சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்- ஸ்டாலின் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 கல்வியாண்டிலிருந்து பொதுத் தேர்வு நடைபெறும்" என்று அவசர ஆணை பிறப்பித்திருக்கும் அதிமுக அரசுக்கு, தி.மு.கழகத்தின் சார்பில், கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

MK Stalin condemns on Public Exams for Classes 5,8

கல்வி கற்பதற்கு பள்ளிக்குள் நுழைவதிலிருந்து - தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளியேறும் வரை, விதவிதமான பொதுத்தேர்வுகள் மூலம் மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தையும், நெருக்கடியையும் இந்த உத்தரவு உருவாக்கும் என்ற அடிப்படை உண்மையை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் உணராதது கவலையளிக்கிறது.

"இப்போது மட்டும் அல்ல. எப்போதுமே 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது" என்று கூறிவந்த அமைச்சர் செங்கோட்டையன் திடீரென்று, "மத்திய அரசின் முடிவுப்படியே இந்த பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும்" என்றெல்லாம் வக்காலத்து வாங்கி, அர்த்தமற்ற கருத்தை முன்வைப்பது ஏன்?

இந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது!இந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது!

மத்திய பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கி மாநில அரசின் கல்வி உரிமையைத் தாரைவார்ப்பது ஏன்? மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படுவதற்கு முன்பே, அதற்கு அதிமுக அரசு தமிழகத்தில் இந்த அறிவிப்பின் மூலம் கால்கோள் விழா நடத்தியிருப்பது ஏன்? எதற்காக?

"குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்" திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 1.4.2010-ல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. 'அனைவரும் கல்வி கற்க வேண்டும். கல்வியறிவு பெற்றால் ஏற்றத் தாழ்வுகள் அடியோடு விலகும். சமூகத்தில் விடியலும் விழிப்புணர்வும் தோன்றும்' என்ற உன்னத நோக்கத்தில் தி.மு.க.,வும் இடம்பெற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு - இந்தச் சட்டம் கிராமப்புற மற்றும் நகர்புறத்தில் உள்ள ஏழை எளிய, நடுத்தர மாணவர்கள் கல்வி கற்பதற்கு அரிய பெரிய வாய்ப்பாக அமைந்தது.

தொய்வின்றி இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே கல்வி கற்காதோர் சதவீதம் 'பூஜ்யம் ' ஆகியிருக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கும்.

ஆனால், அடித்தட்டு மக்களுக்கு அப்படி ஏதும் நன்மை ஏற்பட்டு விடக்கூடாது என்ற வஞ்சக எண்ணம் கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு, 'இலவச மற்றும் கட்டாயக் கல்வி' சட்டத்தின் அடிப்படை நோக்கங்களை சிதறடிக்கும் விதத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது.

இச்சட்டத்தின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையே பெரும் கேள்விக்குறியாகும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் அதிமுக அரசு அறிவித்துள்ள இந்தப் பொதுத் தேர்வு 'இனிமேல் ஆரம்பப் பள்ளி தேர்வுகளை எழுதவும் கோச்சிங் சென்டர்கள் தேவை' என்ற தாழ்நிலையை உருவாக்கி - ஆரம்பக் கல்வியையும் வணிகமயமாக்கி விடும் பேராபத்தைத் தோற்றுவித்து - ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வியறிவையும் எட்டாக் கனியாக்கி விடும்!

'கல்விச் சீர்திருத்தம்' என்ற பெயரில், மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்து, அதன் மூலம் அவர்களை 'பெயில்' ஆக்கி - ஆரம்பக் கல்வி முடிக்கவே பல ஆண்டுகள் ஆகிவிடும் சூழ்நிலையையும், அவர்கள் படிப்பதையே வெறுத்து அந்தக் கல்வியை விட்டு விலகி, குலக் கல்விக்குத் திருப்பி அனுப்பும் தந்திரத்தையும் மத்திய - மாநில அரசுகள் கூட்டாகக் கடைப்பிடிக்கின்றன.

இது அனைவருக்கும் கல்வி என்ற முற்போக்கு எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

ஏற்கனவே 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இருக்கும் நிலையில், இப்போது 5, 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தையும் விரக்தியையும் உருவாக்கி, அவர்களின் உடல் நலத்தையும் கெடுத்து, சமூக நீதியின் வேரில் வெந்நீர் ஊற்றி, சமுதாய முன்னேற்றத்தை ஒரு நூறாண்டு பின்னோக்கி இழுத்துச் செல்லும் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும்.

இப்படிப்பட்ட முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையனும் எடுத்து, மாணவர்களின் எதிர்காலத்துடன் விபரீதமான விளையாட்டை நடத்தியிருக்கிறார்கள்.

ஆகவே, 'மாநிலப் பாடத்திட்டத்தினைப் பின்பற்றிச் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு' என்ற 13.9.2019 தேதியிட்ட அரசு ஆணையை அதிமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

'சீர்திருத்தம்' என்ற பெயரில் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் கல்வி கனவில் சீர்கேடு உண்டாக்கிச் சிதறடிக்கும் எந்த முடிவினையும் பெற்றோர், ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசிக்காமல் - அவசரக் கோலத்தில் எடுத்து மாணவர் சமுதாயத்தின் மீது திணித்திட வேண்டாம்; அவர்களுடைய எதிர்காலத்தைப் பாழாக்கிட வேண்டாம் என்று அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK President MK Stalin has condemned that Tamilnadu to hold the public exams for the classes 5,8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X