்திற்கும், தமிழக அரசு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

மோடியை சந்தித்தார்
தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்து சில நாட்களுக்கு முன் பேசிய மதுரை ஆதீனம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார்.

கடும் விமர்சனம்
நேற்று முன் தினம் பேசிய மதுரை ஆதீனம், "திராவிடம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கின்றனர். சர்ச் சொத்தில் அரசு தலையிடுவதில்லை, மசூதியின் சொத்தில் அரசு தலையிடுவதில்லை. ஆனால் நம்முடைய திருக்கோவில் சொத்துக்கள் அவர்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறி வருகிறது. அறநிலையத்துறை எனும் அறமில்லாத துறையை கலைத்துவிட வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் உண்டியலில் காசு போடக்கூடாது." எனக் கடுமையாகச் சாடினார்.

அவர் மட்டும்தான் இப்படி
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "ஆதீனங்கள் அரசுக்கு எதிராக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார் மதுரை ஆதீனம். அவர் ஒருவர்தான் இப்படிச் சொல்கிறார். யாரோ ஒருவர் அப்படி இருக்கிறார் என்பதற்காக எல்லா ஆதீனங்களையும், தீட்சிதர்களையும், ஜீயர்களையும் குறை சொல்வது ஏற்புடையது அல்ல. அனைவரும் முதல்வரின் பக்கம் தான் இருக்கிறார்கள். ஏதோ ஒரு ஆதீனம் சொல்வதைக் கேட்டு அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அரசியல்வாதி போல
மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டும், தன்னைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதற்காக இப்படி பேசிக்கொண்டிருக்கிறார். அரசியல்வாதியாக செயல்படுகிறார். முதல்வரின் வழிகாட்டுதலோடு நாங்கள் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்களும் எகிறி அடிக்க முடியும். ஆனால், அது நன்றாக இருக்காது என அமைதி காக்கிறோம்.

தக்க பதிலடி
மதுரை ஆதீன விவகாரத்தில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நாங்கள் பதுங்குவதை பயமாக கருதக்கூடாது. எங்களுக்கும் பாயத் தெரியும். மதுரை ஆதீனம் தொடர்ந்து அரசியல்வாதியைப் போல பேசிக் கொண்டிருப்பதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது. தொடர்ந்து அவர் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.