சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னிடம் இருப்பது துண்டுசீட்டல்ல.. அரசின் லட்சணத்தை கூறும் துருப்புச்சீட்டு மு.க.ஸ்டாலின் பதிலடி!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என மக்களிடம் எடுத்து கூறுமாறு திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தன் கையில் இருப்பது துண்டுச் சீட்டல்ல. தமிழக அரசின் அவலட்சணங்களை மக்களிடம் எடுத்துரைக்கும் துருப்புச் சீட்டு என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாப்பம்மாளுக்கு நன்றி

பாப்பம்மாளுக்கு நன்றி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. மக்களால் - மக்களுக்காக - மக்களுடைய மாபெரும் இயக்கமாக, ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுகாலமாக வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. குடியரசு நாளினையொட்டி அறிவிக்கப்பட்ட விருதுகளில் பத்மஸ்ரீ விருதாளர்களில் ஒருவராக 103 வயதிலும் வேளாண் பணிகளில் ஈடுபடும் ஈரோட்டைச் சேர்ந்த மூத்த பெண்மணி பாப்பம்மாள் அம்மையாருக்கு கிடைத்திருப்பது, தமிழர்களாகிய அனைவருக்கும் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரும் செய்தி. அம்மையார் பாப்பம்மாள், தலைவர் கலைஞர் மீதும், என் மீதும், தனிப்பட்ட அன்பும் பாசமும் கொண்டவர். திமுக பேரணியிலும் பதாகை ஏந்தி, தள்ளாத வயதிலும், தளராத உள்ளத்துடன் நடைபோட்டவர். அம்மையாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன்.

நாடே அதிர்ச்சி

நாடே அதிர்ச்சி

ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் ஆயத்தமாகிவிட்ட நிலையில், அவர்களின் ஒரே நம்பிக்கைக்குரியதாக இருப்பது, தி.மு.க. தலைமையிலான சிறப்பான கூட்டணிதான். காரணம், ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கின்ற இயக்கம் இது. ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களின் சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நேரத்தில், அவர்களுக்காக நாட்டின் தென்கோடியிலிருந்து அழுத்தமாக ஒலித்த குரல், தி.மு.க. குரல். தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடத்திய போராட்டத்துக்கு, தார்மீக ஆதரவு வழங்கிய இயக்கம் தி.மு.க. குடியரசு நாளில் டிராக்டர் பேரணியை முன்னெடுத்த விவசாயிகள் மீது மத்திய அரசு உள்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்து அதிர்ந்து போயிருக்கிறது.

காவல்துறை மீது குற்றம்

காவல்துறை மீது குற்றம்

விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள், அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அவற்றைத் திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் குரல் ஒலிக்கிறது. விவசாயிகள் அமைதி வழியில் போராட்டம் நடத்தியும், பேச்சுவார்த்தை என்ற பெயரில் தீர்வு ஏதும் காணாமல் இழுத்தடித்து நாடகம் நடத்தியது மத்திய அரசு. அதன் ஒற்றைப் பார்வையும், இறுமாப்பும்தான், குடியரசு நாளில் தலைநகரில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கு காரணமாகும். தமிழகத்திலும் நடைபெற்ற விவசாயிகளின் பேரணிகளை முடக்கும் வகையில் அ.தி.மு.க. அரசின் காவல்துறை கண்மூடித்தனமாகச் செயல்பட்டது.

ஒன்றிணைவோம் வா வெற்றி

ஒன்றிணைவோம் வா வெற்றி

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும். மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். பேரிடர் நேரத்திலும் மக்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் "ஒன்றிணைவோம் வா" என கொரோனா பேரிடர் காலத்தில் உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் துணை நின்றது. அண்மையில், தமிழகத்தின் 16 ஆயிரத்து 500 ஊராட்சி மற்றும் வார்டுகளில் மக்களின் பெருந்திரளான பங்கேற்புடன் 'மக்கள் கிராம சபைக் கூட்டங்களை' நடத்தி, அவர்களின் குறைகளைச் செவிமடுத்த இயக்கம்
இது.

