டெல்டா பயணத்தில் ஸ்டாலின் கண்டெடுத்த பொக்கிஷம்.. ”தாத்தா முத்துவேலரின் கையெழுத்து” ஒரே குஷி..!
சென்னை : முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அரசு அலுவலகங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.
டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு குறித்து கட்சித் தொண்டர்களுக்கு மடல் வரைந்துள்ளார் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின்.
ஜம்மு காஷ்மீர்: ஒரே மாதத்தில் 7-வது படுகொலை- பண்டிட் சமூக ஆசிரியையை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்!
அந்த மடலில், தனது தாத்தா முத்துவேலரின் கையெழுத்தோடு கிடைத்த ஆவணம் பற்றி நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்.

ஸ்டாலினின் டெல்டா பயணம்
மே 30ஆம் தேதி சென்னையில் இருந்து கிளம்பி திருச்சி வழியாக டெல்டா பகுதிக்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். திருச்சியில் மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தி, பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். திருச்சியிலேயே மதிய உணவை முடித்துவிட்டு பின்னர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்யப் புறப்பட்டார். இரண்டு நாட்களாக டெல்டா பயணத்தை முடித்துவிட்டு சென்னை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தற்போது தலைமை செயலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.

பயணம் பற்றி கடிதம்
இந்நிலையில், தனது டெல்டா பயணம் பற்றி கழக உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் ஸ்டாலின். அதில், தஞ்சாவூரில் பயண வழியில் தன்னைச் சந்தித்த கட்சித் தொண்டர் வழங்கிய காகிதம் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்தக் காகிதத்தில் முதல்வர் ஸ்டாலினின் தாத்தா முத்துவேலரின் கையெழுத்து இருந்ததே இத்தனைக்கும் காரணம்.

அரிய ஆவணம்
முதல்வர் ஸ்டாலின் அந்த மடலில், "பயண வழியில் முதலில் தஞ்சாவூரில் வரவேற்பு அளித்தனர். அப்போது, வா.வீரசேகரன் என்ற கழகத் தோழர் என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். அது என்னவென்று பார்த்தபோதுதான், அது வெறும் காகிதமல்ல, அரிய ஆவணம் என்பது தெரிந்தது. அது என்னவென்றால், திருவாரூர் கமலாம்பிகா நகரக் கூட்டுறவுச் சங்கத்தில் நமது தலைவர் கருணாநிதியின் தந்தையும் எனது தாத்தாவுமான முத்துவேலர் தனக்கிருந்த பங்குகளை, தன் வயது மூப்பின் காரணமாக, நம் தலைவருக்கு மாற்றித் தரக்கோரிய ஆவணம் அது.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக 1946-இல், கூட்டுறவு வங்கியின் ஆவணத்தில் தாத்தா முத்துவேலரின் கையெழுத்தையும் தலைவர் கருணாநிதியின் ஆங்கில எழுத்துகளில் அமைந்த கையெழுத்தையும் பார்த்தபோது பரவசமாக இருந்தது." என உணர்ச்சிகரமாக குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழக முதல்வராகப் பதவியேற்றபோதே, 'முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.." எனக் கூறித்தான் பதவியேற்றுக் கொண்டார் ஸ்டாலின். இந்நிலையில், தனது தாத்தா பற்றிய நினைவுகளை இந்த டெல்டா பயணத்தில் மீட்டெடுத்துக் கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.