'நிலக்கரி பற்றாக்குறை ஏற்படாது.. மின்வெட்டிற்கு எல்லாம் நோ சான்ஸ்..' அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
சென்னை: தமிழ்நாட்டில் நிலக்கரி இருப்பை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், மாநிலத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் இதனால் மாநிலத்தில் மின்வெட்டு ஏற்படாது என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
என்ன தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மாசு ஏற்படுத்தாத முறையில் மின் உற்பத்தி ஆகியவை குறித்து நாம் பேசினாலும், தற்போதைய சூழலில் நாட்டின் சுமார் 60% மின் உற்பத்தி அனல் மின்நிலையங்களிலிருந்தே நமக்குக் கிடைக்கிறது.
இந்தச் சூழலில் நிலக்கரி சுரங்கங்கள் அருகே பெய்த மழை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை பல மடங்கு அதிகரித்தது ஆகியவற்றால் நாட்டில் நிலக்கரிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் திடீர் ஆய்வு.. தூய்மை பணியாளர்களுடன் டீ குடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

நிலக்கரி பற்றாக்குறை
இது குறித்து ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட அரசுகள் ஏற்கனவே மத்திய அரசிடம் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன. மேலும், போதிய அளவில் நிலக்கரியை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின. ஏற்கனவே, தற்போது மின்பற்றாக்குறை காரணமாக பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மின் பற்றாக்குறை தொடங்கிவிட்டது. இந்த நிலை மற்ற மாநிலங்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆலோசனை
உள் துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து மத்திய மின்சார துறை அமைச்சருடன் நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார். மின்வெட்டு பெரியளவில் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடசென்னை அனல்மின் நிலையத்தில் அடுத்த 2 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. அதேபோல மேட்டூர் அனல் மின் நிலைய முதல் அலகில் ஒரு நாளைக்குத் தேவையான நிலக்கரியும், 2ஆம் அலகில் 6 நாட்களுக்கும் தேவையான நிலக்கரியும் மட்டுமே உள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் அடுத்த 2 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு
நிலைமையைச் சமாளிக்க இந்த மாதம் நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்க உள்ளதாகவும் அடுத்து வரும் நாட்களில் 5 லட்சம் டன் நிலக்கரி தமிழகத்திற்கு வர உள்ளதாகவும் அரசு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இது குறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

4 நாட்கள்
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "நமது மாநிலத்திற்குத் தினசரி 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. இப்போது தினசரி 60,000 டன் நிலக்கரி வருகிறது. நிலக்கரி சுரங்கங்களை ஒட்டிய மாநிலம் என்ற அடிப்படையில் 6 நாட்களுக்கு நிலக்கரியை இருப்பு வைத்துக்கொள்ள நமக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இருப்பினும், இப்போது நம்மிடம் 4 நாட்களுக்கு தேவையான 2.40 லட்சம் டன் நிலக்கரி உள்ளது.

வாய்ப்பில்லை
நாம் தனியார் அனல் மின் நிலையங்களிலிருந்து 2,830 மெகாவாட் மின்சாரம் வாங்கி வந்தோம். இப்போது நிலக்கரி பற்றாக்குறையால் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறும் மின்சாரம் 1,300 மெகாவாட்டாக குறைந்துள்ளது. இதில் பற்றாக்குறையாக உள்ள 1500 மெகாவாட் தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் ஈடு செய்யப்படும். அனல்மின் நிலையங்களில் 80% நிலக்கரியே பயன்படுத்தப்படுகிறது. வெறும் 20% மட்டுமே இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இப்போது மத்திய தொகுப்பில் இருந்து நாம் தினசரி 3,500 முதல் 4,000 மெகாவாட் மின்சாரத்தைப் பெற்று வருகிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.