எடப்பாடி மக்களே சாட்சி

எடப்பாடி மக்களே சாட்சி

குடியரசு நாளில் நிறைவேற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையான கிராம சபைக் கூட்டத்தை நடத்த திராணியற்ற அ.தி.மு.க. அரசு, கொரோனாவைக் காரணம் காட்டி, நீதிமன்றத்தின் கேள்விகளிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது. இந்த லட்சணத்தில், "மு.க.ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் என்னாயிற்று?" என்று கேட்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. அவருடைய எடப்பாடி தொகுதி மக்களே, குவியல் குவியலாக தங்கள் குறைகளை, மனுக்களாக தி.மு.க நடத்திய மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் வழங்கியதுடன், 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர். இந்த அரசின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதற்கும், தி.மு.க. மீது எந்தளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்கும், இதைவிட வேறு சான்று தேவையில்லை.

இது துருப்பு சீட்டு

இது துருப்பு சீட்டு

ஆளுந்தரப்பினரைத் திரட்டி ஊர் ஊராகப் பரப்புரை செய்யும் முதலமைச்சர் பழனிசாமி, கிராம சபைக் கூட்டம் என்றால் மட்டும் கொரோனாவைக் காரணம் காட்டி தடை போடுகிறார். மக்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாதே! அவர்களுடைய பாதையே ஒருவழிப் பாதைதானே! இதில், மு.க.ஸ்டாலின் துண்டுச் சீட்டு இல்லாமல் என்னுடன் நேருக்கு நேர் வாதிட முடியுமா என சவடால் விடுகிறார். என் கையில் இருப்பது துண்டுச் சீட்டல்ல. இந்த ஆட்சியின் அவலட்சணங்களை மக்களிடம் எடுத்துரைக்கும் துருப்புச் சீட்டு.

சீர்கேடு ஆட்சி

சீர்கேடு ஆட்சி

நாளொரு ஊழலும் பொழுதொரு கொள்ளையுமே அவர்களின் ஒரே நிர்வாகம் என்பதும், நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம் ஆற்றில் பழனிசாமி ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து விழுந்து வினோத்குமார் என்ற இளைஞரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே, 25 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தளவனூர் தடுப்பணை கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், ஒரு மாத கால அளவிலேயே தகர்ந்து விழுந்திருக்கிறது. முதலமைச்சர் பழனிசாமியின் சம்பந்திக்கு டெண்டர் தரப்பட்டு கட்டப்பட்ட தடுப்பணை இது. அரசு கஜானா பணத்தை தனது உறவினர்களுக்கு - பினாமிகளுக்கு டெண்டர் என்ற பெயரில் அள்ளிக்கொடுத்து, ஆட்சியின் சீர்கேடுகளை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன இத்தகைய தடுப்பணைகள்.

உண்மை தெரியும்

உண்மை தெரியும்

தடுப்பணை இடிந்து விழுந்ததற்காக, சில அதிகாரிகள் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுத்து, கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது தமிழக அரசு. பணம் சம்பாதிக்க பழனிசாமியின் சொந்தங்கள் - பலிகடாக்கள் அதிகாரிகளா? இதையெல்லாம் மறைக்கத்தான், தி.மு.க.வை வசை பாடுகிறார் பழனிசாமி. தன் முகத்தில் கரி பூசியிருப்பதை மறைப்பதற்காக, அடுத்தவர் முதுகில் அழுக்கு இருக்கிறது என்று சொல்வது போல இருக்கிறது பழனிசாமியின் பொய்ப் பிரச்சாரம். ஊழலுக்காக ஒரு முறை அல்ல, இரண்டு முறை நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு, பதவி பறிக்கப்பட்டவர் யார் என்பதை பழனிசாமி கொஞ்சம் குனிந்து பார்த்தால் தெரிந்துவிடும். அவர் சட்டைப்பாக்கெட்டில் வைத்திருக்கும் படத்தைப் பார்த்தால் ஊழலுக்காக பதவி பறிக்கப்பட்டது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என்ற உண்மை தெரியும்.

மக்களின் குறை தீர்க்கபப்டும்

மக்களின் குறை தீர்க்கபப்டும்

முதலமைச்சர் பழனிசாமி உளுந்தூர்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் மக்களின் குறைகளைத் தீரக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், தமிழகம் முழுவதும் இதுவரை 5.27 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் கூறிவிட்டு, ஸ்டாலினின் கிராமசபைக் கூட்டங்களைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் தன்னுடைய பதற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.அ.தி.மு.க ஆட்சிதான் தமிழ்நாட்டின் மிகப் பெரிய குறை - கறை என்கிறபோது அந்த ஆட்சியில் மக்களின் குறைகளுக்கு எப்படி தீர்வு கிடைக்கும்? அதனால்தான் தி.மு.க. நடத்தும் கிராமசபைக் கூட்டங்கள், "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என ஒவ்வொரு நிகழ்விலும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வந்து மனுக்களை அளிக்கிறார்கள். அதன் தொடர்ச்சிதான், நேற்று அறிவிக்கப்பட்ட "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்கிற மக்களின் குறை தீர்க்கும் முன்னெடுப்பும்.

உங்களிடம் பொறுப்பு

உங்களிடம் பொறுப்பு

2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கழக ஆட்சி அமைந்ததும், 100 நாட்களில் மக்களின் அனைத்து கோரிக்கை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென தனித்துறை உருவாக்கப்படும் என்ற உறுதியினை நான் வழங்கியிருக்கிறேன். மக்களின் மனுக்களை நேரில் பெறுவதற்காக 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் ஜனவரி 29 முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறேன். கழக நிர்வாக மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் நடைபெறும் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவரவர் கிராமங்கள் - வார்டுகளில் இருந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து மனுக்களை அளிப்பதற்கேற்ற வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய பெரும்பொறுப்பு உங்களின் கைகளில்தான் உள்ளது.

மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்

மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ்கள், பட்டா, ஓய்வூதியம், முதியோர் உதவித் தொகை போன்றவை உடனடியாக கிடைத்திட ஆவன செய்யப்படும் என்ற உறுதிமொழியினைத் துண்டறிக்கைகள் வாயிலாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது உங்களின் கடமை. அதற்கான படிவங்களும் அச்சிடப்பட்டு வழங்கப்படும். குறைகளை எடுத்துச் சொல்ல வரும் மக்களை, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து, அங்கே விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் தன்னார்வலர்களின் உதவியுடன் அவற்றை நிரப்பி, அவர்களிடமிருந்து அதனை நேரில் பெற்று, அவர்கள் முன்னிலையிலேயே அதனை ஒரு பெட்டியில் போட்டு, 'சீல்' வைத்து, என் பொறுப்பில் வைத்துக் கொள்வேன் என்ற உறுதியினையும் வழங்கியிருக்கிறேன். கழக ஆட்சி அமைந்ததும், அந்தப் பெட்டிகள் திறக்கப்பட்டு, மனுக்களில் உள்ள கோரிக்கைகள் 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும்.

அர்ப்பணிப்பு தேவை

அர்ப்பணிப்பு தேவை

நம்மை நம்புகிற தமிழக மக்களுக்கு நாம் உண்மையாகவும் உறுதுணையாகவும் இருக்கிறோம் என்பதே இந்த செயல்திட்டத்தின் நோக்கம். மனுக்களை அளிக்க வருகின்ற மக்களுக்குத் தேவையான இடவசதி, கொரோனா காலத்தை மனதில் கொண்டு போதிய இடைவெளி, காற்றோட்டம், குடிநீர் வசதி, முதியவர்கள் - பெண்கள் -மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சிரமமின்றி மனு தருவதற்கேற்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்திலும் கவனம் செலுத்திட வேண்டும். கழக அரசு நிறைவேற்றவுள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, தேர்தல் களத்தில் நூற்றுக்கு நூறு சதவீத அளவிலான வெற்றியாக அமையும். "மிஷன் 200" என்கிற இலக்கையும் தாண்டும். வெற்றி விளைந்திருக்கிறது. அறுவடை நாள் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்!

English summary
MK Stalin has said that Being in her hand is not a slip of paper, it is a trump card to expose the misdeeds of the Tamil Nadu government to the people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X